’நீதி தாமதமாவதும், அது தரமறுக்கப்படுவதும் ஒன்றுதான்’ என்று கமல் இன்று அறிவித்தது, தமிழக அரசுக்கு மட்டுமல்ல,தமிழக திரைப்படத்துறையினருக்கும் கனகச்சிதமாகப் பொருந்தும். பாரதிராஜா போல் விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசிலர் தவிர, இன்று மதியம் வரை
அவரை ஆதரிக்க முன்வராத நிலையில், இன்று தொலைக்காட்சிகளில் அவரது பேட்டியைப் பார்த்தவுடன் அவரது இல்லத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். இதில் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் இருந்தபோது, மதியத்துக்குப்பிறகு ரசிகர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்ட ஆரம்பித்தது.
கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க ரசிகர்களின் கோபமான கோஷங்கள் எழ ஆரம்பிக்க பதட்டமானார் கமல். இனியும் இது நீடித்தால், தியேட்டர்கள் தாக்கப்பட்டு, பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பதிலடியான நடவடிக்கைகளில் ரசிகர்கள் இறங்கிவிடுவார்கள் என்று பயந்த கமல்’ தான் பிப்ரவரி1 அன்று, இந்தியில் ரிலீஸாக உள்ள ’விஸ்வரூபம்’ தொடர்பாக, மும்பை செல்லவிருப்பதாகவும், ரசிகர்கள் கலைந்து சென்று அமைதி காக்கும்படியும் மீண்டும் மீண்டும் அறிவித்தார்.
‘விஸ்வரூபம் படத்துக்கு எழுந்துள்ள சிக்கலால் எனக்கு கோபம் எதுவும் இல்லை. வருத்தம்தான். நான் நியாயத்துக்காக போராடி வருகிறேன். முஸ்லிம்கள் உள்பட எனது ரசிகர்கள் அனைவரும் என்னுடனேயே உள்ளனர். முஸ்லிம் ரசிகர்கள் மற்றும் இதர முஸ்லிம் நண்பர்கள் என்னுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களும் நானும் சில உடன்படிக்கைகளை எடுக்க இருக்கிறோம்.
அதற்குள் ரசிகர்களாகிய நீங்கள் ஆவேசத்திற்கு விலை போகாதீர்கள். வேறு சக்திகளுக்கு விலை போகாதீர்கள். கலவரத்தில் ஈடுபடாதீர்கள். திங்கள்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதுவரை பொறுமை காத்திருங்கள்.
உங்களுக்கு என் மீது பாசம் அதிகம் என்பதை நான் அறிவேன். உங்கள் பாசம் எனக்குப் புரிகிறது. எனது ரசிகர்கள் என்று சொல்லும்போது எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் அதில் உள்ளனர்.
மிகப்பெரிய போராட்டம் நடத்தும் அளவுக்கு இது ஒன்றும் தேசிய பிரச்சினை அல்ல. வெறும் சினிமா. நான் ஒரு சாதாரண கலைஞன், அவ்வளவுதான். எனவே, ரசிகர்களாகிய நீங்கள் வதந்திகளை பொய்யாக்குங்கள். கோபத்திற்கு ஆளாகாதீர்கள். மும்பை சென்று ‘விஸ்வரூபம்’ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு, வெற்றிச்செய்தியுடன் திரும்புவேன்’ என்று ரசிகர்களை அன்பால் கட்டிப்போட முயன்றிருக்கிறார் கமல்.
கமலின் ரசிகர்கள் கண்டிப்பாக ரொம்ப விவரமானவர்கள் தான். இது கமலுக்கும், இஸ்லாமியர்களுக்குமான பிரச்சினை அல்ல என்பதைக்கூட புரிந்துகொள்ளாதவர்கள் அல்ல. ‘விஸ்வரூபத்தின்’ உண்மையான வில்லன்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வந்து, சந்தி சிரிக்கும் நிலைக்கு ஆளாவார்கள். அதுவரை அமைதிகாப்போம் நண்பர்களே,..