neethane-en-ponvasantham-film-review

நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லா சம்பவங்களுமே சுவாரசியமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் சுவாரசியங்களை விட மொக்கையான சம்பவங்களையே நாம் அதிகம் சந்தித்திருப்போம்.

நிதர்சனம் அப்படியிருக்க, எதற்கெடுத்தாலும் சுவாரசியமானவற்றையே சொல்லி ஏன் போரடிக்க வேண்டும்? கொஞ்சம் மொக்கை போட்டுப்

பார்க்கலாமே?? என்றுகவுதம் வாசுதேவ மேனன் தீவிரமாக யோசித்ததன் விளைவாகவே இந்த ‘நீ எ பொ வ’ எடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

அல்லது ’வருண், நித்யா, காதல்,.. சில தருணங்கள்’ என்பதில் தருணங்கள் என்றால்,.. நாம் சொல்கிற சில சம்பவங்களைப் பார்த்து ரசிகர்கள் மத்தியில் சில மரணங்கள் ஏற்படவேண்டும் என்று கவுதம் முடிவு பண்ணியிருக்க வேண்டும்.

கடந்த வாரம் கூட ஒரு நண்பர் என் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார். ’படங்களுக்கு விமர்சனம் எழுதுகிறபோது, அவற்றில் கதை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இதுதான் கதை என்ற பெயரில் ‘ நீ பாட்டுக்கு ஒரு இருபத்தி அஞ்சு வரிக்கு குறையாம என்னத்தையாவது எழுதித்தொலைக்கிறியேப்பா?’

நண்பர் என்மீது சுமத்திய அந்த பழிபாவத்திலிருந்து காப்பாற்றவோ என்னவோ ‘நீ எ பொ வ’ வில் கதை என்ற பெயரில் கவுதம் எதையும் சொல்ல கிஞ்சித்தும் முயலவில்லை. ஸோ இதை கதைவிடாத விமர்சனம் என்றும் அழைக்கலாம்.

படத்தின் ஹீரோ கண்டிப்பாக ராஜாதான். கவுதம் தன்னை இந்த அளவுக்கு விளம்பரத்தில் முன்னிறுத்துவார் என்பதை அறியாமல் சுமாரான [ ஆனா யானை படுத்தாலும் குதிரை மட்டம்] பாடல்களைப் போட்டுவிட்டு, விஷூவலில் இல்லாத ஏதோ ஒன்றுக்கு பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார்.

படம் ரிலீஸாவதற்கு முன்பு, ராஜாவின் பாடல்களை விஷுவலாய் கவுரவப்படுத்திய இயக்குனர்கள் பட்டியலில் கவுதமும் இடம்பெறுவார் என்று எண்ணிக்கொண்டிருந்த என்னைப்போன்றவர்கள் எண்ணத்தில் தனது போடோன் கதாஸ் கார்ப்பரேஷன் லாரியைக்கொண்டு மண்ணை தாராளமாய் அள்ளிப்போட்டிருக்கிறார் கவுதம்.

படத்தில் நிகழ்த்தப்படும் அத்தனை பாவகாரியங்களுக்கும் பிராயச்சித்தமாய், நமது சித்தத்தை பித்தமாக்கி ரசிக்க வைப்பவர் சமந்தா. ஏற்கனவே எவ்வளவு பெரிய கியூ நின்றாலும் பரவாயில்லை, நாமும் ஒரு அட்டெம்ப்ட் அடித்துப்பார்க்கலாமே என்று சபலப்பட வைக்கிற கொள்ளை[க்கார] அழகி. நடிப்பில் ஒரு மாடர்ன் சாவித்திரி.
ஆனால் அவரைக்காதலிக்கிற ஜீவா சுத்த வேஸ்ட். அனைத்து காட்சிகளிலுமே, ‘அடுத்த பட ஷூட்டிங் கிளம்பனும் சீக்கிரம் ஆளை விடுங்கப்பா’ என்கிற மாதிரியே பதட்டமாக நிற்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ‘நிறைய பட ஷூட்டிங் இருக்கிறதால அடுத்தடுத்த சீன்கள்ல நான் இருப்பேனான்னு தெரியல’ என்று ஒரு காட்சியில் ’பாட்டாகவே’ பாடிவிடுகிறார் சந்தானம்.

கதை காஃபி ஷாப்,பள்ளி, கல்லூரிகள் மற்றும் மொட்டை மாடிகளையே முட்டிமோதி வருவதாலேயே என்னவோ ஒளிப்பதிவு, ஏதோ ஒரு ஸ்கூல் கல்சுரல் போட்டிகளை வீடியோவில் ஷூட் பண்ணியமாதிரியே பரிதாபமாக இருக்கிறது. ஓம் பிரகாஷ், வெரி ஷேம் பிரகாஷ்.

ஆண்டனியின் எடிட்டிங்கும் அஃதே.

இதுவரை வந்த கதைகளைத் தாண்டி சற்றே பொரட்சியாக ரிசப்ஷன் வரை நடந்த கல்யாணத்தை நிறுத்தி, காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் கவுதம். ’மறுபடியும் மறுபடியும் காதல் படங்களையே இயக்குவேன்’ என்று அவர் அறிவித்திருப்பதால், அடுத்த படத்தில் காதலன் தன் மொறைப்பொண்ணுக்கு ரெண்டு முடிச்சு போட்டவுடன், மூனாவது முடிச்சு போட நாத்தனார் கைக்கு தாலிக்கயிறு மாறும்போது,அந்தக் கல்யாணத்தை நிறுத்தி, காதலர்களைச் சேர்த்து வைக்கும்படி ‘சமத்துக்குட்டி சமந்தா ரசிகர் மன்றம்’ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி வணக்கம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.