அண்ணாமலையாரின் நெஞ்சில் இடம் பிடிக்க கொண்டையில் தாழம்பூ வைத்த குஷ்பூ மேடம், தற்போது பாஜகவில் இணையப் போவதாக டெல்லி வட்டாரங்கள் பரபரக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் பாஜக அரசு அறிவித்த புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஓப்பனாக ஆதரித்து வரவேற்று அறிக்கை விட்டார் குஷ்பூ. காங்கிரஸ் கட்சி மேலிடம் வரை தகவல் போகவே, ‘ஸாரி ராகுல்ஜி.. உணர்ச்சி வசப்பட்டு சொல்லிவிட்டேன்’ என்றவர், ஆனாலும் நான் ஆதரித்ததிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. பொம்மையாக தலையாட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டார் இந்த அழகுப் பொம்மாயி.
காங்கிரஸ் மேலிடமும் அம்மணியின் அடுத்த நகர்வை புரிந்துகொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. சென்றவருடம் காங்கிரஸில் எம்பியாக நிற்க சீட் கேட்டதற்கும், ராஜ்ய சபா எம்.பிக்கு சீட் கேட்டதற்கும் காங்கிரஸ் ஓகே சொல்லவில்லை.
இந்த நிலையில், குஷ்பூ தற்போது தனது பாஜக நோக்கிய நகர்வை ஆரம்பித்து, மீண்டும் தலைநகருக்கு படை எடுத்திருக்கும் அம்மணி பாஜகவில் சேர பெரும் தலைகளிடம் தூது அனுப்பியிருப்பதாக டெல்லியில் இருந்து வரும் வண்டுகள் செய்தி சொல்கின்றன. பேரங்கள் படிந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பிஜேபியில் நமீதா, கௌதமி என்று நடிகைகள் பட்டாளம் இணைந்திருக்கும் போதும் தமிழ்நாட்டில் மலர முடியாத தாமரை, குஷ்பூவால் ஒருவேளை மலர்ந்துவிடுமோ என்று டில்லி மேலிடம் கணக்குப் போடுகிறதாம்.
இந்நிலையில் நாளை பாஜகவின் தலைவர் நட்டா முன்னிலையில் குஷ்பூ பாஜகவில் இணைகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நகர்வுக்கு அண்ணாமலையாரின் ஆசிகளும் உண்டுபோலத் தெரிகிறது.