பொறுப்பான சிட்டிசன், தேர்தலின்போது கியூவில் நின்று ஓட்டுப்போடுபவர், தனது ரசிகர்கள் வீட்டுக்குப் பொறுப்பான பிள்ளைகளாக இருந்தால் மட்டும் போதும் என்று ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர், அவ்வளவு ஏன் சமீபத்தில் தனது ‘தல’ என்ற படத்தைக் கூட துறந்தவரான அஜீத், இப்படி பொறுப்பற்ற ஒரு காரியம் செய்து பெற்றோர்களை வெறுப்பேற்றலாமா என்றொரு சிறப்பான பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் தற்போதைய தமிழ் இலக்கியத்தின் அல்டிமேட் ‘ஹேப்பனிங்’ எழுத்தாளரான சரவணன் சந்திரன். இப்பதிவை கவனமாகப் படிப்பவர்கள் படத்தின் மீது பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்து அந்த ஆபத்தான பைக் ரேஸ் காட்சிகளுக்கு கத்தரி வைக்கச்சொல்லலாம்…
Saravanan Chandran
…அந்தப் படத்தின் முன்னோட்ட காட்சி வந்த அன்றே சொல்லி இருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள். கொஞ்சம் வலிமை குறையட்டும் எனக் காத்திருந்தேன். ஒருமுறை நடிகர் விஜய்யிடம், சிறப்பிதழ் பணிக்காகச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அது ஒலிப்பதிவாகவும் என்னிடம் இருக்கிறது.
பாண்டிச்சேரியில் ஒரு பையனைப் பார்த்தேன். சட்டையின் அத்தனை பட்டன்களையும் கழற்றி விட்டு, உள்ளே சிவப்பு நிற பனியன் போட்டிருந்தான். வலதுகையில் சிவப்புநிறக் கைக்குட்டை ஒன்றைக் கட்டியிருந்தான். நிச்சயமாகப் போதையும் உண்டு. அவனை மறித்த ஆட்டோ ஒன்றின் முன்பக்க கண்ணாடியைக் கையால் ஓங்கிக் குத்தி உடைத்துவிட்டு, கையை உதட்டில் வைத்து முத்தம் தருவதைப் போல ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, ரத்தம் சொட்டுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் சாலையைத் தாண்டிக் குதித்து ஓடினான்.
இந்தச் சம்பவத்தைச் சொல்லி, “ஏங்க கண்ணாடியை எல்லாம் இப்படி உடைக்கக் கத்துக் கொடுக்கக் கூடாது” என்றேன் அவரிடம். பதில் பேசாமல் ரசித்துப் புன்னகைத்துக் கொண்டார்.
இப்போது அஜீத் நடித்திருக்கிற படமொன்றில் சாலையில் அவர் இருசக்கர வாகனத்தை வெறித்தனமாக ஓட்டுவதைக் காட்டுகிறார்கள். அவர் ஒரு ரேஸர் என்பது எனக்குத் தெரியும். ஒருதடவை புகழ்பெற்ற ரேஸரான அஸ்வின் சுந்தரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “நல்ல ரேஸர் ட்ராக்ல போய் ஓட்டுங்கன்னுதான் யாருக்கும் பரிந்துரைப்பான். ரோட்டில வேகமா ஓட்டிக் காட்ட மாட்டான்” என்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அஸ்வினும் எம்.ஆர்.சி நகரில் காரை வேகமாக ஓட்டிப் போய் விபத்தில்தான் ஒருநள்ளிரவில் இறந்து போனார்.
ஆகவே இனியாவது அஜீத் “ட்ராக்கில்” ஓட்டச் சொல்லி உரக்கச் சொல்லித் தரவேண்டும். மற்றபடி அவரது பல செயல்களுக்கு நான் ரசிகன்தான். இன்று அதிகாலை பைக்கின் முன் சக்கரத்தைக் கடற்கரைச் சாலையில் ஒரு சிறுவன் தூக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததால் இதைச் சொல்லத் தோன்றியது. தவிர இன்று அமாவாசை என்பதால் கடையில் வெட்டியாக அமர்ந்திருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.