19/06/20. மருதையன்.
பக்கத்து வீட்டுக் கோழி வேலி தாண்டி நம் விட்டுக் கூரையில் வந்து உட்கார்ந்து விட்டால், அதன் காரணமாகவே உடனே சண்டை வந்து விடுவதில்லை. புராண காலத்து மன்னர்கள், தமது அதிகார எல்லையை நிலைநாட்டிக் கொள்ளும் முகமாக அசுவமேதக் குதிரையை அவிழ்த்து விட்டதைப் போல, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் முன்னோட்டமாகத்தான் பக்கத்துவீட்டுக்காரன் கோழியை அனுப்பி வைத்திருக்கிறான் என்று சந்தேகிக்க வேண்டுமானால், அதற்கு வேறு முகாந்திரம் தேவைப்படுகிறது.
இரு வீட்டுக்காரர்களுக்கு இடையில் வேறு பல காரணங்களுக்காக நிலவி வரும் பகைமையின் ஒரு வெளிப்பாடுதான் கோழி பிரச்சனை. உறவு சுமுகமாக இருக்கும் பட்சத்தில் கோழி எல்லை தாண்டிய நடவடிக்கையை ஒரு பிரச்சனையாக இரு வீட்டாரும் கருதப் போவதில்லை.
இந்திய சீன எல்லை மோதல் விவகாரமும் அத்தகையதுதான். ஒரு அதிகாரி உட்பட இந்திய சிப்பாய்கள் இருபது பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சீனா தனது தரப்பு இழப்பு குறித்து செய்தி எதுவும் வெளியிடவில்லை. சீன சிப்பாய்கள் 43 பேர் கொல்லப்பட்டனர் என்று இந்திய அரசு சொல்கிறது. இது எதிரிகளின் இழப்பை அதிகமாக காட்டுவதன் வாயிலாக நம்முடைய இழப்பை நியாயப்படுத்தும் முயற்சி என்று சாடுகிறார் முன்னாள் கர்னலும் பாதுகாப்புத்துறை செய்தியாளருமான அஜய் சுக்லா.
அவ்வப்போது எல்லையில் நிகழும் சச்சரவுகளில் துப்பாக்கியைப் பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தை இரு தரப்பினருமே கடைப்பிடித்திருப்பதால், துப்பாக்கிச் சண்டை நடக்கவில்லை. கல்லெறிந்தும் கம்பிகள் கட்டைகளைப் பயன்படுத்தியும் நடைபெற்ற சண்டையிலேயே இத்தனை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது மோதல் எத்தனை கொடூரமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது.
மோதலைத் தொடர்ந்து, நேற்று இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற பொது விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், எல்லை தாண்டியது இந்தியாதான் என்று சீன அரசும், சீனாதான் என்று இந்திய அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
இந்தியப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நுழைந்து சில கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சீன இராணுவத்தினர் முயன்றதை ஒட்டித்தான் பிரச்சனை தோன்றியது என்றும், தனது நடவடிக்கைகளை சீனா திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை.
இப்படி ஒரு மோதல் தொடங்கியதற்கே இந்திய இராணுவத்தினர்தான் காரணம் என்றும், ஜூன் 6 ஆம் தேதியன்று இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் பேசி ஒப்புக்கொண்ட முடிவுகளுக்கு மாறாக, அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி, மோதலுக்கு காரணமான இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கல்வான் பள்ளத்தாக்கு முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியிருப்பதாகவும் இந்து நாளேட்டின் தலையங்கம் கூறுகிறது.
எல்லை எதுவெனத் தெரிய வில்லை
விஜயகாந்த் படத்தில் காட்டப்படுவது போல எல்லையில் பாகிஸ்தான், சீனா என்று அம்புக்குறி போட்டு, போர்டு நட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று யாராவது நம்புகிறார்களா தெரியவில்லை. இருப்பினும், ஏதோ ஒரு கோடு போடப்பட்டிருப்பதாகவோ, கல் நடப்பட்டிருப்பதாகவோ கூட யாரும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை எல்லை என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு விட்டால் பிரச்சனை இல்லை. அப்படி ஒப்புக் கொள்ளப்படாத இடங்களிலெல்லாம், இரண்டு விதமான எல்லைகள் இருக்கின்றன. “எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி” (Line of Control) என்பது ஒரு நாடு சொல்லிக் கொள்கின்ற எல்லை. “உண்மையில் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எல்லைப்பகுதி” (Line of Actual Control) என்பதுதான் எதார்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் இராணுவத்துடைய கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லையாகும். LOC க்கும் LAC க்கும் இடையிலான முரண்பாடுதான் எல்லைச் சண்டை.
