‘காக்கா முட்டை’படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ், புதுமுகம் ஆரா இணைந்து நடித்திருக்கும் பதைபதைப்பான காதல் கதைதான் இந்த ‘குழலி’.
சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் காக்காமுட்டை விக்னேஷ் நாயகி ஆரா ஆகிய இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது. ஆனால் அதன் அடிப்படைக் காரணம் மாறிவிடுவதுதான் இப்படத்தில் புதிது.
நாயகன் விக்னேஷ், விடலைப்பருவத்துக்குரிய துடிப்பில்லாமல் பொறுமையாக இருக்க அவருடைய சாதி மற்றும் வாழ்நிலை காரணமாக அமைந்திருக்கிறது.
நாயகி ஆரா நல்வரவு. சுதந்திரப்பெண்ணாக வலம் வருகிறார்.எங்க வீட்லயெல்லாம் தண்ணி குடிப்பிங்களா? என்று நாயகனின் அம்மா கேட்டவுடன் ஆரா செய்யும் செயல் சாதிய அடித்தளத்தை ஆட்டிவிடுகிறது. அவருடைய முடிவு பதற வைக்கிறது. கிராமத்து நாயகி வேடங்களில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.
நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி வழக்கம்போல் வரவேற்புப் பெறுகிறார். சாதியப் பெருமிதம் பேசும் அவர் இறுதிக்காட்சியில் செய்யும் செயல் சிறப்பு.
மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரும் அவரவர் வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சமீரின் ஒளிப்பதிவில் கிராமத்து வெளியழகும் தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ள உணர்வும் காட்சிகளாகப் பதிவாகியிருக்கின்றன. டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஆனால் அவை இடம்பெறும் இடங்களை மாற்றி அமைத்திருக்கலாம்.
செரா.கலையரசனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு தமிழக கிராமம், அதன் அனைத்துவிதமான நன்மை தீமைகளுடன் சேர்த்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
நீ செத்துப் போயிட்டா உன் சாதிக்காரன் தான் தூக்கிப்போடுறானான்னு முழிச்சிருந்தா பார்க்கப்போற? என்பதுபோன்ற அதிரடி வசனங்கள் நிறைந்திருக்கின்றன.
காதலுக்காக எதையும் தூக்கிப்போடுகிறவர்கள் மத்தியில் கல்விக்காகக் காதலைத் துறக்கவும் துணியும் புதிய இளையவர்களைக் காட்டி புது நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர்.ஆனால் இறுதியில் நடக்கும் முடிவு தான் இன்றைய எதார்த்தம் என்பது முகத்தில் அறைகிறது.
மொத்தத்தில் குழலி படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் கொஞ்சம் பழசாக இருந்தாலும் துணிச்சலான அதன் கதைகருவுக்காகவே ஒருமுறை பார்க்கலாம்.