கலையை அடைப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமாக அழகியலின் வழியில், அதன் வழங்குதிறனில், திரைக்கதையை உற்று நோக்கிப் பார்த்தால் “மாமன்னன்” கவர்ச்சிகரமான ஒரு திரைப்படம் என்று என்னால் சொல்ல முடியாது.
பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிற திரைக்கதை வடிவம் அல்லது அதற்கான முகாந்திரங்கள் எதுவும் திரைப்படத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமகால அரசியல் சூழலில், சமகால சமூக சூழலில் இத்தகைய ஒரு திரைப்படத்தை இயக்கி சமூகத்தின் பார்வையில் வைத்த அளவில் இது ஒரு முக்கியமான திரைப்படம்.
வெற்றிகரமாக உரையாடல்களையும், கலகங்களையும் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையை புதிய தலைமுறை நவீன திரைப்படக் கலைஞர்களிடம் உருவாக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
வன்முறை அல்லது திருப்பி அடி என்கிற சிந்தனையில் நான் நம்பிக்கை கொண்டவனல்ல, ஆனாலும், திருப்பி அடித்தல் கூட ஒரு இயக்கமாக மாறி பல சமூகங்களை திசை மாற்றி வழி நடத்தி இருக்கிறது என்பதை நான் நிகழ்கால அரசியலின் வழியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் இரண்டு சமூகங்கள் அதற்கான சாட்சியாக இப்போதும் இருக்கிறது, முதலாவது நாடார் சமூகம், வலுவான வணிக சமூகமாக மாறி இருக்கிற அவர்களின் கடந்த கால வரலாறு துயரம் நிரம்பியது. ஆனால், அவர்கள் கூட்டு சமூகப் பொருளாதார ஆற்றலின் வழியாக இன்று இருக்கும் இடத்தை வந்தடைந்தார்கள்.
திரு.மார்ஷல் நேசமணி, திரு.V.V.T.ரத்தினசாமி, திரு.W.P.A சௌந்தரபாண்டியன், பெருந்தலைவர் காமராசர், இதழியல் மற்றும் சமூகவியல் பெருமகனார் சிவந்தி ஆதித்தனார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், NIIT நிறுவனர் ஷிவ் நாடார், திரு.குமரி அனந்தன் என்று பல்வேறு மனிதர்கள் நாடார் சமூகத்தின் இன்றைய சமூக மதிப்பிற்கு உதவிய மாமனிதர்கள்.
இரண்டாவதாக தென்மாவட்டங்களில் பெருமளவில் வசிக்கும் பள்ளர்கள் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய தேவேந்திரகுல வேளாளர்கள்.
முக்குலத்தோர் என்றழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் நாடார் சமூகத்தினருக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையில் தொடர்ந்து நிகழ்ந்த முரண்பாடுகளையும், கலவரங்களையும் நினைவில் கொண்டு இன்றைய சூழலை உற்று நோக்கினால் தேவேந்திர குல வேளாளர்கள் மிகப்பெரிய சமூக மதிப்பீட்டை அடைந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து அவர்கள் திருப்பி அடித்தார்கள், கைக்கு கை, தலைக்குத் தலை என்று தங்கள் கூட்டங்களில் இழப்பை எதிர்கொண்டாலும் ஒடுங்கி அழிந்து விடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை, அதன் பலனாகவே அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பட்டியலில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் போராட்ட மனநிலை அவர்களை வழிநடத்தி இருக்கிறது.
தங்களை ஒடுக்கப்பட்ட இனங்களின் பட்டியலில் இருந்து பிற்படுத்தப்பட்ட சமூக இனங்களின் பட்டியலுக்கு மாற்றிக் கொள்வதற்கு அவர்கள் தயராகி விட்டார்கள்.
எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், “திருப்பி அடித்தல்” சில நேரங்களில் வரலாற்றை திருத்தி எழுத வழி வகை செய்கிறது, அடங்கி வாழ்தல் என்ற நிலைப்பாட்டில் இருந்து திமிறி எழுந்து திருப்பி அடிக்கத் துவங்கிய போதுதான் தேவேந்திர குல வேளாளர்கள் தங்கள் சமூக மதிப்பீட்டைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.
இதைத்தான் மாரி செல்வராஜ் இந்தத் திரைப்படத்தில் பேசி இருக்கிறார். “திருப்பி அடிக்க வலிமை இல்லாதவனை மீண்டும் மீண்டும் அடிப்பது கயமைத்தனம் என்றும், அடிக்க அடிக்க வாங்கிக் கொண்டே அடிமையாக வாழ்வது கோழைத்தனம்” என்றும் அழுத்தமாகப் பல இடங்களில் பதிவு செய்கிறார் இயக்குனர்.
