முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ்.
நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.கதைக்களம் மற்றும் பாத்திரங்களுக்கேற்ப தேடித் தேடிப் பிடித்திருப்பார்கள் போலும்.
அவர்களும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்கள்.நாயகிகள் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்.
ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது பிள்ளைகள் தடம்மாறி தடுமாறிப் போய்விடுவார்களோ என்கிற பதட்டத்திலேயே இருக்கும் இக்காலப் பெற்றோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
படம் பார்க்க வரும் இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் இயங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சிகுமார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் இருக்கிறது.
பாலமுரளிபாலுவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களிலும் கதைக்களத்தின் எதிரொலி. பின்னணி இசை இயல்பாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் முத்து.வன்முறை வேண்டாம் எனும் கருத்தைச் சொல்ல படம் முழுக்க இரத்தத்தில் நனைப்பது மாதிரி இப்படிச் செய்யக்கூடாது என்று சொல்வதற்காகவே செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்துகாட்டுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கத்தி மேல் நடப்பது போன்ற கதையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர் அதை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கவேண்டும்.
பதறித் திருந்தும் படமா? பார்த்துப் பழகும் படமா? எனும் விவாதம் நடத்தலாம்.
– இளங் குமரன்