சுந்தர் சி ஹீரோவாக அங்கீகாரம் பெற்ற படம் தலைநகரம். 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் ஒரு வழக்கமான ஆக்ஷன் படம். மார்க்கெட் டல்லடிக்கவே 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தை கொண்டுவந்திருக்கிறார் சுந்தர்.சி. துரை இயக்கத்தில் தம்பி ராமையா, பாலக் லால்வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் நல்லவராக தம்பி ராமையா உடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் சுந்தர் சி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். மூன்று ரவுடிகள் இவர் வாழ்க்கையில் குறுக்கிட வில்லனாக அவதாரம் எடுக்கிறார். வில்லன்களுடன் ரத்தக் களறி யுத்தம் நடத்துகிறார். முடிவு ? வெண்திரையில் பார்த்தால் தெரியும்.
ஆக்சன் படங்களில் ஹீரோவுக்கு ஏற்ற கெத்துடன், பில்டப்புடன் வில்லன்கள் வருவார்கள். மிரட்டுவார்கள். இங்கு வரும் 3 வில்லன்களில் (நஞ்சுண்டா (பிரபாகர்), வம்சி (விஷால் ராஜன்), மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்)) ஒருவர் மட்டும் பாகுபலி படத்தில் வந்தவர். மற்றவர்கள் யாரென்றே தெரியாததால் காட்சிகளிலும் மிரட்டல் நடிப்பு இல்லாததால் சொதப்புகிறது.
சுந்.சி. ஆக்சன் படம் என்றால் சீரியசான படம் என்று நினைத்து படம் முழுவதும் சிரிக்காமல் சீரியசாக வருகிறார். தலைநகரம் முதல்பாகம் ஓட வடிவேலின் காமெடி முக்கிய காரணம். இங்கு அதுவும் இல்லை. சுந்.சியும் வழக்கமான காமெடி செய்யாமல் மீண்டும் ஆக்சன் ஹீரோ என்று கெத்து காட்ட முயன்றிருக்கிறார். கதை தான் வழக்கமான மசாலா என்றால் திரைக்கதையாவது தேத்தியிருக்கலாம். சொதப்பி விட்டார் சுந்.சி. டிசைன் டிசைனாக கொலைகள் செய்தால் அது படத்தை வித்தியாசப்படுத்திவிடும் என்று யார் சார் சொன்னது.
கதாநாயகி டூயட் பாடவும் இன்னபிற விசயங்களுக்கும், தம்பி ராமையா சோக சென்டிமென்ட்டுகளுக்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஜிப்ரானின் இசை கரடு முரடாக இம்சை செய்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு சரியாக வேலை செய்திருக்கிறது.
மொத்தத்தில் தலைநகரம் ஒரே கொத்துக் கறி தான். 2ஆவதுக்கு முதல் தலைநகரமே பரவாயில்லை என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.