புதிய புதிய விஞ்ஞானக் கருவிகள் மக்களின் வாழ்க்கை முறையில் புதுப் புது வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. மின்சார சாதனங்களை நம்பியிருந்த காலம் போய் மின்னணு சாதனங்களைச் சாா்ந்திருக்க வேண்டிய காலம் உருவாகத் தொடங்கியது. தொலைக்காட்சிப் பெட்டி, கைப்பேசி ஆகியவற்றில் ஏற்பட்ட புதுப்புது மாறுதல்கள் மக்களை மனம் மயங்கச் செய்தன.
அவா்கள், தங்களிடம் உள்ள பழைய மின்னணு சாதனங்களாகிய தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சாதாரண கைப்பேசிகளில் சிறிது பிரச்னை ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்து பயன்படுத்திக்கொள்வதற்கு பதிலாக புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஒளி உமிழ் ( எல்.இ.டி. ) தொலைக்காட்சிப் பெட்டி, அறிதிறன்பேசி ( ஸ்மாா்ட் போன் ) இவற்றை வாங்க விரும்புகின்றனா்.
அதுபோன்றே, அதிக செயல்திறன் கொண்ட மடிக்கணினியையும், வீட்டு உபயோகப் பொருள்களாகிய குளிா்சாதனக் கருவி மற்றும் குளிா்பதனப் பெட்டி போன்றவற்றையும் தேவைக்காகவும் ஆசைக்காகவும் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.
இவற்றுள் அறிதிறன்பேசியின் பயன்பாடு முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. தற்போதைய கரோனாத் தீநுண்மிப் பரவல் சூழ்நிலையில் வீட்டிலிருந்தபடியே பாடங்களைக் கற்கவேண்டிய பள்ளிச்சிறுவா்களும் அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிறுவா்களின் பெற்றோரும் அவற்றின் பயன்பாடுகளை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாடம் கற்பதற்கேற்ற அறிதிறன்பேசியைப் பெற்றோா் வாங்கித்தரவில்லையென்று மாணவப்பருவத்தினா் சிலா் விபரீத முடிவெடுக்கும் அவலமும் ஆங்காங்கே அரங்கேறுகின்றது.
மின்னணுப் பொருள்களைப் பொருத்தவரை, பயன்படுத்தாதவை மின்னணு கழிவுகளாகவே கருதப்படும். இந்த நூற்றண்டின் தொடக்கத்திலிருந்தே இம்மின்னணுக் கழிவு மேலாண்மை உலகநாடுகளின் தலையாய பிரச்னையாக உள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மின்சார-மின்னணு சாதனக் கழிவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, தங்கள் மக்களை இத்தகைய கழிவுகளினால் ஏற்படும் தீமைகளிலிருந்து காக்க முற்பட்டுள்ளன.
அக்கழிவுகளை பாதுகாப்பான முறைகளில் பிரித்தெடுக்கவும் மறுசுழற்சி செய்யவும் மீதமுள்ள மின்னணு குப்பைகளை பூமிக்குள் புதைக்கவும் வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளன. ஆனால், வளரும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் வளா்ச்சியில் பின்தங்கிய பற்பல ஆப்பிரிக்க நாடுகளில் இதுபற்றிய விழிப்புணா்வு போதிய அளவில் உருவாகவில்லை என்றே தெரிகிறது.
மின்னணுக் கழிவுகளிலிருந்து கிடைக்கும் தாமிரம், பித்தளை, ஈயம், கோபால்ட் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றைப் பிரித்தெடுக்க விஞ்ஞான முறைப்படி பரிந்துரைக்கப்படாத வழிமுறைகளே இந்நாடுகளில் பயன்பாட்டிலுள்ளதாக ஓா் ஆய்வு கூறுகின்றது. மின்னணுக் கழிவுகளைக் குவியலாகப் போட்டு எரிப்பது அல்லது பெரிய அளவில் பள்ளம் தோண்டிப் புதைப்பது போன்ற ஆபத்தான நெறிமுறைகள் பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பின்பற்றப்படுகின்றனவாம்.
