நேற்று நீதிபதிகள் ‘விஸ்வரூபம்’ படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஃபெப்ஸி தலைவர் அமீரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு. சரி, ‘விஸ்வரூபம்’ பிரச்சினைக்கு விடிவுகாலம் வந்துவிட்டது’ என்ற நினைப்புடன் பதறி அடித்துக்கொண்டு போனால்,
பத்துப்பைசாவுக்குப் பெறாத ஒரு அறிக்கையுடன், இனிமேல் ‘வி.ரூ’பார்க்காமல் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். நானும் படம் பார்க்காமல் எதுவும் பேசப்போவதில்லை’ என்ற அகம்பாவமான உத்தரவு வேறு.
இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையே ‘சென்சார் பார்த்த படத்தை எப்படி தடை செய்யலாம்? என்கிற அடிப்படையான கேள்வியைக்கூட புரிந்துகொள்ளாத ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமே’ என்ற கொதிப்புடன், அமீரின் இயக்குனர் சங்கத்தேர்தல் கள்ள ஆட்டையை கலைப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட ‘புதிய அலைகள்’ உதவி இயக்குனர்கள் சங்கத்திலிருந்து சற்றுமுன்னர் வந்த அறிக்கை இது.
பாரதிராஜாவுக்கு அப்புறம் ’சினிமா ரத்தம்’ ஓட எழுதப்பட்ட உன்னதமான அறிக்கை இது,..
படிக்க இங்கே,..
27/01/2013
சென்னை
நண்பர்களே!
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி தமிழ் திரைத்துறையை இக்கட்டான சூழலுக்கு உள்ளாக்கியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!
இந்தச் சூழல் திரைப்படத்தை நேசிப்பவர்களை, தொழிலாக கொண்டிருப்பவர்களை, வாழ்க்கையாக கொண்டவர்களை முடக்கும் அபாயம் கொண்டிருப்பதால் ’புதிய அலைகள்’ கீழ்கண்ட கோரிக்கைகளை தன் நிலைப்பாடாக முன் வைக்கிறது.
- 1.திரைப்படம் என்பது ஒரு கலைப்படைப்பு, அதற்கு தடை கோருவதென்பது என்பது ஒரு கலைஞனின் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஒரு ஜனநாயக அமைப்பிற்கு இந்த தடை கோரிக்கை எதிரானதும் முரணானதும் ஆகும். இது மக்களாட்சி நடைபெறுகின்ற நாடு! மத ஆட்சி நடைபெறுகின்ற நாடு அல்ல!
- 2.ஒரு திரைப்படம் நம் சமூகத்திற்குப் பொருத்தமானதுதானா என்பதைப் பரிசீலிக்க தணிக்கைக் குழு இருக்கிறது. அந்த ஒரு அமைப்பு மட்டுமே சரியானதும் போதுமானதும் ஆகும். இதில் நம் மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவான். திரைப்படத்தை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் நிறைய தோன்றிவிடும்.
- 3.தணிக்கை குழு அங்கீகரித்து சான்றிதல் வழங்கிய திரைப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கும், அதை மக்கள் பார்பதற்கும் தேவையான பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிற ஒவ்வொரு அரசின் கடமையாகும். இது வெறும் திரைப்பட பிரச்சனை என்று சொல்லி கைவிடுவது அறமாகாது.
- 4.ஒரு ‘வெளியான திரைப்படத்தின்’ மீது கருத்தியல் ரீதியாக முரண்படுகிறவர்கள் தணிக்கைத் துறையின் மீது வழக்குத் தொடரலாம். தணிக்கை சட்டத்தை மாற்றக்கோரி போராடலாம். அந்த படத்திற்கு எதிராக எழுதலாம். அதை புறக்கணிக்கலாம், அப்படியல்லாம் இல்லாமல் திரையரங்கில் காட்சி நடைபெறுவதை தடுக்ககூடாது, தடுப்போம் என்று மிரட்டுகிறவர்களை அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், அவர்களே சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறவர்கள்.
- 5.ஒரு படம் வெளியிடுவதற்கு தயாரான நிலையில் அதை முடக்குவது என்பது ஒரு தயாரிப்பாளரை நிர்மூலமாக்கி தெருவிற்கு கொண்டு வந்துவிடும். இந்த போக்கு தொடருமானால் திரைப்படத் தயாரிப்பிற்கு யாரும் முன் வர மாட்டார்கள். திரைத்துறையை நம்பி வாழும் சில லட்சம் தொழிலாளர்களை பட்டினி போட்டு விடும்!
இவற்றை கருத்தில் கொண்டு நம் நீதிபதிகள் மற்றும் தமிழக அரசு ’விஸ்வரூபம் ’திரைப்படத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாமிய அமைப்புகளுக்கும் ஒரு வேண்டுகோள்
இன்று நீங்கள் முரண்பட்டு நிற்கிற பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள். ஒரு அரை நூற்றாண்டு காலம் தன் கலை பணியால் நீங்கள் உங்கள் குடும்பம் உள்ளிட்ட தமிழகத்தை மகிழ்வித்தவர். ஜாதி, மத இன, மொழி. தேச குரோதங்கள் அற்றவர். அவர் தமிழகத்தின் அடையாளம், இந்தியாவின் பெருமை.
படம் பார்த்து விட்டு நீங்கள் அவரோடு விவாதிக்கலாம். முரண்படலாம். ஆனால் அவரை அழித்துவிட நினைக்க கூடாது.
உங்களின் இந்த செயல்பாடு கமல் என்ற கலைஞனை அழித்துவிடும் என்பதே உண்மை!
நீங்கள் கமலஹாசன் என்ற கலைஞனுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று ’புதிய அலைகள்’ விரும்புகிறது.
இவண்
’புதிய அலைகள்’