‘மாற்றான்’ படத்தின் நீளம், ரிலீஸான அன்று இரண்டு மணி நேரம் நாற்பத்தி ஒன்பது நிமிடங்களாக இருந்தது. பத்திரிகையாளர் காட்சி முடிந்த போது, அவர்களின் கருத்து கேட்க ப்ரிவியூ தியெட்டருக்கு வெளியே காத்திருந்த கே.வி.ஆனந்திடம் பலரும், பலவகைகளில் சொன்ன ஒரே கருத்து, ‘படம் ரொம்ப நீளமா இருக்கு. ஒரு அரைமணி நேரம் ட்ரிம் பண்ணலாம்’.
தாய்லாந்து விமானத்தில் கருத்தரித்த காஸ்ட்லி கதையாச்சே. கேப்பாரா கே.வி.ஆனந்த். அனைவருக்கும் நக்கலாகப் புன்னகைத்தபடியே’ ஜனங்க கிளாப்ஸ் அடிப்பாங்க பாருங்க. இந்தப் படத்துல ஒரு ஃப்ரேம் கூட கைவைக்கமுடியாது’ என்றே பதிலளித்து வந்தார்.
தியேட்டரிலோ மக்கள் கிளாப்ஸ் அடிப்பதற்கு பதிலாக, படம் ஃப்ளாப்ஸ் என்பதற்கு அறிகுறியாக, அரும்பெரும் கொட்டாவிகளைவிட, தகவலறிந்த தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் மூலம், ’ உங்க டைரக்டர் கிட்ட சொல்லி,படத்தின் நீளத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்கச்சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்ப,அப்போதும் உண்மை நிலை உணராத ஆனந்த் செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிவிட்டு, தலைமறைவாகி விட்டாராம்.
சிலமணி நேரங்கள் பொறுமை காத்த தயாரிப்பாளர் தரப்பு, கே.வி. ஆனந்தின் முரட்டுப் பிடிவாதத்தை உணர்ந்துகொண்டு, தாங்களே களம் இறங்கி படத்தில் கத்தரி போட ஆரம்பித்தார்களாம். அவ்வாறு சுமார் 26 நிமிடங்கள் வெட்டப்பட்டு, இப்போது படம் இரண்டு மணிநேரம் இருபத்து மூன்று நிமிடங்களே ஓடுகிறதாம்.
மொத்தப்படமே கொடுமைங்கிறபோது, அந்தக்கொடுமையில இப்ப கொஞ்சூண்டு குறைச்சிட்டோம் இப்ப போய் பாருங்கன்னு சொன்னாலும் கொடுமை,, கொடுமைதானங்க.