அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா’ புயல் இன்னும் இரு தினங்களில் தமிழக திரைரங்குகளில் திரையிடப்பட உள்ள நிலையில், அப்படத்தின் இரு பாடல்கள் வேலவெட்டி இல்லாதவர்களின் சரக்குக்கு சைடிஷ் ஆக மாறியுள்ளன. அதிலும் ‘ம்’ சொல்றியா மாமா…ம்ஹூம் சொல்றியா மாமா’ பாடலுக்கு திடீரென கிளம்பியுள்ள ஆண்கள் பாடலால் தங்கள் மானத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக புலம்பி வருகின்றனர்.
இது குறித்து கவிஞர் விவேகாவிடம், ‘இந்த பாடல் எழுதும்போது இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பும் என கணித்தீர்களா? என்று கேட்டபோது,…
“இல்லை. முதலில் தெலுங்கில் இந்த பாடல் வேறு மாதிரியாக இருந்தது. ‘கருப்போ சிவப்போ, ஆனால் நீ சந்தோஷமாக இரு! நீ குள்ளமா நெட்டையோ யாராவது உன்னை பார்த்தால் குதூகலமாக இரு!’ என்பது போன்ற பொருள் வரும் வகையில்தான் அந்த பாடல் முதலில் அமைந்திருந்தது.
பிறகு, இந்த பாடல் நான் பார்த்துவிட்டு நான் ஒரு பிரதி எழுதி கொடுத்தேன். ‘எந்த தடையும் இல்லை. ஜாலியாக எழுதி கொடுங்கள்’ என்றுதான் தேவிஸ்ரீபிரசாத் சொல்லியிருந்தார். நான் எழுதிய தமிழ் வரிகளில் ‘ஆம்பள புத்தி’ என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், ‘வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்கமாறும் ஒன்னுதான்’ என்ற வரியோடு முடித்திருப்பேன். அதை பார்த்ததும் இன்னும் கூடுதல் சந்தோஷம் அவருக்கு. பிரமாதம் என என்னை பாராட்டியவர், இந்த மாதிரியான கான்செப்ட்டில்தான் இந்த பாடல் வேண்டும் என்று சொல்லியதோடு தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ‘ஆம்பள புத்தி’ உள்ளிட்ட சில வரிகளில் மாற்றங்கள் செய்தார்கள். இப்படி ஒரு வித்தியாசமான பாடலாக செய்தது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது”.
இந்த பாடல் தொடர்பாக ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகார் குறித்தான கேள்வியை தொடங்கும்போதே சிரித்தார். “ஆண்கள் சங்கம் என்ற அமைப்பை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, ஆண்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்காக இதற்கு முன்பு என்னத்துக்காக போராடி இருக்கிறார்கள்? ஆண்களில் அயோக்கியர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதெல்லாம், எதிர்த்து குரல் கொடுத்தார்களா? என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.
அவர் சொல்வதும் சரிதானே இப்படிப்பட்ட சல்லிப்பயல்களுக்கு சங்கம் எதற்கு?