நல்ல தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை தமிழ் சினிமா எப்போதும் கண்டுகொண்டதே இல்லை. அதையும் மீறி ஒருவேளை நடந்துவிட்டால்…? ஒரு மசாலா எழுத்தாளர் எப்படி கொந்தளிக்கிறார் பாருங்கள்…
அசோகமித்திரன், ஆதவன்,ஜெயமோகன் போன்றோரின் கதைகளைப் படமாக்குவதை வசந்த் கைவிட வேண்டும் என்று தனது முகநூல் பதிவு மூலம் கோரிக்கை வைக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர்.
… 2018ல் முடிந்த படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல அங்கீகாரங்களை சூட்டிக்கொண்டு இப்போதுதான் பொதுப் பார்வைக்கு சோனி லைவ் வழியாக வந்திருக்கிறது.
ஆகையால் 2021ல் வெளிவந்த கிரேட் இண்டியன் கிச்சனை முதலில் பார்த்தவர்கள் வஸந்தின் முதல் சிந்தனையை தவறுதலாக புரிந்துகொண்டுவிட சாத்தியமிருப்பதால் முதலில் வருடங்களைக் குறிப்பிடுகிறேன்.
மூன்று காலகட்டங்களில் மூன்று வகை பெண்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை கவிதை மாதிரி சொல்லியிருக்கிறார்.
டொமெஸ்ட்டிக் வயலன்ஸ் என்பது உடல்மீது நிகழும் வன்முறை மட்டுமல்ல..மனம் மீது நிகழும் வன்முறைகளும்தான் என்று புரியவைக்கின்றன மூன்று கதைகளும்..
அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் எழுதிய கதைகளுக்கு காட்சி வடிவம் தந்திருக்கும் இயக்குனர் ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் பாத்திரங்களைச் செதுக்கியிருக்கிறார்.
ஒரு காட்சியமைப்பை யாரின் பார்வையில் வழங்குவது என்பதில் துவங்குகிறது திரைக்கதை ஆளுமை. மனரீதியாக பாதிக்கப்படும் பெண்களின் உணர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன் என்று அவர்களை பிழிய பிழிய அழச்செய்திருக்கலாம். வார்த்தைகளை எரிமலை போல வெடிக்கச் செய்திருக்கலாம். ஒரு காட்சியிலும் எதார்த்தம் மில்லி மீட்டர் அளவும் மீறவில்லை.
நேர்த்தியான கலை ஆளுமை கொண்ட இயக்குனரின் அழகான மூன்று படைப்புகளின் இந்தத் தொகுப்புக்கு மதிப்பு கூட்டுவது இளையராஜாவின் பின்னணி. சைலன்சை ஒரு இசையாக பொருத்தமாகப் பயன்படுத்தத் தெரிந்த வித்தகர் அவர்.
இவை நீதிக் கதைகள் அல்ல. ஆகவே நாளை முதல் இப்படி நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரையாக எதுவும் இல்லை. ஆனால் கொஞ்சம் சிந்திக்க வைப்பவை. வேறென்ன வேண்டும்?
ஒவ்வொரு கதையும் இன்னும் சுருங்கச் சொல்லப்பட்டிருக்கலாமோ என்கிற கேள்வி நடுநடுவில் எட்டிப்பார்க்கும் அயர்ச்சியால் ஏற்படுகிறது. நம் மக்கள் வேகமாக கதை சொல்லி சொல்லி வாட் நெக்ஸ்ட் என்று ஒரு கேள்வி உடனே உடனே வந்துத்தொலைக்கிறது.
நல்ல சிறுகதைகளை பிரபல சீரியஸ் எழுத்தாளர்களிடம்தான் தேடியெடுக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தை வஸந்த் கைவிட்டால் இன்னும் சிறந்த கதைகளும் அவருக்குக் கிடைக்கக்கூடும். அல்லது இங்கும் ஒரு பிராண்ட் வேல்யூ அவருக்குத் தேவைப்படுகிறதோ என்னவோ..
இந்தப் படம் மாற்று ரசனைகள் கொண்டோருக்கானது. பொழுதுபோக்கு ரசனைக்காரர்கள் மாற்றுப் பாதையில் பயணிக்கலாம்.