இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், ரோகித் லாம்பாவுடன் இணைந்து இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பற்றி எழுதி இருக்கும் நூல் இது.
சீனாவைப் பார்த்து அதேபோன்ற பொருளாதார வழியை இந்தியாவும் பின்பற்றுகிறது; ஆனால் அது சரியல்ல என்னும் இப்புத்தகம் நம் நாட்டின் பொருளாதாரம் குறித்த புதிய உண்மைகளை முன்வைத்து, தீர்வுகளையும் சொல்லிச் செல்கிறது. நம் நாட்டுத் தலைவர்கள் வேலைவாய்ப்பு வளர்ச்சி மந்தமாக இருப்பதை மக்களிடம் இருந்து மறைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் ரகுராம் ராஜன். சீனத்தின் ஒரு போலிப்பிரதியாக நாம் உருவாவதை விரும்பவில்லை என்கிறார்்.
1960 இல் இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 86 டாலர்களாகவும் கொரியாவின் ஜிடிபி 94 டாலர்களாகவும் சீனாவின் ஜிடிபி 76 டாலர்களாகவும் இருந்திருக்கிறது. இன்று இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 2300 டாலர். கொரியா- 35000 டாலர்கள். சீனா 12,500 டாலர்கள். கொரியாவும் சீனாவும் எங்கோ போய்விட்டன. (தனிநபர் ஜிடிபி என்பது நாட்டின் ஜிடிபியை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் வருவது). ஆனால் இந்தியாவின் நிலையும் மோசமானது அல்ல. ஜனநாயகம் நிலவும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை. நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். நாம் எதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் பற்றி இப்புத்தகம அழகாக விவரிக்கிறது.
தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பிஎஸ்வி குமாரசாமி. பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்! ஆகவே இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, எதிர்காலம் ஆகியன பற்றி தமிழில் வாசிக்க விரும்புகிறவர்கள் இந்நூலைப் படிக்கலாம். நூலின் கடைசியில் வாசகருடன் நூலாசிரியர் உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் கேள்வி பதில் பகுதி பொருளாதாரம் தாண்டி பல தற்கால அரசியல் கேள்விகளுக்கும் விடையளிக்கிறது.
பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்! இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் குறித்த ஒரு புதிய பார்வை, ரகுராம் ஜி.ராஜன், ரோகித் லாம்பா, தமிழில் பி எஸ் வி குமாரசாமி, வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால் 462003, விலை: ரூ. 599