aadhi-bhagawan-audio1

இசை:யுவன் சங்கர் ராஜா.      இயக்கம் :அமீர்.

 யுவன் சங்கர் ராஜா ரெயின்போ காலனியில் துவங்கி ஒரு வித்தியாசமான பேட்டர்னில் இசை அமைத்து வருகிறார். அந்தப் பேட்டர்னோடு ஒத்துப் போகிறது ஆதிபகவனின் பாடல்கள்.

பருத்திவீரனுக்குப் பின் அமீருடன் யுவன் கைகோர்த்திருக்கும் படம் இது. பருத்திவீரனில் வித்தியாசமான கிராமத்திய இசையைக் கொடுத்து பாடல்களை படு ஹிட்டாக்கிய

யுவனுக்கு இந்தப் படத்தில் அந்தக் கூட்டணி மீது ரசிகர்கள் கொண்ட எதிர்பார்ப்பை ஈடு செய்யவேண்டிய நிர்ப்பந்தம்.

ஆதிபகவன் முழுக்க முழுக்க நகரத்து பிண்ணனிப் படம். எனவே இசையை பருத்திவீரனுடன் ஒப்பிடவே முடியாது. என்றாலும் பருத்திவீரன் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கவேண்டியதில்லை என்று பாடல்கள் காட்டிவிட்டன.

1. அய்சலாமி அய்சலாம் – மனசி ஸ்காட், ராகுல் நம்பியார்.   பாடல் – ஸ்நேகன்

ராத்திரி டாஸ்மார்க் பார் செட்டப்பில் குடிகாரர்கள் மத்தியில் சேலையை பாதி தெரியவிட்டு செக்ஸியாக பாடி ஆடும் ஒற்றைப் பெண்ணின் வழக்கமான காமரசம் ததும்பும் பாடல். கேட்க வேண்டாமென்று நினைக்க ஆரம்பிக்கும் கணத்தில் பாடலின் நடுவில் திடீரென்று மெலடியான ஒரு பிட்டைப் போட்டு பாட்டை கேட்க வைத்துவிட்டார் யுவன்.

2. காற்றிலே நடந்தேனே – உதித் நாராயண், ஸ்வேதா பண்டிட்.    பாடல் – அறிவுமதி

மாண்டலின் மெலடியில் கர்னாடிக் கலந்து உதித் நாராயண் பாடும் இந்தப் பாடல் நிச்சயமான ஹிட் ரகம். தமிழை தமிலாகப் பாடும் உதித் நாராயண் குரல் நமக்கு எப்படி நன்றாகப் பிடிக்கிறது ? யாராவது இசை வல்லுநர்கள் காரணம் சொல்லுங்களேன். ஸ்வேதா பண்டிட் குரலும் நன்று. அவர் பாடும் பகுதி எங்கேயோ ஏற்கனவே கேட்ட பாடலொன்றின் பகுதி போல இருக்கிறது.

3. யாவும் பொய்தானா – மாதுஸ்ரீ.     பாடல் – ஸ்நேகன்

நாயகி பாடும் சோலோ மெலடி வகையான இந்தப் பாடலில் மாதுஸ்ரீயின் குரல் நன்றாக இருக்கிறது. ஸ்நேகன் வரிகள் இதம்.

யுவனின் இசைக்கோர்வையும் நன்றாக இருக்கிறது. இதமான ஒரு மெலடி.

4.ஒரு துளி விஷமாய் – ஷரிப், ஷ்ரேயா கோஷல்.       பாடல் – ஸ்நேகன்

இது ஒரு சோகப்பாடல். இந்த வட இந்திய கவ்வாலி வகைப் பாடலின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது. நடுவில் ஷ்ரேயா கோஷல் பாடும் போது வெஸ்டர்னாக மாறி விடுகிறது. வித்தியாசமாய் ஏதோ முயன்றிருக்கிறார். கேட்கும்படியான பாடல் தான்.

5. அகடம் பகடம் – மோஹித் சௌகான்.     பாடல் – மனோஜ்

தற்காலத்திய வடஇந்திய ஆல்பங்கள் மற்றும் பாடல்களின் பாணியில் முழுக்க முழுக்க பாடப்படும் இது ஒரு இந்திப் பாடல். தமிழ்ப் பாடல் அல்ல. யுவன் இந்திக்குப் போறீங்களா ?  கேட்கலாம்.

6. பகவான் – ராப் இசை

பகவான் தீம் பாடல் மாதிரி வரும் இப்பாடலை ராப் இசையில் முயன்றிருக்கிறார். வெற்றியடைந்திருக்கிறார். ராப் பாடல் கேட்கும்படி வித்தியாசமாகத்தான் உள்ளது.

மொத்தத்தில் யுவன் ஆதிபகவனுக்கு இசை அமைத்தது நன்றாகவே வந்திருக்கிறது. பாடல்களின் இசைக் கோர்வையில் அவரது சிரத்தையும், ஈடுபாடும் தெரிகிறது.

ஆதிபகவன் பருத்திவீரன் போல் உங்களை உலுக்கி எடுக்கும் இசையல்ல. ஆனால் நீங்கள் பத்திரப்படுத்தி வைக்க விரும்பும் ஒரு ஆல்பமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

–மருதுபாண்டி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.