குறியீடுகள் அல்லது படிமங்களின் வழியாக சிலவற்றை அழகியலாகப் பதிவு செய்யும் தனது வழக்கமான பாணியை இந்தமுறையும் செய்து பார்த்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
பன்றியை வளர்ப்பவராக வாழும் கதை நாயகன் நமது வழக்கமான நீண்ட கால சாதீயப் பழக்கங்களின் எச்சம். எப்படி உங்களால் பன்றியை செல்ல வளர்ப்புப் பிராணியாக ஏற்றுக்கொள்ள இயலவில்லையோ அதைப்போலவே சாதியை விட்டொழிக்க உங்கள் மனம் ஒப்பவில்லை.
தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்கும் ஆசானின் வழியாக தனது ஆழ்மனக்குரலில் இருக்கும் ஏதோ சில சிந்தனைகளை அல்லது அழுத்தங்களை பதிவு செய்ய முயற்சிக்கிறார் இயக்குனர், ஆனால், அந்தக் காட்சிகளின் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை.
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு தீவிரமான, நகைச்சுவையோடு அதிகம் தொடர்பில்லாத காட்சிகளில் நடிப்பதை மனம் ஏனோ அவ்வளவு எளிதில் ஏற்க மறுக்கிறது, ஆனால், ஒரு கலைஞனாக தனது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
கதை நாயகனின் பாத்திரம் மிக வலுவானது, எந்த நடிகரும் அங்கு பொருந்தி விடுவார்கள், ஒரு மாநிலத்தின் முதல்வர் மகன், நிகழ்கால சட்டமன்றத்தில் அமைச்சர் என்பதைத் தாண்டி அதிவீரனாக அவர் காட்சிகளில் நிறைவது கலையின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை பறைசாற்றுவதாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் கூடுதல் இளமையோடு அழகாக இருக்கிறார், மற்றபடி அவருக்கு வழங்கப்பட்ட பாத்திரம் அமெச்சூர் வகையாக இருக்கிறது. வழக்கமான கதாநாயகர்களுக்கு முட்டுக்கொடுக்கிற நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பில்லாத எந்தத் தனித்துவமும் இல்லாத கதாபாத்திரம்.
பகத் பாசில் கொடுக்கப்படுகிற பாத்திரங்களாகவே மாறி நடிப்பின் புதிய பரிமாணங்களை காட்டுகிறார், வடிவேலுவின் நடிப்புக்கு இணையாக பிரமிக்க வைக்கிறார்.
கிணற்றில் குளிக்கும் சிறுவர்களின் மீது ஆதிக்க சாதிப் பெரியவர்கள் கல்லெறியும் காட்சி தாமிரபரணி படுகொலைகளை எதிரொலிக்கிறது, காவல்துறையின் அதிகாரத் தடித்தனத்தின் உச்சமான அந்த அவமானகரமான காட்சிகள் எனது பள்ளிக்காலத்தின் நினைவு நியூரான்களில் இருந்து பீறிட்டு ஒருவிதமான குற்ற உணர்வைத் தோற்றுவித்தது.
அழுத்தமான வசனங்கள், பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், உரையாடல்களில் தெறிக்கும் கட்டுடைப்பின் பரிமாணங்கள் என்று பல இடங்களில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மாரி செல்வராஜ்.
ஒற்றை நட்சத்திரம் ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் குறித்த குறியீடாக இருக்குமோ என்கிற பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில் காசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் ஒன்பதாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கை ஒருவழியாக அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தொகுதியில் நிகழ்ந்த குளறுபடிகள், கடைசி நேர நெருக்கடிகள் போன்றவை நெஞ்சில் நிழலாடியது.
பொதுசமூகத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி எல்லாத்தரப்பிலும் நிகழும் இந்த உளவியல் ஒடுக்குமுறை நேரடியாக காட்சிப்படுத்தப்படுகிறது என்றால் திரைத்துறையின் அந்த இடத்துக்கு வருவதற்கான போராட்டங்களும், எதிர்ப்புகளும் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.
