அந்தக் காலத்தில் ஏ.பீம்சிங் எடுக்கும் படங்கள் அனைத்தும் குடும்ப, மனித உறவுகளைப் பெருமைப்படுத்தும் விதமாக இருக்கும். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லயே என்று யாரேனும் ஏங்கினால் அவர்களுக்கு இந்தப்படம்  கடுமையான காணிக்கை.

நல்ல மனிதனாகப் பெயரெடுத்த ஒருவன், எப்படி அவன் குடும்பத்துக்காக மாமனிதனாக உயர்ந்தான் என்பது கதை என்று இயக்குநர் சீனு ராமசாமி நினைத்துக்கொண்டிருப்பதாக நாம் நினைத்துக்கொள்வது கதைக்கும் நமக்கும் நல்லது.

இளையராஜாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமியிடம் என்ன பிரச்சினையோ தெரியாது. ஆனால் இளையராஜா மீது சீனுவுக்கு அத்தனைப் பாசம் இருக்கிறது என்று நாம் கமிட் பண்ணிக்கொண்டால், அடுத்த மேடையில் ராஜாவை நினைத்து அவர் அழ எத்தனிக்க, உடனே விஜய் சேதுபதி பதறி எழுந்து தண்ணீர் பாட்டிலத் திறந்து சீனுவுக்கு கொடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலை நிகழாது. எனவே சீனு ராமசாமிக்கு ராஜா மீது பயங்கர பாசம் இருக்கிறது. அதனாலேயே கதை நடக்கும் களமாக அவர் ராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரத்தையே தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்பதில் தொடங்கி, அவர் பாசத்தை அடிக்கடி நிலை நாட்டுவோம்.

பண்ணைப்புரத்தின் முதல் ஆட்டோ ஓட்டுனர் என்ற பெருமையுடன் விஜய்சேதுபதி தனது குடும்பத்துடன் கீழடுக்கு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தனது குழந்தைகளும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் போல ஆங்கிலம் பேசும் பள்ளியில் படிக்க வேண்டும் என நினைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட, அவரைக் காண்பித்து பணத்தை வசூலித்த ரியல் எஸ்டேட் முதலாளி ஓடிவிட இவரும் குடும்பத்தை பிரிந்து தலைமறைவாகிறார்.

கேரளா, காசி என்று சுற்றித் திரிந்த விஜய் சேதுபதி என்ன ஆனார், அவர் குடும்பம் என்ன ஆனது என்பதெல்லாம் உணர்ச்சிக் காவியம்.

விஜய் சேதுபதி நடிப்பின் அதல நீளம் என்னென்ன என்று சரியாகத் தெரிந்து வைத்திருக்கும் சீனுராமசாமி இந்த படத்தில் அவருக்காகவே இந்த பாத்திரத்தை படைத்திருக்கிறார். காயத்ரியின் அப்பா விஜய் சேதுபதியின் ஆட்டோவில் மகள் திருமணத்துக்கு வாங்கிய நகைகளை தவற விட்டுப்போக, அதை அவர் வீட்டில் கொண்டு சேர்க்கும் நேர்மையே அவர் மீதான நல்லெண்ணத்தை காயத்ரிக்கு ஏற்படுத்துகிறது.

“இனிமே பார் என் ஆட்டத்தை…” இன்று ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கும்போது ஆகட்டும், அங்கே தான் பகடைக்காயாக பயன்பட்டு விட்டது தெரிந்தது மருகும்போது ஆகட்டும் வீட்டைவிட்டு ஓடுவதைக் கூட குழந்தைகளிடம் நயம்பட சொல்லிவிட்டு செல்வதாகட்டும், அதற்குப்பின் வருடக்கணக்கில் குடும்பத்தை பார்க்காமல் தனித்து இருப்பதில் ஆகட்டும் விஜய் சேதுபதி நடிப்பின் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார். அப்படியே மிஸ் ஆனாலும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் தேசிய விருதே மிஸ் ஆகும்.

