இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.
விழாவில் படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர், நடிகர்கள் ‘பருத்திவீரன்’ சரவணன், சமுத்திரகனி, நடிகைகள் சாக்ஷி அகர்வால், இனியா, குழந்தை நட்சத்திரம் டயானாஸ்ரீ , தயாரிப்பாளர் பி. டி .செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில்,
”இந்த இசை வெளியீட்டு விழா திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழா. டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும். ஆனால் ஹீரோ சென்னையில் இல்லை. அவர் சென்னைக்கு வந்தவுடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்தப் படத்தின் ஆடியோவை யார் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும்? என எண்ணினேன். சமூக அக்கறை கொண்ட படம் என்பதால், சமூகத்தின் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை போனில் தொடர்பு கொண்டு அழைத்தேன். விசயத்தை தெரியப்படுத்திய போது எத்தனை மணிக்கு வர வேண்டும்? எங்கு வர வேண்டும்? அதை மட்டும் சொன்னால் போதும் என்றார்.
ஒரு இயக்குநராக அமீர் அருகில் அமர்ந்ததை பாக்கியமாக கருதுகிறேன். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எண்ணிக்கை பெரிதல்ல. தரம்தான் முக்கியம். ஆனால் இந்தப் படத்தை நான் அமீருக்குப் போட்டியாகத் தான் இயக்கி இருக்கிறேன். இந்த வயதிலும் உங்களைப் போன்ற இயக்குநர்களுடன் பயணிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு கால்ஷீட் கொடுக்க வேண்டும்.
ஆரம்பத்தில் புதிது புதிதாக நடிகர்களை உருவாக்கி, வாய்ப்பளித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் இருந்த உத்வேகம் இப்போது இல்லை. இயக்குநர்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதில் சில வசதிகள் இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல், உதவி இயக்குநராகவும், வசனத்தில் உதவி செய்பவராகவும், காட்சிகளை சுவாரஸ்யமாக மேம்படுத்துவதிலும், படப்பிடிப்புத் தள நிர்வாகத்திலும் உதவுவார்கள்.
இந்தப்படத்தில் அண்மைக்காலமாக யாரும் சந்திக்காத சமுத்திரகனியைப் பார்க்கலாம். அழகான ஹீரோ அமைதியான ஹீரோ. இனிமையான ஹீரோ. அவருக்குள் ஒரு கமர்சியல் ஹீரோ ஒளிந்து கொண்டிருக்கிறார். அது அவருக்குத் தெரியவில்லை. நான் அதை வெளிப்படுத்தி இருக்கிறேன். ஒரு கமர்சியல் ஹீரோவிற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. இந்தப் படத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.
நான், இயக்குநர் அமீர், சமுத்திரகனி போன்றவர்கள் சினிமாவை ஒரு வாழ்வியலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
அந்த வழியில் நாங்கள் சினிமாவை ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, இந்த. சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல முடியுமா… என்று பயணப்படுகிறோம். ஏனெனில் சினிமா என்பது ஒரு வலிமையான ஆயுதம். ஊடகம் என்று சொல்ல மாட்டேன். ‘மூன்று திரைப்படங்களைத் தணிக்கை இல்லாமல் இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நாட்டின் தலைவிதியை நான் மாற்றி காட்டுகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா அன்றே சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு சினிமா ஒரு வலிமையான ஆயுதம். அதனால் சினிமாவை சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என திரைத்துறைக்குள் வந்தேன். அதை தற்போது வரை செய்து கொண்டிருக்கிறேன்’ என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசுகையில்,
” இயக்குநர் எஸ்ஏசி இந்த வயதிலும் இளமைத் துடிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படும். உங்களைப் போன்றவர்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது எங்களது கடமை. இதற்காகத்தான் நீங்கள் அழைத்தவுடன் உடனடியாக ஓடோடி வந்தேன். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும் நடிப்பு சொல்லித் தந்திருக்கிறார். காலையில் வேலை செய்யத் தொடங்கி அன்று இரவு வரை உற்சாகம் குறையாமல் பணியாற்றுவார். அவருடன் பணியாற்றிய நாட்கள் மகிழ்ச்சியானவை.
படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு நான் பரிந்துரை செய்தது உண்மைதான். ஏனெனில் திரையரங்குகளில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ‘அப்பா’ என்றொரு படத்தை நான் தயாரித்து இயக்கி வெளியிட்டேன். அந்தப் படம் வெளியாகி நான்கு நாட்களுக்குள் பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்று சொல்லி என் படத்தைத் திரையரங்கிலிருந்து எடுத்து விட்டனர். இதுபோன்ற படங்களுக்கு மக்கள் முதல் நாளில் வரமாட்டார்கள். மக்களால் பேசப்பட்டு.. பேசப்பட்டு… பிறகுதான் திரையரங்கிற்கு வருவார்கள். பத்து நாளுக்குப் பிறகுதான் இது போன்ற படங்களுக்கு வசூல் அதிகரிக்கும்.
‘வினோதய சித்தம்’ என்று ஒரு படத்தை இயக்கினேன். அந்தப் படம் டிஜிட்டல் தளத்தில் இருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன். ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால், அந்தப் படத்தை நான் எங்கு சென்று பார்க்க வைப்பது? அதனால்தான் நான் இயக்குநரிடம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுமாறு பரிந்துரை செய்தேன். எஸ் ஏ சி சார் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருந்தார். திரையரங்க அனுபவம் என்பது முற்றிலும் வேறு. அதை நானும் அனுபவித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.
இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதரவு என்பது மிகவும் குறைந்து விட்டது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது.
மறைந்த என்னுடைய குருநாதர் கே. பாலச்சந்தர் சாருக்கு வழங்கக்கூடிய அதே மரியாதையையும் அதே அன்பையும் இன்றும் எஸ் ஏ சி சாரிடமும் வைத்திருக்கிறேன்.
தோல்வி அடைந்த என்னை நிமிர வைத்து, மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி வளரச் செய்தவர் இயக்குநர் அமீர். என்னை டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக்கியதும் அவர்தான். என்னை நடிகராக்கியதும் அவர்தான்.
நாடோடிகள் படம் பார்த்த பிறகு இயக்குநர் கே. பி, என்னிடம் ‘இயக்குநர் அமீரின் தாக்கம் உன்னிடத்தில் நிறைய இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.