ஆனால், அன்புத்தம்பி மாரி செல்வராஜ், இது ஒரு மிகுந்த சிக்கலான முடிச்சு, வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைகள் புழக்கத்தில் இருக்கிறது, தென்மாவட்டத்தில் நிலவும் சாதீய ஒடுக்குமுறையின் அளவீடுகளும், கொங்கு மண்டலத்தில் நிகழும் ஒடுக்குமுறை அளவீடுகளும் வெவ்வேறானவை.
தென்மண்டலம் இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வதில் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறது, வடக்கில் தலைநகர் சென்னையும் அதன் சுற்றுப் புறங்களும் ஒடுக்குமுறைகளை வெற்றிகண்ட நிலப்பகுதிகள், ஆனால், கொங்கு மண்டலம் நுட்பமான பல்வேறு நிலவுடமை அடுக்குகளில் பிணைக்கப்பட்டு இன்னும் அடிமை வாழ்வியலில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கிற மக்கள் நிறைந்த பகுதி.
நிலப் பண்ணைகளாக இருக்கும் சமூகங்கள் படியளக்க இன்னும் கல்வி கற்கிற குழந்தைகள், சாப்பிடுகிற பெரியவர்கள், பழக்கங்கள் என்று சாதீயக் கட்டுமானங்கள் புரையோடிப் போயிருக்கும் நிலப்பகுதி கொங்கு மண்டலம், சாதீய மனநிலை என்பது ஒரு உளவியல் நோய்.
ஆனால், நடைமுறை வாழ்வியலில் நாம் எதிர்கொள்ளும் உண்மை, உண்மையில் நரிகளும், ஆடுகளும் சிங்கமாக மாற மேற்கொள்ளும் போர் சாதி, நரியும் சிங்கமாகாது, ஆடும் சிங்கமாகாது, போர் நீண்டு கொண்டே இருக்கும், ஏனெனில் சிங்கம் என்பதே ஒரு கற்பனை. போர் நிற்காது.
கலையின் வழியாக போர் சொல்லிக் கொடுப்பது கலைஞனின் வேலை அல்ல, கலையின் வழியாக மானுட மனசாட்சியை மென்மையாக ஊடுருவி சக மானுடனின் துயரத்தை பிறிதொருவன் உணர வைப்பதே ஒரு படைப்புக் கலைஞனின் மகத்தான வெற்றி.
அந்த வகையில் பார்த்தால் “மாமன்னன்” கதைக்களத்தை தேர்வு செய்ததில், சமகால அரசியலில் நிலவும் நேரடியான சாதீயப் படிநிலையை தோலுரிக்கும் ஒரு காத்திரமான திரைப்படம் தான், வாழ்த்து.
ஆனால், முழுமையானதாக திரைக்கலைக்கே உரித்தான அழகியல் தொழில்நுட்பங்கள் கொண்டதாக இன்னும் மேம்பாடு அடைவதற்கான எல்லா வாய்ப்புகளும் கொண்ட திரைப்படம் எனலாம், திரைக்கதையில் தொடர்ந்து நீங்கள் இன்னும் நுட்பமாக பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திரைக்கதையை பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் தொடர்ந்து உரையாடல்களை நிகழ்த்தி மாற்றிக் கொண்டே இருக்கலாம். உங்கள் படங்களில் அப்படி நிகழும் குறைகளை வழக்கமாக தேனீ ஈஸ்வர் கேமராவால் தூக்கி நிறுத்துவார், ஆனால், இம்முறை அந்த வேலையை ஏ.ஆர்.ரகுமான் செய்திருக்கிறார்.
பாடல்கள் பெரிதாக வசீகரிக்கவில்லை, ஒரு எளிய பார்வையாளனாக மாரி செல்வராஜ் திரைப்படக்கலையில் இன்னும் நிறைய மேம்பாடடைய வேண்டும் என்பது எனது பார்வை. சமூக அரசியல் இயக்கங்களின் வழியாக நின்று மாரி செல்வராஜ் இதுபோன்ற நேரடியான சாதி அரசியலைத் தொடர்ந்து கலை வடிவமாக்க வேண்டும்.
ஆர்வத்தைத் தூண்டிய அளவிற்கு திரைக்கதை நேர்த்தியில்லாத காரணத்தால் வசீகரத்தை இழந்த இந்த மாமன்னனை நான் “இளவரசன்” என்று சொல்வேன்.
நன்றி. கை.அறிவழகன்
#kaiarivazhagan #writerarivazhagan #arivazhaganstories #arivazhaganmorningstories #facebookarivazhagan Arivazhagan Kaivalyam #Maamannan #MaariSelvaraj #vadivelu #UdhayanidhiStalin #politics #tamilnadupolitics