தமிழ்நாடு கேரளா எல்லையோரமான மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கேரளாவின் பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்கள்.அங்கு கேரள மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.அதற்கு எதிராக நாயகன் ஜீ.வி.பிரகாஷ் பொங்கியெழுகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.
படிப்பின் மூலம் இருக்கும் நிலையிலிருந்து மேலே போகவேண்டும் என்று நினைக்கிற ஜீ.வி.பிரகாஷ் பொருத்தமாக இருக்கிறார்.அவர் போராளியாக மாறுகிறார்.கண்ணில் கண்டவர்களையெல்லாம் அடித்துத் துவைக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.இந்தக் கதையை இவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று எண்ண வைத்திருக்கிறது.
நாயகியாக மமிதாபைஜு நடித்திருக்கிறார்.வழக்கமாக சண்டைப் படங்களில் கதாநாயகிகளை ஊறுகாய் போலப் பயன்படுத்துவார்கள்.இந்தப்படத்தில் இவருக்கும் அந்தச் சோகம் நடந்திருக்கிறது.
பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணியசிவா ஆகியோர்,நமக்கெதுக்குப்பா ஊர்வம்பு? என்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கிச் செல்வோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
ஆதித்யா பாஸ்கர், க்ல்லூரி வினோத், ஆண்டனி ஆகியோர் சக மாணவர்களாக அவர்களுக்குக் கொடுத்த வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.
வில்லன்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ், ஷலுரகீம் ஆகியோர் சரியான முறையில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார்.
அருண்ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 1980 காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் நிகேஷ்.ஆர்.எஸ். தமிழ்நாட்டிலேயே தமிழுக்காகப் போராட வேண்டியிருக்கும் நிலையில் கேரளாவில் போய் தமிழுக்காகப் போராடுவது போன்ற கதை எழுதியிருப்பது அபத்தம்.இந்தக் கதையை நியாயப்படுத்த எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் குறிப்பாக எல்லையோர மாணவர்களிடையே இடையே பகை மூட்டும் செயலாகவே இருக்கிறது.
பட உருவாக்கமும் மிகவும் பழசாக இருப்பதால் பார்க்கவே அயற்சியாக இருக்கிறது. இளம் இயக்குநர் இவ்வளவு பின்னால் இருக்கிறாரே என்கிற வேதனைதான் ஏற்படுகிறது.
– ஜிஜே