காதலன் கூலிக்கொலைகாரன் என்று தெரிந்ததும் விலகிப் போகிறார் காதலி. அதனால் மனம்மாறிய காதலன், கூலிக்காவலனாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் காதலியையே காக்க வேண்டிய வேலை அவருக்கு வருகிறது.வெறும் வேலை மட்டுமின்றி காதலும் நிரம்பிவழிவதால் இமை போல் காக்கிறார். இதுதான் ஜோஷ்வா இமைபோல்காக்க படத்தின் கதை.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் வருணுக்கு முதல்படமே முழுமையான படமாக அமைந்திருக்கிறது. காதல், சண்டை, பாசம், வேகம் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்தும் வேடம். உயர்தர வர்க்கக் கதை என்பதால் முதல்தர உடைகள் அணிந்து மேல்தட்டுவர்க்க நடவடிக்கைகளை வெளிப்படுத்தி தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.சண்டைக்காட்சிகளில் துடிப்பும் வேகமும் நிரம்பியிருக்கிறது.
நாயகி ராகே அழகான புதுவரவு.படத்தில் அவருக்கு வழக்குரைஞர் வேடம். காதல் காட்சிகளில் இளமைத்துள்ளல்.நடிப்பிலும் குறைவில்லை.
திவ்யதர்சினி ஏற்றிருக்கும் தாதா வேடம்,ஆங்கிலப் படங்களின் தாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.சிரிப்பையே அடையாளமாகக் கொண்ட அவர் இந்த வேடத்துக்கு இவ்வளவு பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
வில்லனாக வருகிறார் கிருஷ்ணா.ஆனால் அவருக்கும் ஒரு முன்கதையெல்லாம் சொல்லி கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
மன்சூர் அலிகான், விசித்ரா, கிட்டி ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
கார்த்திக்கின் இசையில் பாடல்கள் வசனங்கள் போல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எஸ்.ஆர்.கதிரா இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு என்று வியந்து கேட்குமளவுக்குக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
சண்டைப்பயிற்சி அமைத்திருக்கும் யானிக்பென் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் வேகமும் விறுவிறுப்புமாக அமைந்திருக்கின்றன.சண்டையிடுபவர் புதுமுகம் வருண் என்பதையே மறக்கச் செய்கிறார்.
கெளதம்மேனனின் சண்டைப் படங்கள் ஆங்கிலப்படங்களைப் போல இருக்குமென்று சொல்வார்கள்.இது ஆங்கிலப்படமாகவே இருக்கிறது.
நவீன துப்பாக்கிகளை அலட்சியமாகப் பயன்படுத்தும் உலக அளவிலான கூலிக்கொலைகாரன்,அமெரிக்காவில் உலக அளவிலான போதைப்பொருள் கடத்தல் கூட்டம் என்று கதைக்களத்தை ஆங்கிலப்படங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டு அங்கு போலவே காதல், ஊடல், சண்டைகள் என படத்தைக் கொண்டுபோயிருக்கிறார் கெளதம்மேனன்.
அதிரடிச் சண்டைகள் நிறைந்த படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாதபடி அதன் அடிநாதமாகக் காதலை வைத்திருப்பது திரைக்கதையின் பலம்.
– ஆநிரையன்