கேள்வி
மிகப் பெரும் தொழிலகங்கள் பல்லாயிரம் கோடிகள் வராக்கடன்களை வைத்திருக்கின்றன.
ஆனால் அந்த நிறுவனங்களின் உடமையாளர்களாக கருதப்படுபவர்கள் மிகப் பெரும் செல்வந்தர்களாக திகழ்கிறார்கள்.
கம்பெனிகள் குப்புற விழுந்து திவாலாகின்றன. ஆனால் அவற்றின் முதலாளிகள் எந்தவித அலட்டலும் இன்றி மேலும் மேலும் பணக்காரர்களாகவே உயர்கின்றனர். ஏனிந்த முரண்பாடு ? சாதாரண மனிதன் வங்கிகளில் கடன் வாங்கினால் இரக்கமின்றி ஜப்தி செய்து அவனை நடுத்தெருவில் நிறுத்துகின்றன வங்கிகள்.
ஆனால் பெருமுதலாளிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், அரசாங்கமும் அவர்கள் நஷ்டமென்று சொல்லி கைவிரித்துச் செல்லும்போது மட்டும் அவர்களின் சொத்துக்கள் மீது கைவைப்பதில்லை? ஏன் இப்படி?
பதில். தருகிறார் திரு க.சுவாமிநாதன் அவர்கள்.
உண்மை. ஒரு முறை முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சொன்னார். “வங்கியில் கடன் வாங்க வரும் போது ஓட்டை அம்பாசடர் காரில் வருவார்கள். கடன் கட்ட முடியவில்லை என்று சொல்ல வரும் போது ஃபாரின் சொகுசு காரில் வருவார்கள்”.
இந்த முரண்பாடு ஏன்? இதை சாதாரண மக்களிடம் பேச வேண்டியுள்ளது. சில நேரம் நாம் பேசுகிற வாதங்கள் மக்களின் தலைக்கு மேலே போய் விடுகின்றன. எளிய உண்மைகள் கூட அவர்களுக்கு போய்ச் சேருவதில்லை.
நாம் கம்பெனிகளின் பெயர்ப் பலகைகளில் “லிமிட்டெட்” என்ற வார்த்தை இணைந்திருப்பதை பார்க்கிறோம். இதன் பொருள் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் மக்கள் திரளில் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.
லிமிட்டெட் என்பது வரையறைக்குட்பட்டது.
“லிமிட்டெட்” என்பதை தமிழில் “வரையறுக்கப்பட்டது” என்கிறோம். எது Limited? எது வரையறுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதன் முழுப் பொருள் என்ன என்பதை நாம் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கலாம். இங்கு நாம் விவாதிக்கிற கேள்வியோடு அதற்கு இருக்கிற சம்பந்தத்தை மட்டும் இப்போது பேசுவோம்.
லிமிட்டெட் அல்லது வரையறுக்கப்பட்டது என்றால் அதன் பொறுப்பு (Liabilities) Limited அல்லது வரையறுக்கப்பட்டது என்று அர்த்தம். அக் கம்பெனிகளின் நடவடிக்கைகளால் எழும் பாக்கிகள், கடன்கள் ஆகியவற்றுக்கு அந்த கம்பெனிக்குள்தான் தீர்வு காண முடியும் என்று அர்த்தம். அம்பானி, டாட்டா, அதானி போன்ற தொழிலதிபர்கள் நிறைய நிறுவனங்களை தங்கள் குழுமத்தில் வைத்திருப்பார்கள். அவற்றில் ஏதாவது ஒன்று தோல்வி அடையலாம். அந்த நிறுவனம் வங்கிகளில் வாங்கிய கடன்கள் வராக்கடன் ஆகலாம். ஆனாலும் அந்த வராக்கடனுக்காக அவர்கள் குழுமத்து மற்ற லாபகரமான நிறுவனங்களையோ, அந்த தொழிலதிபர்களின் பெரும் சொத்துக்களையோ கை வைக்க முடியாது. இதுவே “லிமிட்டெட்” அல்லது “வரையறுக்கப்பட்டது” என்ற இணைப்பு அவர்களுக்கு தருகிற பாதுகாப்பு. எவ்வளவு நேர்த்தியான ஏற்பாடு!!!
என்ன நியாயம் சொல்வார்கள். இவர்கள் அத் தொழிலை உருவாக்கியவர்கள் (Promoters) அல்லது மிகப் பெரும் பங்குதாரர்கள்தான். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் தளம் விரிந்தது. அத்தகைய பங்குதாரர்கள் எல்லோருமே உடமையாளர்கள் என்பார்கள். உண்மையில் கட்டுப்படுத்துபவர்கள் யார்? பலனை பெரிதும் அனுபவிப்பவர்கள் யார்?
