பரத் கதாநாயகனாக நடித்திருந்த காளிதாஸ் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.பரத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று பரத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த படமாக அமைந்தது.
அந்தப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அறிமுக இயக்குநரான் அவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ்த் திரையுலகுக்குக் கொடுத்த ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இயக்குநர்.
அத்துடன், முறையாக சினிமாவை கற்றுத்தேர்ந்த ஸ்ரீ செந்தில், தனது முதல் படத்தையே கவனிக்கத்தக்க வகையில் இயக்கியிருந்தார்.
அதன்பின்,அவர் நடிகர் விஷாலை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருந்தார்.சில காரணங்களால் அந்தப்படம் நடக்கவில்லை.
இப்போது,அவர் மீண்டும் பரத்தையே நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.இந்தப் படத்தை காளிதாஸ் படத்தின் இரண்டாம்பாகமாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.இரண்டாம் பாகத்தில் இரண்டு நாயகர்கள் இருப்பதுபோல் கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.
அதனால், இப்படத்தில் பரத் மட்டுமின்றி இன்னொரு நாயகனும் நடிக்கவிருக்கிறார்.அவர் அஜய் கார்த்திக்.
டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு கதை திரைக்கதை எழுத, அவரது இணை இயக்குநராகப் பணியாற்றிய, கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ரேவன்.
இந்தப்படத்தில்தான் அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
விரைவில் வெளிவருமென்று எதிர்பார்க்கப்படும் அந்தப்படத்தின் நாயகன் அஜய்கார்த்திக்கும் காளிதாஸ் 2 படத்தில் இருக்கிறார்.
இந்தப்படத்தை,அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன்,மகாராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களை வாங்கி வெளியிட்ட பிரபல விநியோகஸ்தர் ஃபைவ்ஸ்டார் செந்தில் தயாரிக்கிறார்.
படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வருமென்றும் உடனடியாகப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
முதல்படம் வெளிவருமுன்பே இன்னொரு படம் கிடைப்பதும் அது ஏற்கெனவே வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம்பாகம் என்பதும் புதுநாயகன் அஜய்கார்த்திக்குக்குப் பலம்.
மீண்டும் இயக்குநர் ஸ்ரீசெந்தில் உடன் பரத் இணைவது அவர்கள் இருவருக்குமே நல்லது.இப்படத்தின் தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைக்கிறார். அது திரையுலகுக்கு நன்மை.