வைரமுத்துவின் ஆசி இன்றியே தனித்து களம் இறங்கிய அவரது வாரிசுகளில் ’லிரிக்ஸ் இஞ்ஜினியர்’ மதன் கார்க்கி பாடல்கள், வசனம் என்று தமிழ்சினிமாவில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்து விட்டாலும், கபிலனால் அவ்வளவு சுலபமாக கரையேற முடியவில்லை.
சரி இனியும் வறட்டு கவுரம் பார்த்தால் துட்டு பாக்க முடியாது என்று முடிவுசெய்தவர், முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்தார்.
முன்னணி என்கிறபோது ‘இளைய’ராஜா யுவனை விடமுடியுமா? அப்பாக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஏன் பிள்ளைகளைப்பிரிக்கவேண்டும் என்ற நினைப்பில், யுவனுக்கு போனைப்போட, யுவனோ, ‘’ உடனே கிளம்பி வா. விஷ்ணுவர்த்தன் டைரக்ஷன்ல அஜீத் சார் நடிக்கிற படத்துக்கு கம்போஸிங்க்ல இருக்கேன். நீயும் ஒரு பாட்டு எழுதலாம்’ என்று சுடச்சுட வாய்ப்பு வழங்கினாராம்.
அந்த திடீர் சந்திப்பில் நெகிழ்ந்துபோன இருவரும், தங்கள் அப்பாக்கள் காம்பினேஷன் கொடி பறந்த தினங்களில், சின்னஞ்சிறுவர்களாய், ரெகார்டிங் தியேட்டரில் விளையாடித்திரிந்த பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டு பரவசமடைந்தார்களாம்.
இந்த கூட்டணியோட தொடக்கம் குதூகலமா அமைய ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, யுவனே கபிலனே’ ஒரு மறக்க முடியாத பாட்டா போடுங்க பாஸ்.