உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், அமைதியாக போராடி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த விவசாயிகள் மீது பின்னாலிருந்து வந்து கார்களை ஏற்றி 4 விவசாயிகளை கொலை செய்துள்ளார் ஒன்றிய பாஜக அரசின் இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. அதோடு இச்சம்பவத்தை படம்பிடித்த ராமன் என்ற பத்திரிக்கையாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை சேர்ந்த அமைச்சரின் மகன் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் சார்பு, உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு 10 மாதங்களுக்கு மேலாக உழவர்கள் போராடி வருகின்றனர். இதனை கலைத்துவிட பாஜக துடித்துவரும் வேளையில், ஒன்றிய பாஜக இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, உழவர்கள் என்னை நேராக சந்தித்தால் அவர்களை 2 நிமிடத்தில் மண்டியிட வைப்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கோபமாகக் கூறினார்.

அஜய் மிஸ்ராவின் இந்த பேச்சினை கண்டிக்கும் விதமாக உபி மாநில துணை முதலமைச்சருடன் அக்டோபர் 3 அன்று உள்ளூர் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வரும் அமைச்சரை முற்றுகையிட உழவர்கள் அனைவரும் அவர் வந்திறங்கவிருந்த ஹெலிகாப்டர் தளத்தினருகே கூடினர். ஆனால் அஜய் மிஸ்ரா மாற்று வழியில் சென்றுவிட்டார். மாலை வரை காத்திருந்த விவசாயிகள் அனைவரும் வீடு திரும்பும் வேளையில் அவ்வழியாகச் சென்ற அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முன்னே சென்று கொண்டிருந்த விவசாயிகளின் ஊர்வலத்தைப் பார்க்கிறார். என் தந்தையை எதிர்த்தா ஊர்வலம் போகிறீர்கள் என்று வெறி கொண்டு காரை வேகமாக கூட்டத்தினுள் ஓட்டி பலரையும் ஏற்றிக் கொன்று இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளார்.

 

இதில் 4 உழவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் பலத்த காயங்களோடு உயிருக்கு போராடி வருகின்றனர். வேகமாகச் சென்று மோதிய வேகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் உட்பட 2 கார்கள் கவிழ, உழவர்களிடமிருந்து தப்பிக்கும் விதமாக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி தப்பி சென்றுள்ளனர். அப்போது உள்ளூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ராமர் காஷ்ய அவர்களை படமெடுக்க முயல அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

இந்த சூழலிலும் சம்பவ இடத்தில் இருந்த உபி காவல்துறை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பாதுகாப்பளித்து தப்பிக்க வைத்துள்ளனர். நேரடி சாட்சியங்கள் இருந்தும், வழக்கு பதியப்பட்டிருந்தும், யோகி ஆதித்யநாத் அரசு ஆஷிஷ் மிஸ்ராவை இதுவரை கைது செய்யவில்லை. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா, தன் மகன் சம்பவ இடத்திலேயே இல்லையென்றும், தன்னுடன் உள்ளூர் நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளார். ஆனால், ஆஷிஷ் மிஸ்ரா ஆயுதங்களோடு தயாரானதை நேரில் கண்டதாக போராட்டத்தில் பங்கேற்ற ஒரு சில உழவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த உழவர்களுக்கு நீதி கேட்கும் விதமாக சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை தடுத்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது சனநாயக விரோத பாஜக அரசு. சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அவர்களை லக்னோ விமான நிலையத்திலேயே முடக்கியது. இத்தகைய அசாதாரண நிலையிலும் பிரதமர் மோடி கருத்துக்கள் ஏதும் தெரிவிக்காமல் எவ்வித சலனமுமின்றி லக்னோவில் ஒரு நிகழ்வில் பங்கேற்கிறார்.

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பி பெறக் கோரி உழவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் உறுதித்தன்மை மோடி அரசை அசைத்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் வேளையில், வழக்கமான தனது சாதிய, மதவாத, இந்துத்துவ வெறியாட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட துடிக்கும் பாஜகவிற்கு உழவர்கள் போராட்டம் பெரும் தடையாகவே உள்ளது. இதன் பின்னணியில் தான் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பேச்சும், அதன் விளைவாக அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி உழவர்களை கொன்ற கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அரசு உண்மைகளை மூடி மறைக்கும் வகையில் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகிறது. ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் இதனை வேடிக்கை பார்க்கின்றன.

YouTube player

புதிய தலைமுறை சானலின் இந்தக் காணொலியில், விவசாயிகளை ஏற்றிக் கொன்ற காரில் இருந்த ஆஷிஷ் மிஸ்ரா தெளிவாகத் தெரிகிறார். அவருடன் பாஜகவினரும் உடன் சென்றுள்ளனர். கோபமடைந்த விவசாயிகள் கார்களுக்கு தீவைத்தனர். 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.