நடிகர் நாசர் இதுவரை ‘அவதாரம்’, ‘தேவதை’, ‘மாயன்’, ‘பாப்கார்ன்’ என்று நான்கே படங்கள்தான் இயக்கியிருக்கிறார். அதில் அவரது கலைத் தன்மை வரிசையாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் பாப்கார்னில் படுத்துவிட்டது.
இம்முறை குழந்தைக்கான சினிமாவில் தனது இயக்கத்தின் கலைத் தன்மைக்கு பழையபடி மெருகேற்றியுள்ளார் நாசர். அது சுன் சுன் தாத்தா என்கிற மலேசியாவில் எடுக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப் படம்.
பெற்றோர் இருந்தும் தனித்து விடப்படும் இக்கால சூழல் கொண்ட சிறுவனின் வாழ்க்கை நிலை பற்றிய படம். தாய் ஒரு நாடு, தந்தை ஒரு நாடு என்று சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்க இருவரின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் தனிமைத் தவிப்பை ‘சுன் சுன் தாத்தா’ பதிவு செய்திருக்கிறது.
முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அன்புக்கு ஏங்கும் சிறுவன் ‘அபி’யாக நாசர் தன் அன்பு மகன் அபியையே நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் ‘சுன் சுன் தாத்தா’வாக நடித்திருப்பவர் ஒரு மலேசிய நடிகர்.
அதேபோல் தன் படங்களில் தானே நடிக்கும் வழக்கமுள்ள நாசரும் இதில் தன் பையன் அபியின் தந்தையாகவே நடித்திருக்கிறார்.
தனிமையின் வெறுமையை உணர்த்தினாலும் படம் மனவியல் குறைபாடுகளை மட்டுமே பேசிச் செல்லாமல், இயல்பான வாழ்வியல் கதையாகவே கடந்து சென்றிருப்பது படத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.
‘சுன் சுன் தாத்தா’ மூலம் நாம் பரபரவெனத் தேடி ஓடி வாழும் மேற்கத்திய நகரியல், நுகர்வியல் கலாச்சாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நாசர் இயக்கத்தில் மீண்டும் புதிய தடங்களைப் பதிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.