தற்போது நிகழ்ந்து வரும் பிரச்சனை குறித்து பாஜக வின் தேசிய செயற்குழு உறுப்பினரும், ஆர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, தி பிரின்ட் இதழில் ஜூன் 5 ஆம் தேதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
“1993 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தில்தான் LAC என்பது ஒரு கருத்தாக்கமாக அமலுக்கு வந்ததது. அது வெறும் கருத்தாக்கம்தானே தவிர, களத்தில் எந்த இடம் என்று வரையறுக்கப்படவில்லை. அதன்பின் 1987, 2013, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் வெவ்வெறு இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. இப்போது கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நிகழ்கிறது. வரைபடங்கள், ஒப்பந்தங்கள் என்று அறையில் உட்கார்ந்து எதை வேண்டுமானாலும் முடிவு செய்யலாம். கள எதார்த்தத்துடன் ஒத்துப் போனால் மட்டும்தான் அவற்றுக்குப் பொருள் உண்டு” என்கிறார் சேஷாத்ரி சாரி. (Ahead of talks with China, question for India: Settle geography or wait for history to unfold? SESHADRI CHARI 5 June, 2020, FirstPost)
எம்.கே.நாராயணனின் எச்சரிக்கை!
கள எதார்த்தம் (Ground reality) என்ற சொல்லின் பொருள் என்ன? இரு நாடுகளில் எது இராணுவ வலிமை மிக்கது என்பதல்ல இதன் பொருள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது மட்டுமே தீர்மானிக்கின்ற காரணியாக இருந்தால், நேபாளத்தின் மீது இந்தியா இந்நேரம் போர் தொடுத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியையும் கைப்பற்றியிருக்க வேண்டும். இராணுவ வலிமை என்பது ஒரு மோதலின் இறுதி முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாக இருக்கலாம். ஆனால் மோதலையோ சமாதானத்தையோ தீர்மானிக்கின்ற காரணியாகத் தொழிற்படுவது அரசியல்.
அதனால்தான் 40 ஆண்டுகளாக நடக்காத மோதல் இப்போது ஏன் நடந்திருக்கிறது என்ற கேள்வி மையமானதாக இருக்கிறது.
“அணிசேராக் கொள்கைதான் நல்லது” என்ற தலைப்பில் ஜூன் 16 ஆம் தேதி ஆங்கில இந்து நாளேட்டில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எழுதியிருக்கும் கட்டுரை கூறும் விசயங்கள் மிகவும் முக்கியமானவை. இப்படி ஒரு மோதல் நிச்சயமாக நடக்கப்போகிறது என்று தெரிந்து, முன்னெச்சரிக்கை செய்வது போல அமைந்திருக்கிறது அந்தக் கட்டுரை.
“பதற்றம் குறையும். இரு தரப்பும் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டன என்று சொல்லப்படுவது உண்மையல்ல. லடாக் சிக்கிம் பகுதியில் எது எல்லை என்று வரையறை செய்யப்படாத பகுதிகளில் சீன துருப்புகள் குவிந்திருக்கின்றன. இந்த முறை அவர்கள் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற மாட்டார்கள். எல்லைப் பகுதியில் இந்திய இராணுவம் அமைக்கும் சாலை சீன எல்லைக்குள் வருவதாக அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா மறுக்கிறது.”
