சில படங்கள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பார்க்கும்போது சர்ப்ரைஸ் கொடுக்கும். இந்த பயணிகள் கவனிக்கவும் அப்படி கவனிக்கப்படவேண்டிய படம்.

கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று உரத்துச் சொல்லும் படம்.

சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார் நடிகர் விதார்த். தான் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்குரிய நியாயம் சேர்த்து நடித்துக் கொண்டிருக்கும் அவர், இந்தப் படத்தில் சிறப்புத் திறன் கொண்டவராக நடித்திருக்கிறார். காது கேளாத வாய் பேச இயலாத அந்தப் பாத்திரத்தை அற்புதமாக நடித்துக் கடந்திருக்கிறார் விதார்த்.

அவர் பேசுவது நமக்கு புரியாமல் புரிய வேண்டும் என்கிற அளவுகோலில் இம்மியளவும் பிசகாமல் வார்த்து எடுத்து அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் விதார்த் கிளைமாக்ஸ் காட்சியில் தன் வாழ்வை தன்னையறியாமல் சிதைத்தவரை மன்னிக்கும் இடத்தில் கண்களில் நீர்வரவழக்கிறார்.

அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியாவுக்கு சிறிய வேடம்தான் என்றாலும் கிடைத்த இடத்தில் எல்லாம் தன் இயல்பான நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக மனம் புழுங்கி கண்ணீர்விடும் கணவனைத் தேற்றும் இடத்தில் இப்படி ஒரு மனைவி அமைந்தால் எந்த பிரச்சனையையும் ஒரு மனிதன் சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது.. ஆனால் அப்படி ஒரு மனைவி சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதுதான் சுடும் யதார்த்தம்.

விதார்த்தின் குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் அற்புதமான தேர்வில் வருகிறார்கள். அப்பாவைத் தவறாக புரிந்து கொண்டு பின்னர் உண்மை தெரிந்ததும் கண்கலங்கும் பதின்பருவ மகனாக நடித்திருக்கும் சிறுவன் மனதில் நிறைகிறார்.

விதார்த்துக்கு நிகராக இன்னொரு நாயகனாக வருகிறார் கருணாகரன். துபாய் ரிட்டன் ஆக வரும் அவர் தன் சிறு வயது தோழியை ஒருதலையாக காதலித்து தொட்டி தொட்டியாக பூச்செடிகளை வாங்கிக்குவிப்பது புன்னகைக்க வைக்கிறது.

அவர் இயல்பாக செய்யும் ஒரு தவறு விதார்த் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே கதையாக இருக்க அந்த உண்மை தெரியும் நேரத்திலிருந்து குற்ற உணர்ச்சியிலும், தான் செய்த பாவம் தன்னை திரும்பி வந்து தாக்குமோ என்ற அச்சத்திலுமாக நகைச்சுவை தாண்டி உருக்கமாகவும் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் தெரிந்து ரசிகர்களின் கருணையைச் சம்பாதிக்கிறார் கருணாகரன். இனி அசட்டுத்தனமான காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இப்படி ஒரு இடம் பிடிப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லது.

அவரது காதல் மனைவியாக வரும் மாசம் சங்கரும் அழகாகவும் அளவாகவும் நடித்து பாத்திரத்தில் நிறைகிறார். முதலிரவில் கூட தன்னை தீண்டாமல் ஒரு ஆசை வார்த்தை கூட பேசாமல் தனித்திருக்கும் கணவனிடம் மனம் நொந்து கொள்ளாமல் சிம்பதி சம்பாதிக்கும் தம்பதியாக மனம் கவர்கிறார்.

மலையாள சினிமாவில் இருந்து வாங்கிய ஒரு கதையைப் பிடித்து இன்றைய சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொல்லி அலுப்பில்லாமல் அதே நேரத்தில் அழகாகவும் திரைக்கதை அமைத்து இந்த படத்தை ரசிக்கும்படி வெற்றிவேல் என முழங்கவைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.சக்திவேல்.

ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த படம் நிச்சயம் உள்ளம் கொள்ளை கொள்ளும்..கனமான அதே சமயம் கவனமான பயணம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.