ஒரு படத்தில் ஒரேகதையைச் சொல்வதால் ஓர் உணர்வை மட்டுமே சொல்லமுடியும் அதனால் ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஒன்று பழுதென்றாலும் இன்னொன்று காப்பாற்றிவிடும் என்கிற அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது.
முதல்கதையில் பெண்ணியம்,இரண்டாவது குழப்பமான காதல்கதை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளி கதை, நான்காவது குழந்தைமையைப் பேணுதல் ஆகிய கருத்துகளைக் கொண்டிருக்கிறது.
முதல்கதையில், 96 படப்புகழ் ஆதித்யா பாஸ்கர் – கெளரிகிஷன் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள்.ஆணுக்குப் பெண் தாலிகட்டுவது போன்ற காட்சிகளை வைத்து அக்கதையை இரசிக்க வைத்திருக்கிறார்கள்.அவ்வேடத்துக்கு இருவரும் பொருத்தமாக இருப்பது கதைக்கு மேலும் பலம்.
இரண்டாவது கதையில், சாண்டி -அம்முஅபிராமி ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள்.காதலர்களாக இருப்பவர்களுக்கு எதிர்பாரா சிக்கல்.அதை எப்படி எதிர்கொள்வது? என்பது எழுதியவருக்கும் புரியவில்லை பார்ப்போருக்கும் புரியவில்லை.தங்கள் நடிப்பின் மூலம் வரவேற்புப் பெறுகிறார்கள்.
நாகரிகமான கதையைச் சொன்னால் ஏற்கமாட்டீர்களா? இந்தா வாங்கிக்கோங்க என்று இக்கதையைச் சொல்லியிருக்கிறார்.இதில் சுபாஷ் -ஜனனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்தப்படத்துக்கும் இயக்குநருக்கும் இது தேவையில்லாத ஆணி.
நான்காவது கதை,தற்காலச் சமுதாயம் குழந்தைகளை எப்படி பாழ்படுத்துகிறது? என்பதைச் சொல்லும் கதை. இதில் கலையரசன் – சோபியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.இதில் இடம்பெறும் வசனங்கள் ஆழமானவை.சிந்திக்கவேண்டியவை.
கோகுல்பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.நான்கு கதைகள் என்பதால் அவற்றை ஒளியமைப்புகளிலும் வேறுபடுத்திக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.
சதீஷ்ரகுநாதன், வான் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.இரண்டு பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
படத்தில் ஓர் இயக்குநர் திரைப்படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார்.ஒரு கதையில் திருப்தியடையாத தயாரிப்பாளர் வேறு கதைகள் இருக்கிறதா? எனக்கேட்கிறார். அதன்பின் வரிசையாக மூன்று கதைகளைச் சொல்கிறார்.இவ்வேடங்களில் இயக்குநர் விக்னேஷ்கார்த்திக்கே இயக்குநராகவும் தயாரிப்பாளர் பாலமணிமார்பனே தயாரிப்பாளராகவும் நடித்திருக்கிறார்கள்.
ஒரு படத்திலேயே வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேரச் சம்பாதித்து நினைத்ததைச் சாதித்திருக்கிறார் இயக்குநர்.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்
என்கிற திருக்குறளின் அடிப்படையில் அணுகுவோரிடம் இயக்குநர் விக்னேஷ்கார்த்திக் பாராட்டுப் பெறுகிறார்.
– இளையவன்