“நாம் எல்லைப்புற சாலைகள் கட்டுமானங்களை வலுப்படுத்துவதால் சீனா ஆத்திரமடைந்திருக்கிறது என்று கூறிக்கொள்வது பிரச்சனையை எளிமைப்படுத்தி பார்ப்பதாகும். இந்த பிரச்சனைக்காக இராணுவபலத்தைக் காட்டும் அளவுக்கு சீன அதிபர் ஸீ ஜின்பிங் பொறுப்பின்றி நடப்பவரல்ல. அல்லது மேற்கத்திய ஊடகங்கள் கூறுவது போல, கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், தனது மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ள சீனா செய்யும் முயற்சியாகவும் இதனைப் பார்க்க முடியாது.”
“இந்தியா அணிசேராக் கொள்கையை கைவிட்டு அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் போய்விட்டது என்ற கருத்து யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. இந்தோ – பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அமைத்திருக்கும் “அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா” என்ற குவாட் கூட்டணியில் இந்தியா அங்கம் வகிக்கிறது. “ஜி-7 நாடுகளின் எண்ணிக்கையை விரிவாக்கி அதில் இந்தியாவை இடம்பெறச் செய்வது, சீனாவை ஒதுக்குவது” என்ற டிரம்பின் அறிவிப்புக்கு இந்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. பாக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி வழியாக சீனா பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் என்ற திட்டத்தின் பகுதியாக போடப்படும் சாலையை இந்தியா எதிர்க்கிறது. சமீபகாலமாக சீன எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இந்தியா சம தூரத்தைப் பாவிக்க வேண்டுமென்றும் அமெரிக்க சார்பாக நடந்து கொள்ளக்கூடாது என்றும், இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் இப்போது நடைபெறும் எல்லைப் பேச்சுவார்த்தையின் போதும் சீனா சுட்டிக் காட்டியிருக்கிறது.”
“இருதரப்பு உறவு குறித்த இத்தகைய உணர்வுகள்தான் எல்லைப் பிரச்சனைகள் மீது தாக்கம் செலுத்துகின்றன. எல்லை தொடர்பான பேச்சு வார்த்தையில் 2005-2010 ஆண்டுகளில் நான் சிறப்பு பிரதிநிதியாக பங்கேற்றிருக்கிறேன். எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் வரையறைகளும் வழிகாட்டும் கொள்கைகளும் என்ற ஆவணம் (2005) இந்த எதார்த்தத்தைத்தான் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிடுகிறார் எம்.கே.நாராயணன்.
இன்னொரு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் தி வயர் இணையதளத்தின் கரன் தாப்பருக்கு அளித்துள்ள பேட்டியில், சீனாவின் அணுகுமுறை முன்னர் இருந்ததைப் போல இல்லை. 1986, 2013 இல் நடைபெற்ற மோதல்களிலிருந்து இது முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது.
LAC க்கு இணையாகச் செல்லும் ஒரு சாலையை 2004 முதல் நாம் போட்டு வருகிறோம். இப்போதுதான் அது முடிந்திருக்கிறது. அது நம்முடைய கட்டுமானத்தை பெருமளவு மேம்படுத்தியிருக்கிறது. இதனை ஒரு அச்சுறுத்தலாக அவர்கள் கருதக்கூடும். தேவைப்பட்டால் இந்த சாலையை மறிக்கின்ற நோக்கத்துடன் இந்த மோதலை அவர்கள் நடத்தக் கூடும் என்கிறார் சிவசங்கர் மேனன்.
முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரியான எம்.கே.பத்ரகுமார், இதையே மேலும் விளக்கிச் சொல்கிறார்.
தார்புக் என்ற இடத்திலிருந்து தவுலத் பெக் ஓல்டி என்ற இடம் வரையிலான 255 கி.மீ நீளத்துக்கு LAC க்கு இணையாகச் செல்லும் ஒரு சாலையை நாம் போட்டிருக்கிறோம். இந்த சாலை அமைக்கும் பணியை சீனா இத்தனை ஆண்டுகளாகத் தடுக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால், தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தை 1962 போரில் கைப்பற்றிய சீனா, பின்னர் அதனைக் கைவிட்டுவிட்டது. அங்கே இந்தியா ஒரு இராணுவ விமானதளம் அமைத்ததையும் சீனா தடுக்கவில்லை. இவையனைத்துமே ஆபத்து என்ற கருத்து இப்போது அவர்களுக்கு வந்திருக்கிறது. இந்த நம்பிக்கை குலைவின் வேர், 2008 இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இருக்கிறது. அதன் பின் இந்திய அமெரிக்க உறவில் interoperability (ஒருவருக்கொருவர் உதவுதல்) என்ற கொள்கை புதிதாக நுழைந்தது. இந்திய இராணுவ திட்டமிடல்களில் அமெரிக்க இராணுவம் கள்ளத்தனமாக நுழையத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிப் போக்கின் முடிவு என்ன? தற்போது அமெரிக்காவின் லாயத்தில் கட்டப்பட்டிருக்கிறது இந்தியக் குதிரை…” என்கிறார் பத்ரகுமார்.
