வைரமுத்து விவகாரத்தில் – பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் திராவிடம் சார்ந்த கருத்துகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மோதுகின்றன.
பெண் விடுதலை குறித்தும் பெண் உரிமை குறித்தும் தமிழ்த்தளத்தில் மிக அழுத்தமாக முழங்கியவர் பெரியார். திராவிட கருத்தியல் நண்பர்கள் நிச்சயமாக இதனை மறந்தோ மறுத்தோ வைரமுத்துவை ஆதரித்துக் கொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. வைரமுத்துவின் பிறந்தநாளன்று அவரைப் போற்றுவதன்மூலம் அவர்கள் அவருடைய ‘மீ டூ’ சிக்கலை ஆதரிப்பதாகவும் கருதவேண்டியதில்லை.
இந்தக் காலகட்டம் மிக சிக்கலானதாக இருக்கிறது. ’ஆரியம்’, இந்துத்துவமாக மாறி திராவிடத்தை எல்லா திசைகளிலும் குறிவைக்கிறது. திராவிடத்தை அழிப்பதென்பது, தலித்துகள், பெண்விடுதலைக் கருத்துகள் அனைத்தையும் சேர்த்து அழிப்பதுதான். ‘ஆரியத்துக்கு எதிரான, பார்ப்பனியத்துக்கு எதிரான ஒரு முழக்கமாகத்தான் நம் திராவிடத் தோழர்கள் வைரமுத்துவையும் அவருடைய எழுத்தையும் போற்றுகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க- தனிப்பட்ட முறையில் வைரமுத்துவின் சந்தர்ப்பவாதம், கலைஞருடனான நட்பை தன் சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டவிதம், தன் எழுத்தை தேர்ந்த வியாபாரத் திறனுடன் சந்தைப்படுத்திய முறை, இளையராஜாவுடன் முரண்பட்டபிறகு திரைத்துறைக்குள் ராஜாவுக்கு எதிராக காலம் முழுவதும் அவர் நகர்த்திய காய்கள், இதற்காகவே இயங்கிய பார்ப்பன சக்திகளிடம் தன்னை அவர் ஒப்புக்கொடுத்த விதம் எல்லாமே அவருடைய புகழுக்கு இணையான களங்கங்களே! அவர் நம்பிய பார்ப்பனர்கள் எத்தனை சந்தர்ப்பவாதிகள் என்பதை இந்த ஆண்டாள் விவகாரத்தில் அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார் என்றுதான் நம்புகிறேன்.
சின்மயி விவகாரம் – ஏற்கனவே கலைத்துறையில் குறிப்பாக திரைத்துறையில் பெண்களை Take it as granted ஆக கைக்கொள்ளும் ஆணாதிக்க அம்சத்துடன் இணைத்துப் பேசவேண்டியது. அப்படிப்பேசும்போது எல்லா நிலையிலும் தொண்ணூறு சதவீத ஆண்களை, படைப்பாளிகளை, ஆளுமைகளை நம் பெண்ணியத் தோழர்கள் நடுரோட்டில் நிறுத்திவைத்து சுட்டுத் தள்ளவேண்டியிருக்கும். ஒரு படைப்புகூட மிஞ்சாது.
முகநூலில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன்