#I_Stand_With_Jothimani

நண்பர்களுக்கு வணக்கம்.

இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.

புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாகக் களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை, வறுமையை, கண்ணீரை, வேதனையை, வலியைப் பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்றுக் கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாகப் பதிவு செய்து வருகிறேன். என்னை, நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் வெளியேறினேன்.

திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க் கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.

இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani
லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது.

என்போன்ற பெண்கள்
முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ” கொண்ட பாரதியின் கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.

பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்ச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே எழுதியுள்ளார். )

ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும்.

அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,50,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள்.

இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.
இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.

இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.

நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு நிற்கும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மன்மார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன்

அன்புடன்

செ.ஜோதிமணி
நாடாளுமன்ற உறுப்பினர்,
கரூர்

#JothimaniChennimalai

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.