அமெரிக்க லாயம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. மோடி அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்டிருக்கும் Logistics Exchange Memorandum Agreement என்ற ஒப்பந்தம், இந்தியாவின் கடற்படை மற்றும் விமான தளங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கிறது. அதாவது, சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வகுத்திருக்கும் போர்த்தந்திரத் திட்டத்தில் ஆசியாவுக்கான அடியாள் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறது மோடி அரசு.
மோடியின் அமெரிக்க அடிமைத்தனமே பகைமைக்கு அடிப்படை
சண்டையை உருவாக்கியது கோழி அல்ல. வேறு காரணங்களால் உருவாகும் முரண்பாடுகளின் வெளிப்பாடுதான் கோழிச்சண்டை என்ற கருத்தைத்தான் சேஷாத்ரி சாரி, எம்.கே.நாராயணன், பத்ரகுமார் ஆகிய அனைவருமே சொல்கிறார்கள். “நாம் கூட்டு சேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பதே நல்லது” என்கிறார் நாராயணன். “அமெரிக்க அடிமையாக மாறிவிடுவதே நல்லது” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனம் குறித்து எம்.கே நாராயணன் பட்டியலிட்டிருக்கும் விசயங்களுடன் நாம் கவனிக்கத்தக்க வேறு சிலவும் உண்டு.
மோடி அரசு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த்தையும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததையும் சீனா கடுமையாக ஆட்சேபித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீர் பகுதிகளையும், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்சாய் சின் பகுதியையும் உயிரைக் கொடுத்தாவது மீட்போம் என்று நாடாளுமன்றத்தில் சவடால் அடித்தார் அமித் ஷா. இந்தப் பேச்சு சேஷாத்ரி சாரி குறிப்பிடுகின்ற 1993 இந்திய – சீன LAC ஒப்பந்தத்துக்கு எதிரானது. அமித் ஷாவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆகஸ்டு – செப் 2019 இலேயே இந்திய இராணுவத்தின் ரோந்துப் படைகளை லடாக் பகுதியில் தடுக்கத் தொடங்கி விட்டது சீன இராணுவம்.
அடுத்தது தைவான் பிரச்சனை. சீனப்புரட்சியில் தோற்கடிக்கப்பட்ட சியாங் ஐ ஷேக், அமெரிக்க ஆதரவுடன், சீனாவின் ஒரு பகுதியான தைவான் தீவை, தனியான சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதை அன்று முதலே சீனா ஏற்கவில்லை. இந்திய அரசும் சீனாவின் இந்த நிலையை ஆதரித்தே வந்திருக்கிறது. பாலஸ்தீனத்தைக் கைவிட்டு இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டதைப் போல, மோடி அரசு, தைவானுக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. தற்போது நடைபெற்று வரும் எல்லை மோதலில், சீன டிராகனை, இராமன் அம்பு விட்டு வீழ்த்துவது போல சமூக ஊடகங்களில் படம் வெளியிட்டு, சங்கிகளுக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறது தைவான்.
மோடியின் அமெரிக்க அடிமைத்தனத்துக்கு அதிக விளக்கம் தேவையில்லை. அமெரிக்காவுக்கே சென்று டிரம்புக்கு ஓட்டு கேட்டது, டிரம்பை அகமதாபாத்துக்கு வரவழைத்து கூட்டம் காட்டி குளிர்வித்தது, ஹைட்ராக்சி குளோரோகுயின் விவகாரம் என இதற்குப் பல சான்றுகள் உண்டு.