ஒரு காலத்தில் டாட்டா நிறுவனத்தில் டாட்டாவின் பங்கு 10% க்கு கீழ் கூட இருந்தது. உலகமய காலத்தில் ஒருவர் நிறுவனத்தை ஒருவர் கைப்பற்ற ஆரம்பித்த பின்னர், அதுவும் பன்னாட்டு மூலதனத்திற்கும் திறந்து விடப்பட்ட பிறகுதான் 26 % ஐ அதிகப் பங்குதாரர்கள் வைத்திருப்பது என்கிற கட்டாயங்கள் எல்லாம் ஏற்பட்டன. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிவசங்கரனால் கைப்பற்றப்பட்டது பத்தாண்டுகளுக்கு முந்தைய உதாரணம். 40 ஆண்டுகளுக்கு முன் நெருங்கி செல்வோம். 1983 ல் லண்டனில் இருக்கிற வெளி நாடு வாழ் இந்தியர் ஸ்வராஜ் பால் இந்தியாவின் டி.சி.எம், எஸ்கார்ட்ஸ் நிறுவனங்களைக் கைப்பற்றியது சுவாரசியமான நிறுவன கவிழ்ப்பு (Takeover Coup) ஆகும். 1983 ஜனவரி முதல் ஏப்ரல் வரை டி.சி.எம் பங்குகள் ரூ 34 > ரூ 66 > ரூ 78 என்றும், எஸ்கார்ட்ஸ் பங்குகள் ரூ 40 > ரூ 70 என எக்குத்தப்பாக ஜம்ப் ஆனபோது அந்த நிறுவன உடமையாளர்களே காரணம் தெரியாமல் குழம்பினர். ஸ்வராஜ் பால் திரை மறைவில் இருந்து வெளியே வந்த பின்னர்தான் வில்லன் யார் என்று தெரிந்தது. அதன் பின்னரே அதிகப் பங்குதாரர்கள் ( Promoters) தங்கள் பங்கு சதவீதத்தை அதிகரிப்பது என்பதற்கான அவசியம் நிறுவன உலகில் ஏற்பட்டது. நாம் கேள்விக்குள் திரும்பவும் செல்வோம்.
ஆனால் வங்கிகள் “தனி நபர் உத்தரவாதத்தின்” (Personal guarantee) அடிப்படையில் கடன் தருகிற வழக்கம் உள்ளது. அந்த கடன்களை வசூலிக்க அந்த தனி நபர் சொத்துக்கள் மீது கைவைக்கலாம். அதை வங்கிகள் பெரும் தொழிலதிபர்கள் விசயத்தில் செய்கிறார்களா? இதோ இந்து பிசினஸ் லைன் (22.07.2020) ல் வெளி வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் பொது நல வழக்கு பற்றிய செய்தியை பாருங்கள்.
வங்கி கடன்களுக்கு டி.எச்.எப்.எல் நிறுவனத்தின் அதிக பங்குதாரர் கபில் & தீரஜ் வாத்வானி ரூ 79344 கோடிகள், ஐ.வி.ஆர்.சி.எல் நிறுவனத்தின் சுதிர் ரெட்டி ரூ 7058 கோடிகள், வேணுகோபால் & ராஜ்குமார் தூத் ரூ 22076 கோடிகள், மது சூதன் ராவ் & குடும்பம் ரூ 5253 கோடிகள், வின் சம் நிறுவனத்தின் ஜதின் மேத்தா ரூ 6185 கோடிகள் தனி நபர் உத்தரவாதம் தந்துள்ள்னர். இப்படி அரசு வங்கிகளுக்கு தரப்பட்ட 1.8.லட்சம் கோடி தனி உத்தரவாதங்கள் பயன்படுத்தப்பட்டு வராக்கடன்கள் ஏன் வசூலாகவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டிசை அனுப்பியுள்ளது. இவர்கள் எல்லாம் அந்தந்த நிறுவனங்களின் Promoters.
மிகப் பெரும் சர்ச்சை எழுந்ததால் இப்படி தனி உத்தரவாதம் தந்திருந்த அனில் அம்பானி மீது ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்தது. இப்பிரச்சினைக்குள் குடும்ப சண்டை, செல்வாக்கு, பொது வெளி விவாதங்கள் போன்ற நிர்ப்பந்தங்களும் காரணிகளும் இருக்கின்றனவே தவிர அடிப்படை பிரச்சினைகளாக இருக்கிற வர்க்க பாரபட்சம், அரசியல் உறுதியின்மை, வெளிப்படைத் தன்மை இல்லாமை ஆகியனவே முக்கியமான காரணிகள் ஆகும்.