baala

37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’ ‘அவன் இவன்’ என்று பட்ட காலிலேயே அடிபட்டு, சொந்தமாகவே நடக்க கஷ்டப்பட்ட பாலாவின் ஆறாவது படைப்புபரதேசி’.

ரிலீஸுக்கு முன்பு எப்போதுமே பாலாவின் படங்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமில்லை என்னும் நிலையில், இருதினங்களுக்கு முன்பு, படத்துக்கான ஓப்பனிங்கை உசுப்பேத்தி விடும் சதித்திட்டத்தில் அவர் வெளியிட்டு, எக்காளச் சிரிப்பு சிரித்த முரட்டு அடி ட்ரெயிலர், ’படம் பாக்க வரைலைன்னா உங்களையும் வூடு தேடி வந்து உதைப்பேண்டாஎன்று எச்சரிப்பது போலவே இருந்தது.

அந்த மிரட்டலுக்குப் பணிந்து இன்று, கொடைக்கானல் மலையிலிருந்து, குரங்காட்டம் இறங்கி வந்து, மதுரை மினிப்ரியா தியேட்டரில் மதியம் 2.30 மணி காட்சிக்கே சரணடைந்தேன்.

‘அவன் இவன்’ படத்துக்கு ‘ஹல்லோதமிழ்சினிமாவில் எழுதியிருந்த விமர்சனத்தால் பாலா கடுங்கோபத்துக்கு ஆளாகி, என் உருவ பொம்மையை எரித்த கதையை எல்லாம் கேள்விப்பட்டிருந்ததால், இந்த ‘பரதேசி’ பிரமாதமான படமாக வந்திருக்கவேண்டும். அதற்கு சிறப்பாக விமர்சனம் எழுதி அவரிடம் சில பொற்காசுகளை பரிசாக வெல்லவேண்டும் என்று என் குல தெய்வம் உட்பட நான் வேண்டாத தெய்வமில்லை.

ஆனால் நம் விசயத்தில் தெய்வங்கள், சில சமயங்களில் ஆடுகள். பல சமயங்களில் ஓநாய்கள்.

‘ரெட் டீ’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ‘எரியும் பனிக்காடு’ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலின் தழுவல்தான் இந்தப்பரதேசி என்னும் யூகச்செய்திகளை படத்தின் டைட்டில் கார்டுகள் எந்த விதத்திலும் தெளிவு படுத்தவில்லை. கதை, திரைக்கதை, இயக்கம் என்று பாலாவின் பெயரே வருகிறது. ஒருவேளை முன்ஜென்மத்தில் ராசா அதர்வாவாகப் பிறந்திருந்து குதிகால் நரம்பை அறுக்கக்கொடுத்தவராக இருந்து, அந்த நினைவுகளின் நீட்சியாக பாலாவே இந்தக் கதையை எழுதியிருக்கக்கூடும் என்று ஒரு பிரமாதமான லாஜிக் கண்டுபிடித்து நாம் அது பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது சாலச்சிறந்தது.

சரி, பாலாவின் முன் ஜென்மக் கதைக்கு வருவோம்.

கதை நடக்கும் வருடம் 1939. உச்சி வெய்யில் மண்டையைப்பொழக்கும் ஒரு மத்தியான வேளை. பாலூரோ,சூலூரோ என்ற ஒரு கிராமத்தில் வசிக்கிறார் ராசா என்கிற அதர்வா. பாலாவின் கதாநாயகனாச்சே. கொஞ்சம் மனப்பிசகு, கோணியில் தைக்கப்பட்ட கிழிஞ்ச சட்டை, லூஸ்த்தனம் என்று சேதுநந்தபிதாமகடவுளவனிவனாக வருகிறார். அவரது லூஸ்த்தனத்துக்கு கொஞ்சமும் குறைவைக்காத பொண்ணு வேதிகா அவரை சோறு சாப்பிடவிடாமல் பட்டினி போட்டுக் காதலிக்கிறார். ராசா அதர்வா ஒன்றிரண்டு காட்சிகளில் தண்டோரா போடுவது தவிர்த்து, அந்த ஊர் ஜனங்கள் அனைவரும் என்ன வேலை செய்கிறார்கள் என்று டைரக்டர் சொல்லவில்லை.