ராவ்பகதூர் மோடி
அடிமைகளுக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்குவது காலனியாதிக்க மரபு. அந்த வகையில், ஜி-7 நாடுகளின் அணியை ஜி-11 ஆக மாற்றப்போவதாகவும், அதில் ரசியா, தென்கொரியா, ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவையும் சேர்த்துக் கொள்ளப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தார் டிரம்ப். இது சீனாவுக்கு எதிராக டிரம்ப் அமைக்கின்ற உலக கூட்டணி என்று புரிந்து கொண்டு, மற்ற நாடுகள் யாரும் இதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் உடனே இதற்கு ஒப்புதல் தெரிவித்தார் மோடி.
உலக நாட்டாமை என்ற அமெரிக்காவின் பட்டமே பறிபோகும் நிலையில் இருப்பது இந்த சங்கிகள் மண்டையில் ஏறவில்லை என்று கேலி செய்கிறார் எம்.கே.பத்ரகுமார். கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் மீது தனது செல்வாக்கை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஜூன் 25,26 தேதிகளில் ஜி-7 நாடுகளின் கூட்டத்தை, வாஷிங்டனில் நடத்துவதாக அறிவித்தார் டிரம்ப். இதை கனடா கண்டு கொள்ளவே இல்லை. “கொரோனா வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் கலந்து கொள்ள முடியாது” என்று கூறிவிட்டார் ஜெர்மன் அதிபர் மெர்கெல்.
அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. “ஜி-7 கூட்டமோ, ஜி-20 கூட்டமோ எதுவாக இருந்தாலும் சரி, ஒற்றைத்துருவ உலக அமைப்பை எதிர்த்து பல்துருவ அமைப்புக்காக நான் போராடுவேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார் மெர்கெல். இதற்குப் பிறகு, “மீசையில் மண் ஒட்டவில்லை” என்று சமாளிக்கும் பொருட்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புதான் மேற்படி ஜி-11 அறிவிப்பு. இந்த விசயம் நமது “விசுவகுரு” வுக்கு புரியவில்லை.
அமெரிக்கா அறிவித்த கூட்டம்தான் ரத்து செய்யப்பட்டதேயன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஜுன் 9 அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது. “கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் அதிகாரப் படிநிலையைத் தீர்மானிக்கும் கூட்டம்” என்றுதான் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பத்ரகுமார்.
மேற்சொன்ன கூட்டத்திற்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போரெல் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார். “நாமும் சீனாவும் ஒரே விதமான அரசமைப்பை கொண்டிருக்கவில்லை. நாம் நமது அரசமைப்பை நியாயப்படுத்துவது போல சீனா தனது அரசமைப்பை நியாயப்படுத்துகிறது… அவர்கள் உலகளவில் செல்வாக்கு செலுத்த விரும்புகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் உலக அமைதியை அச்சுறுத்தும் விதத்தில் சீனா நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு இராணுவ ரீதியான ஆசைகள் இல்லை. அத்த்கைய இராணுவ மோதல்களில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை”
கொரோனாவால் தீவிரமடைந்திருக்கும் பொருளாதார மந்த நிலையிலிருந்து உலகப் பொருளாதாரத்தை மீட்பதில், ASEAN நாடுகள்தான் முக்கியப் பங்காற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிடுகிறது. ஏசியான் நாடுகளின் முதன்மையான வர்த்த கூட்டாளி சீனா என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் கணக்கில் கொண்டிருக்கிறது. தற்போதைய உலகச் சூழலில் அமெரிக்காவின் நிலை இதுதான்.
ஆத்ம நிர்ப்பார் அல்ல, அமெரிக்க நிர்ப்பார்
அமெரிக்க அடிமையாக இருப்பது என்பது தொன்று தொட்டு சங்கிகளின் டி.என்.ஏ வில் பதிந்திருக்கும் கொள்கைதான் என்றாலும், ஆண்டையாக இருப்பதற்கான தகுதி தற்போதைய உலக சூழலில், அமெரிக்காவுக்கு இருக்கிறதா என்பதை அவர்கள் யோசித்ததாகத் தெரியவில்லை.
