கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படக் கலைச்சேவைக்காக தனது உடல்,பொருள், ஆவி ஆகிய அத்தனையையும் கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் பணயம் வைத்து வருபவர், கவிஞரும் கூட என்று அறியப்பட்ட லீனா மணிமேகலை.
இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாகப்பட்டது ‘மி டூ’பஞ்சாயத்து பரபரப்பாக இருந்தபோது, தான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுசி கணேசன் உட்பட ஒரு சிலர் மீது ’என்னைக் கையப்புடிச்சு இழுத்துட்டானுங்க’ என்று அவதூறு கிளப்பியிருந்தார். அந்த ஒரு சிலரில் இயக்குநர் சுசி கணேசனுக்கு மட்டும் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட பதிலுக்கு லீனா மணிமேகலை வம்புக்கிழுத்து கோர்ட், போலிஸ் கேஸ் என்று அலையவிட்டார்.
சுசி தொடர்ந்த அந்த வழக்கின் காரணமாக லீனா மணியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. லீனாவோ வருடத்தில் அட்லீஸ்ட் ஆறு மாதங்களாவது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கலை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர். பாஸ்போர்ட் முடக்கப்பட்ட வகையில் படு அப்செட் ஆன அவர் தனது முழு பலத்தையும் மேற்கொண்டு பாஸ்போர்ட் முடக்கத்துக்கு கீழ்க்கோர்ட், மேல்கோர்ட், நடுகோர்ட்களில் ஒவ்வொரு முறையும் தடை வாங்க, அதே கோர்ட்களில் சுசி கணேசனும் விடாமல் துரத்தி தடை வாங்கி வந்தார்.
இதன் லேட்டஸ்ட் தொடர்ச்சியாக பாஸ்போர்ட் மண்டல அதிகாரி முடக்கி வைத்திருந்த லீனாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.விடுவாரா கணேசன்? அப்படி அவரது பாஸ்போர்டை ஒப்படைக்கக்கூடாது என்று அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய தற்போது பாஸ்போர்ட் மீண்டும் முடக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், லீனா-சுசியின் வழக்கில் யார் கையை யார் புடிச்சி இழுத்தது என்று நான்கே மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் லீனா, சில மத்தியஸ்தர்கள் மூலம் சுசி கணேசனை அணுகி பாஸ்போர்ட் கிடக்குறதுக்கு ‘ம் சொல்லுங்க’ என்று சமாதானப்பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருகிறாராம்.