கேள்வி: பொருளாதார ஆய்வறிக்கை “கோவிட்டுக்கு முந்தைய அளவுகளுக்கு” (Pre Pandemic levels) வந்து விட்டோம் என்று நம்பிக்கை தந்துள்ளதே?
க.சுவாமிநாதன்
ஆய்வறிக்கை என்பது மருத்துவப் பரிசோதனை மாதிரி… அது ஒழுங்காக நடந்தால்தான் மருந்து தர முடியும்.
ஆனால் ஸ்கேன் இயந்திரம் பழுதானது போல தெரிகிறது. இந்திய நாடு முழுக்க மக்கள் படும் பாடுகள் அந்த ஸ்கேனில் வரவேயில்லை. அப்புறம் எப்படி பட்ஜெட்டில் தீர்வுகளை இந்த அரசு அறிவிக்கும்!
கோவிட்டுக்கு முந்தைய நிலைமைக்கு வந்து விட்டோம் என்று சொல்வதே உண்மையா என்பது வேறு. உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் போதுமா? அது வளர்ச்சியா? என்ற கேள்விகள் எல்லாம் உள்ளன. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொல்லி இருப்பது போல
” 31.03.2020 இல் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை எட்டுவோம் என்பதே. இரண்டாண்டுகள் பின்னுக்கு போயுள்ளோம் என்று பொருள் “.
வேலை வாய்ப்பில் எங்கே இருக்கிறோம்? வேலையின்மை விகிதம் கடந்த ஜனவரி 2021 ஐ விட டிசம்பர் 2021 இல் அதிகம். 5.30 கோடி பேருக்கு வேலை இல்லை. இதில் முனைப்போடு வேலை தேடுபவர்கள் 3.70 கோடி பேர். இது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE – Centre for Monitoring Indian Economy) தகவல். இது பொய்யா? பொய் என்று சொல்வதற்கு அரசிடம் என்ன தரவுகள் உள்ளன? பிரச்சினைகளை ஆய்ந்து பேசுவதற்குத்தானே அறிக்கை. அதை விட்டு ஏதோ கடிதத்தில் சம்பிரதாயமாக துவங்குவது போல “நலம். நலமறிய அவா” என்று இருப்பதா ஆய்வறிக்கை.
இந்தியாவின் ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஆக்ஸ்பாம் அறிக்கை எச்சரித்து இருப்பது எல்லாம் கற்பனையா? இந்தியாவில் கோவிட் துவங்குவதற்கு முன்பாக 102 பில்லியனர்கள், இன்று 142 பில்லியனர்கள் என்பது உண்மை இல்லையா? முதல் 100 பணக்காரர்களின் செல்வம் ரூ 23 லட்சம் கோடியில் இருந்து (மார்ச் 2020) ரூ 56 லட்சம் கோடியாக (நவம்பர் 2021) உயர்ந்திருப்பது உண்மை இல்லையா? இதே காலத்தில் 15 கோடி ஏழை இல்லங்கள் வருமான இழப்பிற்கு ஆளாகி இருக்கிற அவலம் அரசுக்கு தெரியாதா? மூன்று ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மட்டும் 8 லட்சம் கோடி வசூல் என்றால் அதில் பெரும் பகுதி சாதாரண, நடுத்தர மக்களிடம் இருந்து உறிஞ்சப்பட்டது தானே? வருவாயின வரவுகள் அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கை மகிழ்வது குரூரம் இல்லையா? இரண்டரை கோடி பேர் வறுமைக்குள் புதிதாக தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தெரியாதா?
ஏர் இந்தியாவை விற்று விட்டோம், தனியார் மயத்திற்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது என்று கொண்டாடி இருக்கிறது அறிக்கை. இதில் குதிப்பதற்கு என்ன இருக்கிறது? முன்னோர் சொத்தை அழிப்பதில் என்ன அவ்வளவு சந்தோசம்! உருவாக்கியவர்களுக்குதானே வலிக்கும்… உடைப்பவர்களுக்கு எப்படி வலிக்கும்?
நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்க என்ன வழி?
நுகர்வு அதிகமாக மக்கள் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்க என்ன செய்யப் போகிறார்கள்?
வேலை உருவாக்கத்திற்கு என்ன திட்டம்? அரசு முதலீடுகள் அதிகரிக்குமா?
வருமான திரட்டலுக்கு என்ன அணுகுமுறை?
மணிச் சப்தமே கேட்கவில்லை. எப்படி யானை வரும்! அதனால்தான் பட்ஜெட்டும் எந்த விடையையும் தரவில்லை.
நன்றி.செவ்வானம்