அதிலும் தன் உயிர் நண்பன் வாப்பாவிடம் தன் சூழலை சொல்லி தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லும் கட்டம் நடிப்பு பிரியர்களுக்கு நவரச விருந்து. அந்த பிரேமை கொஞ்சம் கூட ஆட்டாமல் அசைக்காமல் அவர் நடிப்புக்காகவே கேமராவை ஆணி அடித்து வைத்து எடுத்து வைத்து விட்டார் இயக்குனர். அந்த ஆணி பண்ணைப்புரத்தில் இன்னும் புடுங்கப்படாமலே இருக்கிறது என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு.

அவருக்கு ஈடாக ஆனால் அலட்டிக்கொள்ளாத அறத்துடன் வரும் காயத்ரி நம்மை வெகுவாக கவர்கிறார். தன் ஒழுக்கத்தை தவறாக பேசும் அண்ணனை அடிக்க குழவிக் கல்லால் தாக்க முற்படும் போது ஆகட்டும் அந்த நிமிடமே விஜய் சேதுபதி வந்து என்னுடன் வா என்று அழைக்கும் போது அவர் பின்னாலேயே பூனைக்குட்டி போல் வாழ்க்கையை தொடர்வது ஆகட்டும் காயத்ரியின் நடிப்பு வேறு உயரம்.

இவர்களுக்கு சற்றும் சளைக்காத ஒரு இஸ்லாமியரின் பாத்திரத்தில் வருகிறார் குரு சோமசுந்தரம். நடிப்பில் இயல்பான தன்மையுடன் இவரைப் போன்று நடிக்க தமிழில் ஆள் இல்லை என்று சொல்ல முடியும். உண்மையில் பார்க்கப்போனால் படத்தின் மாமனிதன் இவர்தான். இவருடைய பாத்திரம் நடிப்பில் ஒரு அட்சய பாத்திரம்.

அத்துடன் கேரளாவில் விஜய்சேதுபதிக்கு ஆதரவு கரம் நீட்டும் கிறிஸ்தவ பெண்மணி மற்றும் நண்பர்கள் மனதில் நிற்கிறார்கள. இவர்களில் அனிகாவும் நம் கருத்தை கவரும் ஒரு பாத்திரம்.

அங்கங்கே உணர்ச்சிகரமான காட்சிகளில் வரும் போதெல்லாம் நமக்கு பீறிடும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவ்வளவு உணர்ச்சிகரமான காட்சிகளை வைத்து படத்தை இயக்கியிருக்கும் சீனுராமசாமி தமிழ் சினிமாவுக்கு நீ வேணும் ராமசாமி.

படத்தின் ஒரே ஒரு குறையாக படுவது காயத்ரியை அத்தனை பெரிய துன்பத்தில் ஆழ்த்திவிட்டு விஜய்சேதுபதி தலைமறைவாகி விட அவர்கள் சந்திக்கும் கட்டத்தில் விஜய் சேதுபதியின் காலில் காயதிரி விழுவது தான். அடுத்தடுத்த படங்களுக்கு சீனு,சேது இருவருமே உத்தரவாதங்கள் தந்திருக்கிறார்கள் எனும் நிலையில் காலில் விழுவதை தவிர்த்திருக்கலாம்.

வழக்கமான சினிமா கோணங்களுக்கு உட்படாத வாழ்க்கை கோணங்களில் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாருக்கு பாராட்டுகள். அதேபோல் படத்தின் ஜீவனாக இருக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் இசை இளையராஜாவின் ‘நத்திங் பட் வின்ட் ‘ ஆல்பத்தில் இருந்து அவர் எடுத்து சில டியூன்களை வாசித்து இருந்தாலும் அதுவே படத்தின் ஜீவனாகி இருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம்…கணவன் வீட்டிவிட்டு ஓடிப்போன பிறகு ஒரு சம்சாரம் எப்படி தன் குடும்பத்தைக் காத்தாள் என்பதுதான் இக்கதையின் மெயின் சமாச்சாரமே என்பதால் ‘மாமனுஷி’ என்றுதான் பெயர் வைத்திருக்கவேண்டும். இதே படத்தின் பார்ட் 2’வை எடுக்கும்போது சீனு அதைச் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.