பொன்மகள் வந்தாள் – தமிழ் – 2020 OTT – Amazon prime
29 வெளியீடுன்னு சொல்லிட்டு ஒரு நாள் முன்னவே வந்தது ஏன்னு புரியல..
மிகவும் அடங்கிய சூழலில் எங்கும் வெளியில்செல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பில் அரதப் பழைய படங்களையெல்லாம் தூசு தட்டி அமேசான், netflix, ஜீ5, youtube னு பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிய படங்களை நேரடியாக OTT களில் வெளியிடுவது சற்றே சந்தோசம் தருகிறது.
அவ்வாறு தேவையற்ற பேச்சுக்களைத் தாண்டி வந்துள்ள படம் தான் பொன்மகள் வந்தாள்.அழுத்தமான குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை முன்வைத்து வந்துள்ள ஒரு கதை. மூன்று கொலைகளை செய்து, போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை, 15 வருடங்கள் கழித்து மறுவிசாரணைக்கு எடுக்கும் நாயகி ஜோதிகா.
மிக அழகாக கையாண்ட திரைக்கதை. இடையில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என தேர்ந்த நடிகர் பட்டாளம் வேறு.
நடக்கும் குழந்தை பாலியல் கொடுமைகளில் உலகளவில் இந்தியா 7 வது இடமும், இந்தியாவில் தமிழ்நாடு 3 வது இடமும், மேலும் 166000 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை நிலுவை வழக்குகளும் உள்ளனவாம், அதில் 94% மேல் குற்றவாளிகள் சொந்தபந்தமும், நபர்களும், அக்கம் பக்கத்தினரும் தானாம். கேட்கவே மூச்சு முட்டுதுல்ல. ஆனால் இதான் நிலமை, உண்மை.குறிப்பாக சில வசனங்கள் பொளேர் பொளேரென அறைந்தது போல இருந்தது,
“நாம அவமானம்னு நினைக்கிற சின்ன உண்மைகளை மறைக்கிறதால தான் நிறையா கெட்டவங்க நல்லவங்களா ஆகிடுறங்க,
நல்லா உங்க வீட்டுக் குழந்தைகள் கிட்ட கேட்டுப் பாருங்க, ஏதோ வகையில் அவங்களை யாராச்சும் ஒரு முறையேனும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருப்பார்கள்”போன்ற வசனங்கள் கொஞ்சம் கலக்கத்தைத் தான் தருகிறது.
குழந்தைகள்மீதான பாலியல் வன்கொடுமை (child abuse) க்கு எதிரான உரத்த குரலாக ஓங்கி ஒலிக்கின்றாள் இந்த பொன்மகள் “வெண்பா”, ஆம் ஜோதிகாவின் பெயர் தான்.
ஒரு சில சுவாரசியமான விஷயங்களைப் பேசினால் படத்தின் முழுக்கதையை உடைத்தாற் போல ஆகிவிடும். ஜோதிகா தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் காட்சி பிரமாதம். எதிர்பாராத ஒன்று. மேலும் இறுதியில் 2 அழகான திருப்பங்கள்.
நீதிமன்றக் காட்சிகளே அதிகம் என்பதால் இன்னும் சற்று கார சாரமான வசனங்களை வைத்திருக்கலாம். அதில் சற்று தொய்வு. குழந்தைகளுடன் பார்ப்பதில் தப்பில்லை.
கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.மையக்கரு – குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தான் குரல் குடுக்க வேண்டுமென்று அர்த்தமில்லை, யார் வேணாலும் கொடுக்கலாம்.
கார்த்திக் கண்ணன் – 29-05-20