இந்நிலையில், அந்த ஊர் ஜனங்களை டீ எஸ்டேட் ஒன்றுக்கு தொழிலாளிகளாக ஏமாற்றி அழைத்துப்போகும் கங்காணி, வெள்ளைக்கார துரைகளின் மனம் நோகாமல் நடக்க இவர்களைப் படாத பாடு படுத்துகிறார். ட்ரெயிலரில் பார்த்து மிரண்ட முரட்டு விளக்குமாத்து அடிகள், விரும்பிய பொண்ணை துரைமார்கள் கற்பழிப்பது, எஸ்டேட்டை விட்டு தப்ப முயன்றால் குதிகால் நரம்பை வெட்டுவது போன்ற மயிர்க்கூச்செரியும் காட்சிகள் சீன் ஒன்றில் துவங்கி எண்ட் கார்டு வரை ஏராளம் உண்டு.

இதுவே வேறு ஒரு இயக்குனரின் படமாக இருந்தால், சிறப்பான அம்சங்கள் என்று சிலாகித்துக்கூறும்படி படத்தில் சில சமாச்சாரங்கள் உண்டுதான். ஆனால் ‘சேதுவில் துவங்கி ‘அவன் இவன்’ வரை பார்த்துச் சலித்த ஷேம்ஷேம் பாலா ஷேம் பார்முலா.

1939-ல் அதர்வாவும்,மற்றவர்களும் பேசிய இதே இழுவைத் தமிழைத்தான் அவர்கள் பேசினார்கள் என்பது உண்மை என்றால், தேயிலைத்தோட்டத்தில் அவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சித்திரவதை செய்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். வேதிக்கா நீ ஒரு வேஸ்டுக்கா. தன்ஷிகா நீ ஒரு தண்டம்க்கா.

தமிழின் பத்து தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில் நாடன் வசனம் எழுதியிருக்கிறார். படம் முழுக்க இடம் பெற்ற தரமான கெட்ட வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் சரக்குக்கு வெறும் ஊறுகாயாக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது. கலெக்டரிடம் கூறி இவர் இனி கோவையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, அதிலும் குறிப்பாக பாலாவாக்கம் செல்லமுடியாதபடி, ஏதாவது சிறப்பு சட்டம், சதித்திட்டம் தீட்டமுடியுமா என்று பார்க்கவேண்டும்.

பாடல்களே தேவைப்படாத ஒரு கதையில் ஒரு ஜீசஸ் குத்துப்பாட்டு உட்பட ஆறு பாடல்களை செருகியிருப்பதை ஒரு வகையில் பாலாவின் சாமர்த்தியம் என்றே சொல்லவேண்டும். ஓலைப்பாயில் எதுவோ என்னவோ செய்ததுபோல், ஓயாமல் வாசிக்கப்பட்ட பின்னணி இசை, சில இடங்களில் காட்சிகளை விட முன்னணியில் இருந்து காதுகளை சேதுகளாக்குகிறது.

செழியனின் ஒளிப்பதிவு சிறப்பு. ஆனால் உலகப்படங்கள் எல்லாம் பார்த்துக்கொழுத்துச் செழித்த செழியன் போன்ற ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு அழகு, வேதிகா மாதிரி செவத்த பொண்ணுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து, இயக்குனர் அழைத்து வரும்போது,’ நாட்டாமை ஃபிகரை மாத்து’ என்று அதை நிராகரிக்கவேண்டும்.

காட்சிகள் அனைத்துமே ஒரே ஒப்பாரி ரகமாக இருப்பதால், ரெண்டு மணி நேரப்பட முடிவில் நமக்கு பெண்டு கழண்டுபோன ஃபீலிங்.

க்ளைமாக்ஸ் காட்சியில் அதர்வா ஒரு பாறைமேல் ஏறி நின்றுகொண்டு,’ ’நியாயமாரே எங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா?’ என்று கதறும்போது, ஏனோ கங்காணி ஸ்தானத்தில் பாலா நிற்பதாக சிந்தனை ஓடி, ரசிகர்கள் அவ்வளவு பேரும் குதிகால் நரம்பு அறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய தொழிலாளர்களாக காட்சி அளிக்க,’ மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரி படம் எடுத்துக்கொல்லாம, ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டக்கூடாதா பாலாமாரே’ என்று கதறி அழத்தோன்றுவது நிஜம்.

’பர்தேசி, பர்தேசி ஜானா நஹி’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.