டெல்லியில் உள்ள டாப்ளிகி ஜமாத் என்கிற மத நிறுவனத்தை மூடி சீல் செய்துள்ளது மத்திய அரசு.
சென்ற மார்ச் 9 -10 ஆம் தேதிகளில் மலேசியா, சவூதி அரேபியா, இந்தோனேசியாவிலிருந்து 150 வெளிநாட்டினர் இங்கு வந்ததாகவும் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்தவர்கள் சேர்ந்து மொத்தம் 2000 பேர் இஸ்லாமிய மாநாடு மற்றும் கூட்டுத் தொழுகைகள் நடத்தியதாகவும அரசு கூறி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மார்க்கஸ் என்கிற டாப்ளிகி ஜமாத்துக்கு சொந்தமான தங்குமிடத்தையும் மூடி சீல் செய்துள்ளது அரசு. காரணம் ?
வெளிநாட்டிலிருந்து வந்த விருந்தினர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருந்திருக்கக்கூடும் எனவும் அவர்களிடமிருந்து சமூகத் தொற்றாக மாநாட்டிற்கு வந்திருந்த இரண்டாயிரம் பேரில் பலருக்கும் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றும் அரசு தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பலர் உள்ளனர்.
மார்ச் 17 ஆம் தேதி இந்தோனேசியாவைச் சார்ந்த வெளிநாட்டவர் ஒருவர் சிறுநீரகப் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா இல்லை. ஆனால் அவருடன் டெல்லியில் நிஜாமுதீனிலிருந்து கிளம்பி வந்த 7 பேர் இந்த இஸ்லாமிய மத மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் கலந்து கொண்டிருப்பதால் அவர்கள் மூலம் கொரோனா தொற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் இதில் கலந்துகொண்ட 2 ஆயிரம் பேரையும் தொடர்பு கொண்டு தனிமைப்படுத்த அரசு கருதியுள்ளது. இதில் 861 பேரின் தொடர்புகள் கிடைத்துள்ளன. மீதி உள்ளவர்களின் தொடர்புகள் கிடைக்காததால் தொலைக்காட்சி வழியே அவர்கள் அரசை தொடர்பு கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யதார்த்த நிலை இப்படியிருக்க, சங்கி சார்பு ஊடகங்களும், இணைய தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்துக்களின் மேல் கொரோனா வைரஸை வெளிநாட்டிலிருந்து திட்டமிட்டு கொண்டு வந்து பரப்பி வருவதாக மிக கேவலமாகப் பேசியும், பயமுறுத்தியும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில் இது போன்ற பல செய்திகள், படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ஏதோ இஸ்லாமியர்கள் கொரோனாவை உருவாக்கி வந்து பரப்பி விடுகிறார்கள் என்பது போல பரப்பப்படும் செய்திகளை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று கூறியுள்ளார்.
மார்ச் 24 ஆம் தேதி தான் இந்தியாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதற்கு ஒருவாரம் முன்பு தான் கொரோனா பரவல் பற்றிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி உலகே கொரோனா பற்றிய பரபரப்பில் இருந்த போது தான் மோடியும் ட்ரம்ப்பும் குஜராத் அலகாபாத்தில் சந்தித்துக் கொண்டார்கள் 70 ஆயிரம் பேர் அங்கே கூடியிருந்தார்கள்.
மார்ச் 10 ஆம் தேதிக்குப் பின் மஹாரஷ்டிராவில் சாய்பாபா கோவிலில் பெரும் திரளாக மக்கள் கலந்துகொண்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் சௌகான் தலைமையிலான அரசு அதற்கு சில நாட்களுக்குப் பின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சூழ பதவியேற்றது.
மோடி ஊரடங்கை அறிவித்ததற்கு அடுத்த நாள் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ராமர் கோவில் தொடர்பான சடங்குகளை பெரும் மக்கள் திரள நடத்தினார்.
கொரோனா விஷயத்தில் மோடி அரசு அன்றாடம் காய்ச்சி மக்களை , வடமாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்துள்ள தொழிலாளர்களை ஆயிரக்கணக்கில் உணவுக்கு வழியின்றி பலநூறு கிலோமீட்டர்கள் நடந்தே செல்ல வைத்துள்ள விஷயத்தை திசை திருப்பவே வழக்கம் போல இது போன்ற இஸ்லாமிய ஜிகாத் என்கிற விஷயங்களை கையில் எடுக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சன் டிவி உள்ளிட்ட பல நியூஸ் சேனல்களும் இவ்விஷயத்தை இஸ்லாமியர் மேல் வெறுப்பு தோன்றும் விதமாக ஒளிபரப்பி வருகின்றன.