பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் தனியாக வசித்து வருகிறார். தனது அபார்ட்மெண்ட்டில் இன்று காலை அவர் இறந்து கிடந்துள்ளார்.
இவரது வீட்டிற்கு பணிப்பெண் மலர்க்கொடி என்பவர் தினமும் காலையில் வருவது வழக்கம். இன்று காலை 10.30 மணிக்கு வந்த அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் வாணி ஜெயராம் திறக்கவில்லை.
நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் வாணி ஜெயராமின் சகோதரி உமாவுக்கு தகவல் கொடுத்து அவரிடம் இருந்த வீட்டின் கூடுதல் சாவி மூலம் வாணி ஜெயராமின் வீட்டுக் கதவை திறந்தனர்.
அவர்கள் உள்ளே போய் பார்த்த போது வாணி ஜெயராம் தலையில் அடிபட்டவாறு ரத்த வெள்ளத்தில் கீழே சடலமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
அவருக்கு முன்பக்கத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருப்பதால் காவல்துறையினர் இதை சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக கால்பதித்தார் வாணி ஜெயராம். இந்த படத்தில் இவர் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் இன்றும் பசுமையானது. சமீபத்தில் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இதுவரை சுமார் 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.