கால் டாக்ஸி ஓட்டுநரான சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். அங்கு அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.
ஊர்வசி வருகையில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கும் திரைக்கதையின் பரபரப்பு அடுத்து எங்குமே குறைவதே இல்லை. சேகர் ஊர்வசியின் வீட்டுக்குள் நுழைகின்ற அந்த தருணத்தில் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது தான். நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது அப்படி அப்படியே நடப்பதால் பார்வையாளனாக நம்மால் திரைப்படத்துடன் ஒன்ற முடிகிறது.
விக்ரம் ரமேஷ் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இப்பட தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமனும் நடித்துள்ளார். ஒரே வீடு.. மொத்தம் 5-6 நட்சத்திரங்கள் என்று சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் விக்ரம் ரமேஷ். இவரே இயக்குனர் இவரே நாயகன் என்பதால் இரண்டு பொறுப்புகளையும் உணர்ந்து அதற்கு ஏற்ப கதைக்களம் அமைத்து சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார்.
நாயகிக்கு முதல் 20 நிமிடங்கள் மட்டும்தான். அதிலும் கொஞ்சம் இளசுகளை சூடேற்றி செல்கிறார். நாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கலாச்சரண் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படத்திற்கேற்ற இசை. தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளரின் கைவண்ணமும் பாராட்டுக்குரியது. ஒரே வீட்டில் ஒரே அறை திரும்பத் திரும்பக் காட்டப்பட்டாலும் சலிப்படையாமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறார்.
சஸ்பென்ஸ் மிக எதிர்பாராததாக இல்லாவிட்டாலும், ஓகே பார்க்கலாம் என்று நினைக்க வைக்கிறது இந்த என்டே கிடையாது படம்.