சென்னையில் பெய்த கனமழையால் ‘பீஸ்ட்’படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் படப்பிடிப்புக் குழுவினர் ஜார்ஜியா செல்வது மேலும் தாமதமாகி வருகிறது./
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொட்டிய ராட்சஸ மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் வெள்ளம் போலக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில்,பெரும்பொருட்செலவில், ‘பீஸ்ட்’ படத்துக்கான பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த நான்கு நாட்கள் பெய்த கனமழையால் அந்த ஷாப்பிங் மால் அரங்கைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவே வேறு ஒரு தயாரிப்பாளராக தண்ணீர் சூழ்ண்ட்ய்ஹதற்காக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். சன் பிக்ஷர்ஸ் என்றால் சொல்லவா வேண்டும். செட் மறுபடியும் சீரமைக்கப்பட்டு மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்புப் பணிகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரு முக்கியக் காட்சிக்காக ‘பீஸ்ட்’ படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்லவிருந்தது இந்த மழை பாதிப்பால் தாமதமாகியிருக்கிறது.