கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.
மக்கள் நம்மிட்ம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்? என்பதை உணர்ந்து அதற்கேற்ற வேடத்தை ஏற்று மக்களைச் சிரிக்கவைப்பதொன்றே நோக்கம் எனச் செயல்பட்டிருக்கிறார் சந்தானம்.அதுமட்டுமின்றி முதல்பாதியைக் காட்டிலும் இரண்டாம்பாதியில் தனக்கு வாய்ப்பு குறைவு என்பதைப் பெரிதாக எண்ணாமல் படம் நன்றாக வந்தால்போதும் என்று நினைத்திருக்கிறார். வழக்கமான தோற்றத்திலிருந்து மாறுபட்டிருக்கிறார் என்றாலும் நக்கல் நையாண்டிகளில் மாற்றமில்லை.
நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.அவரையும் நகைச்சுவைக்கு ஆதாரமான கருப்பொருளாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மாறன், சேசு,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ்,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி எனப் படத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோரும் சிரிக்க வைப்பதற்கென்றே இருக்கிறார்கள். நிழல்கள்ரவி கூட நகைச்சுவை செய்கிறார். இவர்களில் மாறன் மற்றும் சேசு ஆகியோர் பெரும் வரவேற்புப் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக், படம் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதற்காக உழைத்துள்ளார்.
ஷான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கலாம், பின்னணி இசையைக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக்யோகி, எதைச் செய்தாவது சிரிக்க வைக்கவேண்டும் என்று மட்டுமே யோசித்திருக்கிறார். முதல்பாதியில் அவர் நினைத்தது நடந்திருக்கிறது.இரண்டாம் பாதியில் பாதியாகக் குறைந்துவிட்டது.
மூடநம்பிக்கைக்காரர்களை சகட்டு மேனிக்கு ஓட்டி எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஏன் இப்படி பெரியாரை வம்பிழுத்து ஒரு ட்ரெய்லர் போட்டார்கள் ?? ஒரு விளம்பரத்துக்காக உங்களுக்கு பெரியாரெல்லாமா வேணும். என்ன சார் நீங்க.
– இளையவன்