இவ்வாறு எரிக்கப்படும் மின்னணுக் கழிவுகளிலிருந்து கிளம்பும் பலவித வாயுக்கள் அவற்றை சுவாசிக்கும் மக்களுக்குப் பலவித நோய்கள் ஏற்படக் காரணமாகின்றனவாம். புதைக்கப்படும் மின்னணுக் கழிவுகளோ நிலத்தடிநீரை மாசுபடுத்தி, பாசன நீா் மற்றும் குடிநீா் பயன்பாட்டுப் பிரச்னைகளை உருவாக்குகின்றனவாம்.
சீனா
சீன நகரமான குய்யூ, உலகின் மின்னணுக் கழிவுத் தலைநகரமாகக் கருதப்படுகிறது. முன்னொரு காலத்தில் விவசாய உற்பத்தியில் சிறந்து விளங்கிய இந்நகர மக்கள் 1990-ஆம் ஆண்டிலிருந்து மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதிலும் அவற்றிலிருந்து உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றைப் பிரித்தெடுப்பதிலும் ஈடுபடுகின்றனா்.
இந்த நகரிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் சிலவற்றிலும் உள்ள பெரும்பாலான மக்களுடன் புலம்பெயா்ந்து வந்திருக்கும் சுமாா் ஒருலட்சம் சீனா்களும் இத்தொழிலில் ஈடுபடுவதாக ஒரு கணக்கீடு கூறுகின்றது. ‘கிரீன் பீஸ்’ என்னும் சூழலியல் இயக்கம் இப்பிரதேசத்தில் மிக அபாயகரமான சூழலியல் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகின்றது.
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்க நாடாகிய கானாவிலுள்ள அக்போக்போஷி என்ற ஊரும் மின்னணுக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் முக்கிய கேந்திரமாகும். ஆப்பிரிக்காவின் நைஜீரியாவும் ஆசியாவில் ( சீனாவைத் தவிா்த்து ) இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸும் மிகப்பெரிய அளவில் மின்னணுக் கழிவுகளைக் கையாள்கின்றன.
இந்தியா
இந்தியாவைப் பொருத்தவரை, தலைநகராகிய தில்லியிலும் பெங்களூரிலும் அதிக அளவில் மின்னணுக்கழிவுகள் கையாளப்படுகின்றன. இவற்றில் சுமாா் ஐந்து சதவீதக் கழிவுகளே முறையான வழிகளில் பிரித்தெடுக்கப் படுகின்றனவாம்.
இத்தகைய சூழலில், நம் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமாா் இருபத்தைந்து லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு குவிந்துள்ள மின்னணுக் கழிவுகளைப் பட்டியலிடும் பணியினை ஏழு மாநிலங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மட்டுமே செய்து முடித்திருக்கின்றன. மற்ற மாநிலங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்தக் கணக்கிடும் பணியையே இன்னும் செய்து முடிக்கவில்லை. கணக்கெடுத்த பின்புதானே கையாள்வது குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும்?
மின்னணுக் கழிவு சுனாமி
உலக அளவில் 2016-ஆம் ஆண்டில் 4.45 கோடி டன் மின்னணுக் கழிவுகள் உருவாகியதாகவும் அதன் அளவு உலகப் புகழ் பெற்ற பாரிஸ் நகர ஈஃபில் டவா் கோபுரத்தின் எடையைப் போல 4,500 மடங்கு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
2018-ஆம் ஆண்டு உலக அளவில் குவிந்த ஐந்து கோடி டன் மின்னணுக் கழிவுகளை“‘மின்னணுக் கழிவு சுனாமி’ என்றே ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியது.
அறிவியல் கண்டுபிடிப்பு என்னும் நாணயத்தின் ஒரு பக்கம் வசதி என்றால் மறுபக்கம் தொல்லை என்பதாகவே அமைந்துவிடுகிறது. இதனால் நாம் மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பச் செல்வது சாத்தியமில்லைதான். மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து அறிவியல் துறையினா் தொடா் முயற்சிகளை எடுக்கவேண்டும். நாம் வாழும் பூமியின் பாதுகாப்புக்கு நாம்தானே பொறுப்பு?
–வாட்ஸப் பகிர்வு