“கொரோனா பிரச்சனைக்குப் பின்னர், ஆத்ம நிர்ப்பார் (சுய சார்பு) என்பதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோம்” என்று கூறிய மோடி, முகக் கவசம், வென்டிலேட்டர், சோதனைக் கருவிகளையெல்லாம் நாமே லட்சக்கணக்கில் உற்பத்தி செய்கிறோம்” பெருமை பேசினார். மோடி கூறும் சுயசார்பின் பொருள் வேறு. இது நேரு காலத்தில் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட, ஏகாதிபத்திய சார்பை நிராகரிக்கும் சுயசார்பு அல்ல.
நாட்டில் மிச்சம் மீதி இருக்கும் பொதுத்துறைகள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் போடவிருக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்த பின்னரும் இவர்கள் பேசுவது சுயசார்பு என்று நம்பக்கூடிய மரமண்டைகளுக்குள் வேறெந்த கருத்தும் நுழைவதே கடினம்.
சங்கிகள் பேசுவது சீனாவுக்கு எதிரான சுயசார்பு. அதாவது, இது அமெரிக்க அடிமைத்தனத்தனத்துக்கு சூட்டப்பட்டிருக்கும் கவுரவமான புனைபெயர்.
மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, “சீனப் பொருட்களை புறக்கணிப்போம்” என்ற இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தி வருகிறது. தற்போது எல்லைத் தகராறு குறித்து தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில், சங்கிகளும் சங்கிகளின் பினாமிகளும் சுயசார்பு குறித்து “பொளந்து கட்டுவதை” சகிக்க முடியவில்லை.
சீனாவே, இந்திய சந்தையை நம்பித்தான் இருப்பதைப் போலவும், நாம் சீனப்பொருட்களைப் புறக்கணித்தால் சீனப்பொருளாதாரமே நிலை குலைந்து விடும் என்பதைப் போலவும் அளந்து விடுகிறார்கள். சீனாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில், இந்தியாவுக்கான ஏற்றுமதி என்பது 2% என்ற புள்ளி விவரத்தை மட்டும் இதற்கு மறுப்பாகச் சொன்னால் போதும் என்று கருதுகிறேன். மற்றப்படி உற்பத்தி துறையில் இந்தியாவின் சீன சார்புநிலையைச் சொல்லி இந்திய முதலாளிகள் அழுது கொண்டிருக்கிறார்கள். சங்கிகளின் அறிவை எண்ணி சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அது பற்றி தனியே எழுதலாம்.
தற்போது எல்லையில் நிலைநாட்டப்பட்டிருக்கும் அமைதி நீடிக்குமா அல்லது இன்னும் சிறிது காலத்துக்கு இத்தகைய மோதல்கள் தொடருமா என்று தெரியவில்லை. கொரோனா பாதிப்பினால் மக்களின் அதிருப்தியை ஈட்டியிருக்கும் சீன அரசுக்கும், மோடி அரசுக்கும் இந்த பதற்ற நிலை, தத்தம் உள்நாட்டில் அரசியல் ரீதியில் பயனுள்ளதாகவே இருக்கும். ஆனால் நிலைமை கைமீறிச் செல்வதை இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புமா என்பதே கேள்வி. ஜெயின் குழுமத்துக்கு சொந்தமான டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ் நாளேடுகள் 18.2.20 அன்று எழுதியிருக்கும் தலையங்கங்களின் முரண்பட்ட அணுகுமுறைகளே இதற்குச் சான்று.
“வரவிருக்கும் சர்வதேச புவிசார் அரசியல் சூழலில் சீனாவுக்கு எதிரான முகாமில் இந்தியா சேரவேண்டிவரும் என்றும் அதனால் நட்டமடைவது சீனாவாகத்தான் இருக்குமென்றும்” சீனாவை மிரட்டுகிறது டைம்ஸ் ஆப் இந்தியாவின் தலையங்கம். இது இந்திய ஆளும் வர்க்கத்தின் வாய்.
