இந்த உலகம் என்பது என்ன?
கோடானு கோடி அறைகளின் மேன்ஷன்
எல்லா அறையிலும் விளக்குகள் எரிகின்றன
இந்த மேன்ஷனுக்கு வெளியே
உலகம் என்ற ஒன்றில்லை
வாழ்க்கை என்ற ஒன்றில்லை
28.4.2020
இரவு 9.15
மனுஷ்ய புத்திரன்
————————————————————————————–
பொதுவாக எனக்கு
யார்வீட்டிற்கும் செல்லும்
பழக்கம் கிடையாது
அப்படிச் செல்லும்போது
அந்த வீட்டின் ஒழுங்குகளை
கண்ணுக்குத் தெரியாமல்
கலைத்துவிடுகிறேன் என
சங்கடமாக இருக்கும்
நண்பர்களை எப்போதும்
உணவகங்களிலோ
‘பார்’களிலோதான் சந்திப்பேன்
அவர்களும் அப்போதுதான் வனத்தில் பிடிபட்ட
ஒரு கரடியை வீட்டிற்குகொண்டு செல்லும்
சிரமங்கள் ஏதும் இல்லாமல்
சியர்ஸ் சொல்வார்கள்
இப்போது இந்த உலகில்
எல்லாம் மாறிவிட்டது
எல்லாம் முடிந்தபிறகு
நான் உங்கள் வீடுகளுக்கு வர விரும்புகிறேன்
ஒரு குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகள்
எப்படி தம்மை தவமைத்துக்கொள்கின்றன
என்பதைக்காண
மேலும் அந்த வீடுகளில்
நீங்கள் சிறிய அறைகளில்
நீண்ட காலத்தை எப்படிக் கழித்திருப்பீர்கள்
என்பதை அறிய
எல்லாவற்றையும்விட
நீங்கள் என்பது நீங்கள் அல்ல
நான் என்பது நான் அல்ல
அவை உண்மையில் வீடுகள் என்பதை
இப்போதுதான் அறிந்துகொண்டேன்
வீடுகள் என்பவை
நம் உடல்கள் என்பதையும்கூட
28.4.2020
இரவு 9.03
மனுஷ்ய புத்திரன்