தனது முதல் படமான ‘கத்துக்குட்டி’யில் தஞ்சை விவசாயிகளின் பிரச்சினைகளை தத்ரூபமாக சித்தரித்த இரா.சரவணனின் இரண்டாவது படம் இது.
பாசமலர் தொடங்கி ‘கிழக்குச் சீமையிலே’வரை சொல்லப்பட்ட அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட்தான் இந்த ‘உடன் பிறப்பே’என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சில காட்சிகளை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
கதைச் சுருக்கம் இதுதான்…உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் க்ளைமாக்ஸில் இணைந்து எப்படி ஆரத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் கதை.
ஜோதிகாவின் 50 வது படம். கொஞ்சம் மிகைநடிப்புதான் என்றாலும் மொத்தப்படத்தையும் தாங்கி நிற்கிறார்.
ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். வேட்டி சட்டை முறுக்குமீசை. சிறுநரை என கம்பீரமாக வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல அவர் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் கம்பீரம்தான். ஆனால் அவருக்காக போடப்பட்ட தீம் மியூசிக்கும் ஒற்றை ஆளாய் வில்லன்களை வெளுப்பதும் ஸாரி கொஞ்சம் ஓவர்.
சர்பத் குடிக்கிறதுன்னா கூட சட்டப்படிதான் குடிக்கணும் என்று சொல்லும் மேலும் கருத்து கந்தசாமி வேடம் சமுத்திரக்கனிக்கு. அழுத்தமான வேடம் அமைதியான தோற்றம். ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சசிக்குமாரையும் சமுத்திரக்கனியையையும் ஒரே படத்தில் அடிக்கடி பார்க்க நேரும் ஆபத்தை எதிர்காலத்தில் தயாரிப்பாளர்கள் தவிர்ப்பது தமிழ் சமூகத்துக்கு நல்லது. [ஒரு வேளை ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ ஸ்கீம்ல நடிக்கிறாகளோ?]
சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கும் வேடம். அழகாக இருப்பதோடு அளவாக நடித்திருக்கிறார்.
இந்த கடுமையான அண்ணன் தங்கச்சி செண்டிமெண்டுகளுக்கு நடுவே மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு சூரிக்கு.பாதகமில்லை.
காவல்துறை ஆய்வாளராக வரும் வேல்ராஜ், வில்லன் கலையரசன், சசிகுமார் மகனாக வருகிற சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ், ஆடுகளம் நரேன் ஆகிய அனைவரும் மீட்டருக்கு ஏற்ற மேட்டராய் வந்து போகிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு தரம். இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்… பின்னணி இசையும் நன்றாகச் செய்திருக்கிறார் என்று என்றாவது ஒருநாள் எழுதும் சூழல் வராதா என்று மனம் ஏங்குகிறது.
அருகிப்போய்க் கொண்டிருக்கும் பாச உணர்வுகளோடு, கடன்தவணை கட்டாத விவசாயியின் உழுவை வாகனத்தைப் பறித்துச் செல்லும் மார்வாடிக்கு சசிகுமார் நடத்தும் பாடம், நீரை மண்ணுக்குள் தேடாதே வானத்தில் தேடு என்கிற நம்மாழ்வாரின் சொல் ஆகிய சமுதாய அக்கறைகளை அளவோடு கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
சில இடங்களில் பல ‘சோதனைகள்’ இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உடன்பிறப்பே படம் சிறப்பே.
“உடன்பிறப்பே” தற்போது உங்கள் Amazon Prime Video-வில் இன்று முதல் வெளியாகிறது.