சூர்யாவின் ‘ஜெய்பீம்’படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தாலும், அப்படத்தை விடாமல் பல்வேறு சர்ச்சைகளும் துரத்திக்கொண்டிருக்கின்றன.அந்த சர்ச்சைகள் குறித்து கதையின் நிஜநாயகன் நீதியரசர் சந்துரு விளக்கமளித்திருக்கிறார்.
”தன்னுடைய கணவரைத் தேடி வந்த உண்மையான பார்வதி கதையை மட்டும் எடுத்திருந்தால், இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக மட்டுமே வந்திருக்கும். இயக்குநர் த.செ.ஞானவேல் நுட்பமாக யோசித்து கதைக்களத்தை மாற்றினார். வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலையும் புனைந்தார். ஆனால், இதை எப்படிச் செய்யலாம் என்பதுபோன்ற கேள்விகளைச் சிலர் எழுப்புகிறார்கள். முதலாவதாக இது ஒரு படைப்பாளியின் சுதந்திரம்.
’ராசாக்கண்ணுவின் லாக்கப் கொலை வழக்கைத் தழுவி எடுக்கப்பட்ட கதை’ என்றுதான் படத்தின் ஆரம்பத்திலும் எழுத்துபூர்வமாகப் போடப்பட்டது. அப்படியிருக்க உண்மைச் சம்பவங்களை மட்டுமே ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புபவர்கள், அவர்கள்தாம் படம் எடுக்க வேண்டும். இதுபோக உண்மையான பார்வதி – ராசாக்கண்ணு தம்பதியின் குறவர் சமூகத்தைப் பற்றி பேசுவதானால், அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்களே தவிர இன்னும் எஸ்.டி பட்டியலுக்கே மாற்றப்படவில்லை.
நிஜத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சட்டரீதியாக நீதியும் இழப்பீடும் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இனி வரும் காலத்தில் இத்தகைய அநீதி நிகழ்வதைத் தடுக்க வேண்டுமானால் கதைக் களத்தை வேறொன்றாக மாற்றுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைத்தான் இந்தப் படமும் செய்திருக்கிறது. இதுபோக படத் தயாரிப்புக் குழுவினர் குறவர் சமூகத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தனது அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார். கதைக்களத்தை விஸ்தரித்ததால்தான் அனைத்து விதமான விளிம்புநிலையினர் மீதும் கவனத்தைக் குவிக்க இந்தப் படம் தூண்டியிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் குறுகலான பார்வையோடு படத்தைக் குறுக்கு விசாரணை செய்வது வருத்தமளிக்கிறது.
அதேபோல் வன்னியர் சமூகத்தினரைப் புண்படுத்தும் விதமாக, குற்றமிழைத்த போலீஸ்காரர் கதாபாத்திரத்துக்கு பின்னால் அக்னிசட்டி படம் இடம்பெற்ற காலண்டரைக் காட்டிவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் காட்சியில் காலண்டர் மாற்றப்பட்டது. இப்போது இந்து கடவுளரை, வில்லனுடன் சேர்த்துக் காட்டியது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது, காடுவெட்டி குருவைக் குறிப்பதாகவும் வாதிடுகிறார்கள்.
இந்த வழக்கில் அந்தோணிசாமி தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து விடுதலை ஆகிவந்திருக்கிறார். அவருடைய பெயரைப் பயன்படுத்துவது சட்டச் சிக்கலை உண்டாக்கும். ராசாக்கண்ணு இறந்துவிட்டதால் அவரது உண்மையான பெயர் பயன்படுத்தப்பட்டது. என்னுடைய பெயரைப் பயன்படுத்த நான் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆகையால் இந்த இரண்டு பெயர்களும் படத்தில் எடுத்தாளப்பட்டன. ஆனால், இருளர் சமூகத்தில் பார்வதி போன்ற இந்து கடவுளர்களின் பெயர்கள் சூட்டப்படுவதில்லை. மாறாக ’செங்கேணி’ அங்கு புழக்கத்தில் உள்ள பெயர். கதைக்களம் மாறவே பெயர்களும் மாறின. அப்படிப் பார்த்தால் எந்தப் பெயரையுமே வைக்க முடியாது.
“வழக்கறிஞர் சந்துருவாக நடித்த சூர்யா கதாபாத்திரம் ஏன் தானே தோசை சுட்டார்? அவருக்குக் காதலி, தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையா? இவற்றையெல்லாம் படம் காட்டத் தவறிவிட்டது” என்று திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் கேலி செய்ததையும் கேள்விப்பட்டேன். என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும் என்றுகூட ஏன் அவரால் யோசிக்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். என்னுடைய 40-வது வயதில்தான் திருமணம் செய்துகொண்டேன். அதுவரை நானேதான் தோசை ஊற்றிச் சாப்பிட்டு வந்தேன். தனியாக நான் கையாளும் கேஸ்கட்டுகளை நானே தைத்துக்கொண்டேன். அதிலென்ன தவறு? சமூகத்துக்காகத் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு கடைசிவரை மணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த வழக்கறிஞர்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.