பாரீஸ், ஜன.19- மக்களை ஒடுக்குவதற்காக மியான்மரிலேயே ஆயுதங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி வருகின்றன என்று மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி, மக்களாட்சியைக் கொண்டு வரக் காரணமாக இருந்த ஆங் சான் சூகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டு, அவரது அரசியல் நடவடிக்கைகள் முடக்கப் பட்டுள்ளன.
பிப்ரவரி 2021-இல் மேற்கத்திய வல்லரசுகளின் ஆசியுடன் மீண்டும் ராணுவத்தின் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதை அடக்குவதற்காக ராணுவம் அனைத்து வகையான நடவடிக்கை களிலும் இறங்கியுள்ளது. அதிலும் தனக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறது.
அரசின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கபாசாவில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கண்ணிவெடி குண்டுகள் உள்ளிட்டவற்றை ராணுவ அரசு தயாரித்து வருகிறது. மக்களின் போராட்டங்களைத் தடுக்க இவற்றையே பயன்படுத்துகின்றனர்.
மியான்மரின் இந்த ஆயுத உற்பத்திக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தரும் உதவிதான் காரணம் என்று மியான்மருக்கான சிறப்பு ஆலோசனைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. உரிமங்கள், மூலப் பொருட்கள், மென்பொருள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனங்கள் தந்து உதவி வருகின்றன. தங்களது லாபங்களை பெருக்கி வருகின்றன.
இதுகுறித்துத் தங்களது அறிக்கையில் விரிவாக இந்தக் குழு விபரங்களைத் தந்திருக்கிறது. இக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை அதிகாரிகளில் ஒருவருமான யாங்கி லீ,
‘‘உலகின் படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு சொந்தக்காரர்களில் ஒருவரான மியான்மர் ராணுவத்திற்கு அந்நிய நாட்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. மியான்மர் மக்கள் மீது அன்றாடம் மேற்கொள்ளப்படும் கொடுமைகளுக்கு உதவும் ஆயுதங்களைத் தயாரிக்க இந்த உதவி தரப்படுகிறது. உதவியைத் தரும் இந்த நிறுவனங்களுக்கும், அந்த நிறுவனங்கள் உள்ள நாடுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் அதைத் தட்டிக் கழிக்க முடியாது’’ என்கிறார்.
மக்களின் துயரத்தை வைத்து லாபம்
பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவத்துடன் தொடர்புடைய பலரின் பேட்டிகள் மற்றும் மியான்மர் பாதுகாப்புத்துறையில் இருந்து கசிந்த ஆவணத் தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டே இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். மியான்மர் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளில் அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட துல்லியமான இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துல்லிய இயந்திரங்களை இயக்குவதற்கு சிறப்பு மென்பொருள் வடிவமைத்து தரப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வாங்கியிருக்கிறார்கள்.
ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர், ‘‘மியான்மர் மக்களின் துயரத்தில் இந்த நாடுகள் லாபத்தை சம்பாதித்து வருகின்றன. இந்த இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களைத் தந்த நிறுவனங்கள் அமைந்துள்ள நாடுகள், விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் நிர்வாக அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியம்’’ என்று பரிந்துரையும் செய்திருக்கிறது.
ஏன் இத்தனை வருடங்களாக மியான்மரில் ராணுவ ஆட்சியை எந்த வல்லரசும், ஐநாவும் பெரிதாக கண்டிக்கவில்லை என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைக்கிறது. வல்லரசு நாடுகள் புதுவிதமான முறையில் தங்கள் அடிமைக் காலனிகளை இது போன்று கொடுமையான அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சிகள் மூலம் கட்டமைக்க திட்டமிட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது.
விரைவில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் ராணுவ ஆட்சிகள் உருவானால் நாம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
20.1.2023
–நன்றி. தீக்கதிர்.
இதுபற்றிய மேலும் விரிவான தகவல்களுக்கு
https://www.bbc.com/news/world-asia-64250674
பின்வரும் கட்டுரை, சீனாவிற்கும் மியான்மருக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பை விவரிக்கிறது.
பர்மாவில் அதிகமாக முதலீடு செய்திருக்கும் நாடும் அதிகமாக இராணுவ தொடர்புள்ள நாடும் அங்கு கிட்டத்தட்ட பர்மாவின் பெரும் வளங்களை எல்லாம் கை படுத்தியுள்ள நாடு சீனா. சீனாவில் இருந்து வங்காள விரிகுடாவில் சீனா நேரடியாக நுழைவதற்காக ஒரு பெரும் ரயில் தளமும் அதன் மூலமாக பர்மா பங்களாதேஷ் எல்லையை ஒட்டி ஒரு துறைமுக நகரத்தையே சீன கடல் படைத்தளம் அமைப்பதற்கு பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் வழங்கி உள்ளார்கள்
இந்தியாவின் எதிர்காலத்திற்கும் மிகப் பெரும் அச்சுறுத்தல்.
அதைப் போன்ற பாகிஸ்தானிலும் சீனாவில் இருந்து கட்டார் துறைமுக நகரம் வரைக்கும் பாகிஸ்தான் நெடுங்கிளும் ஒரு பாதை அமைத்து, ரயில் நிலையம் அமைத்து ரயில் வழித்தடம் அமைத்து, பிரத்தியேகமாகவே கடல் படைத்தளமாக வைப்பதன் மூலம் அரபிக்கடலை அணுகுவதற்கும் சீனா ஒரு பெரும் முதலீடு செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் கிட்டத்தட்ட சீனாவிற்கு பாகிஸ்தானை தாரை வார்த்துவிட்டது.
இலங்கையில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக் கடலில் ஹம்பந்தோட்டா என்னும் மிக முக்கியமான துறைமுகத்தை இலங்கை சீனாவிற்கு தாரை வைத்து நாட்களாகிவிட்டது.
சொல்லப்போனால் மேற்கத்திய நாடுகள் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் கிட்டத்தட்ட பாகிஸ்தான் இலங்கை பர்மா போன்ற நாடுகளின் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து விட்டார்கள். சீனாவின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட இந்த நாடுகள் இருக்கின்றன. உலகவங்கியால் எவ்வளவு தூரம் இந்த நாடுகளை கடன்கள் மூலம் வளைக்க முடியும் என்பதும் பார்க்கவேண்டிய விஷயம். இந்தியா மட்டுமே மேற்கத்திய நாடுகளின் சரியான கட்டுப்பாட்டில் இருக்கிறது.