முடிதிருத்தும் தொழிலாளியைக் கதாநாயகனாக வைத்துக் கொண்டு மகாராஜா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஏன்? என்கிற கேள்விக்கு விடை சொல்லும் விதமாகப் படம் அமைந்திருக்கிறது.
தன் வீட்டில் உள்ள இலட்சுமியைக் காணவில்லை என்று காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார் விஜய்சேதுபதி.அந்த இலட்சுமி யார்? அது எங்கே? என்று தேடிப்போகும்போது பல அதிர்ச்சிகரமான விசயங்கள் வெளியே வருகின்றன.அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்னென்ன? என்பனவற்றைப் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்லியிருப்பதுதான் படம்.
முடிதிருத்தும் தொழிலாளிகளுக்குரிய பாங்கு, பாசமிகு அப்பாக்களின் பரிதவிப்புகள்,சாது மிரண்டால் காடு கொள்ளாது எனும் பழமொழிக்கேற்ற ஆக்ரோச அவதாரம் ஆகிய எல்லாவற்றிலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.காவல்துறையைவிடத் துப்பறிவதில் வல்லவர் என்கிற கதாபாத்திரத்துக்கு நூறு விழுக்காடு பொருத்தமாக நடித்துப் பாராட்டுகள் பெற்றுக்கொண்டேயிருக்கிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ், குடும்பத்தலைவியாக நடித்திருக்கும் அபிராமி ஆகியோர் தேர்ந்த நடிப்பின் மூலம் கவர்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை எனும் அளவுக்கு நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான நேரத்தில் அதிகாரியாக இல்லாமல் மனிதாபிமானியாகச் செயல்பட்டு கைதட்டல் பெறுகிறார்.
பாய்ஸ் மணிகண்டன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் போன சிங்கம்புலிக்கு மாறுபட்ட வேடம்.இதிலும் சோடை போகவில்லை.அவர் மாட்டிக் கொள்ளுமிடத்தில் நகைச்சுவை இமேஜ் கைகொடுக்கிறது.
அனுராக் காஷ்யப்பின் பாத்திரப் படைப்பில் முரண் இருந்தாலும் அதை அவர் செய்திருக்கும் விதம் படபடப்பை ஏற்படுத்துகிறது.இறுதியில் அவர் எடுக்கும் முடிவு எல்லா எதிர்மறையாளர்களுக்கும் நல்ல பாடம்.
கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் பாரதிராஜா என்பதைக் காட்டுகிறார்.அருள்தாஸ்,முனீஸ்காந்த்,வினோத் சாகர் ஆகியோரும் நிறைவு.
தாயே தாயே பாடல் மூலம் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத்.இந்தத் திரைக்கதைக்கு பின்னணி இசை மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்.
தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவில் நெருக்கக் காட்சிகள் அதிகம்.அந்தத் துணிவு அவருக்கும் படத்துக்கும் பலம்.
படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜுக்கு கத்திமேல் நடக்கிற மாதியான வேலை.அப்படிப்பட்ட திரைக்கதையைக் குழப்பமின்றிக் கொடுத்து வரவேற்புப் பெறுகிறார்.
மையக்கதை பழையது என்றாலும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை குறிப்பாக கடைசி அரைமணி நேரம் விறுவிறுப்பு.எடுக்கும் கதையைவிட அதைக் கொடுக்கும் விதமே என் பலம் சொல்லி வென்றிருக்கிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன்.
– தனா