“சுமுகமாக பிரச்சினையை தீர்த்துக்கொண்டு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது உள்ளிட்ட இருதரப்புக்கும் லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்திய சீன எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதுதான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமல்ல உலகத்துக்கே நல்லது” என்று அருள் வாக்கு சொல்கிறது எகனாமிக் டைம்ஸ் தலையங்கம். இதுதான் ஆளும் வர்க்கத்தின் இதயம்.
“இஸ்கே லியே ஜான் தேதேங்கே”
இன்றைய சூழலில், தேசவெறி என்ற ஆயுதத்தை பாஜகவுக்கு எதிராகப் பயன்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பை நழுவ்விடுவதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை. “ஏன் ஓடி ஒளிகிறீர்கள்? பயப்படாமல் உண்மையைச் சொல்லுங்கள். லடாக்கில் என்ன நடந்தது?” என்று மோடியை எள்ளி நகையாடுகிறார் ராகுல். “உங்கள் அறிக்கையில் சீனாவின் பெயரைச் சொல்லக்கூட பயமா?” என்று ராஜ்நாத் சிங்கை கேலி செய்கிறார். “நாங்கள் சிக்கிமை இணைத்தோம். வங்கதேசத்தைப் பிரித்தோம்” என்று தங்களது வீரப்பிரதாபங்களைப் பேசி உசுப்பேற்றுகிறார்கள்.
இன்னொருபுறம், “நமது எல்லைக்குள் சீன இராணுவம் இருக்கிறதா இல்லையா என்று தெளிவாகச் சொல்லுங்கள்” என்று சிவசங்கர் மேனன் முதல் தொலைக்காட்சி நடுநிலையாளர்கள் வரை அனைவரும் கேட்கிறார்கள். “பத்தாயிரம் சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் என்ன செய்கிறார்கள்?” “இந்தியாவின் 60 சதுர கி.மீ பரப்பை சீனா கைப்பற்றி விட்டது” என்று எழுதுகிறார் பாதுகாப்புத்துறை பத்திரிகையாளர் அஜய் சுக்லா. “ப்ரம்மோஸ் ஏவுகணையை விடுவீர்களா?” என்று எள்ளி நகையாடுகிறார் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ். சங்கிகளின் சவடால் பேச்சுகள் சந்தி சிரிக்கின்றன.
காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து ஆகஸ்டு 9, 2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசினார் அமித் ஷா. “நான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்லும்போது, பாக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரையும் அக்சாய் சின் பகுதியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். .. நான் கோபமாக பேசுவதாக சொல்கிறார்கள்… நமது மண்ணை மீட்பதற்காக என் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” (இஸ்கே லியே ஜான் தேதேங்கே) என்று நெருப்பைக் கக்கினார் அமித் ஷா.
“எல்லை பிரச்சினை பற்றி பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தங்களை மனதில் வைத்துப் பேசவேண்டும் என்று இந்தியாவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்” என அமித் ஷாவுக்கு வார்த்தைகளால் அன்று பதில் கொடுத்தது சீனா. இப்போது இப்படி ஒரு பதில் கிடைத்திருக்கிறது.
அன்று தெற்காசியாவின் நாட்டாமை என்பதை நிலைநாட்டுவதற்காக ஈழத்தமிழ் மக்களும் புலிகளும் கொன்று குவிக்கப்பட்டார்கள். மேலாதிக்கப் பெருமைக்காக இந்திய சிப்பாய்கள் இலங்கையில் காவு கொடுக்கப்பட்டார்கள். இன்று, மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனம் தோற்றுவித்திருக்கும் இந்திய – சீன மோதலுக்காக, 20 சிப்பாய்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
உடல்களை வைத்து அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தாங்கள் கொண்டிருக்கும் வல்லமையை குஜராத் முதல் புல்வாமா வரை இந்துத்துவ பாசிஸ்டுகள் பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட சிப்பாய்களுக்காக “சராசரி தேசபக்தர்கள்” துடித்துக் கொண்டிருக்க, “இந்த உடல்களை, பிகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்துவது எப்படி?” என்று அமித் ஷா யோசித்துக் கொண்டிருப்பார்.
—மருதையன்