அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனியின் 2ஆம் பாகம் வெளியாகியிருக்கிறது. முதல் படத்தின் கதை ