சன் டிவியில் நாளைமுதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘மகாபாரதம்’ தொடர்பாக, அத்தொடரில் பணியாற்றிய கிருஷ்ணாற்றுப் பெரும்படை ஒன்று சமீபத்தில் பத்திரிகையாளர்களை ஃபோர் ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் சந்தித்தது.
சினிவிஸ்டாஸ் தயாரிப்பில் ‘அதர்மம்’ இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன் நிர்வாகத்தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்க, எழுத்தாளர் பிரபஞ்ச கிருஷ்ணா வசனம் எழுத என்று சீரியல் முழுக்க கிருஷ்ணா முகுந்தா முராரேக்கள் மயம்தான். சுமார் 4 வருடங்களுக்கு ஒளிபரப்பாக இந்த சீரியலுக்கு எல்லோருக்குமே எதிர்பார்த்ததை விட கொஞ்சம் பெரிய மீட்டர் விழுந்திருக்கும் போல. இதில் வேலை பார்த்ததன் மூலம் தாங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிட்டதாக அனைவருமே ஆனந்தக்கண்ணீருடன் அரற்றினர்.
இவர்கள் அனைவருக்கும் பலபடிகள் மேலாக பாய்ச்சல் காட்டியவர் எழுத்தாளர் பிர பஞ்சன். நடிகர் சந்தானம் பவர்ஸ்டாரை குடும்ப கவுரவம் தான் முக்கியம் என்றபடி, ’கீழபர்பி கிடக்கு’ என்று குனிய வைத்து நக்கலடிப்பாரே அதுபோலவே இருந்தது பிரபஞ்சனின் பேச்சு. இவ்வளவு காலமும் கவுரவம் தான் முக்கியம் என்று தவறாக நினைத்து வாழ்ந்துவிட்டேன். ‘மகாபாரதத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்த போது, அதே கவுரவத்தைப் பற்றி யோசித்து மிஸ் பண்ணிவிடாமல் இருக்க அந்த கிருஷ்ணர் அருளினார்’ என்று பிரபஞ்சானந்த சுவாமிகளாய் மாறியவர், கடைசியில் இன்னொரு தகவலையும் சொன்னார். வசனத்தை அவர் எழுதவில்லையாம். பேப்பரில் பேனாவை வைத்தவுடன் அந்த கிருஷ்ணரே எழுதிக்கொள்கிறாராம்.
அட சுரேஷ், ரமேஷ் கிருஷ்ணாஸ்,.. அப்ப முதல் வேலையா பிரபஞ்சன் சம்பளத்தை கட் பண்ணிட்டு, அதை கிருஷ்ணருக்கு மணி ஆர்டர் பண்ற வழியைப் பாருங்கப்பா,.