கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர். அதை நினைத்து ஜோஷி வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.
அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். அப்படி ஒருநாள் அவரின் காதலிக்கு அமானுஷிய சம்மந்தமான உதவி செய்ய செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தினால் ஒரு பிரச்சனையில் ஜோஷியும் , அவரின் காதலியும் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் SA. பிரபு இயக்கியுள்ளார்.
இசை – விஜய் சித்தார்த், ஒளிப்பதிவு – மணீஷ்மூர்த்தி, படத் தொகுப்பு – நாகூரான், பாடல்கள் – ஹரிசங்கர் ரவீந்திரன், உடைகள் வடிவமைப்பு – அகிலன் ராம், நடன இயக்கம் – ராபர்ட், சண்டை இயக்கம் – ஷங்கர், கலை இயக்கம் – ஆனந்த் மணி, பின்னணி இசை – வி.டி.மோனிஷ், வி.டி.பாரதி, புகைப்படங்கள் – பாக்யா, பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.
படத்தின் கதைக்கருவும், திரைக்கதையும் பரவாயில்லை. ஆனால் காட்சியமைப்பில் பல இடங்களில் ஒரே காட்சியை இழு இழுவென்று இழுக்கிறார் இயக்குனர். விஜய் சித்தார்த்தின் இசை அமானுஷ்யங்களுக்கேற்றார் போல திகில் தருகிறது, பல இடங்களில் அனுபவமின்மை தெரிகிறது. மணீஷ்மூர்த்தியின் ஒளிப்பதிவும் அப்படியே, பரவாயில்லை ஆனால் சில இடங்களில் டல்லடிக்கிறது.
புதுமுக நாயகன் ஜஸ்டின் விஜய் நடிப்பு போதவில்லை. இன்னும் நிறைய உழைக்க வேண்டும். நாயகி வித்யா பிரதீப் மற்றும் கஸ்தூரியின் நடிப்பு படத்திற்கு கைகொடுக்கிறது.
கதை இன்னும் சுவாராசியப்படுத்தி இருக்கலாம். புதுமுகங்களாக இணைந்து செய்திருக்கும் முயற்சி. வரவேற்போம்.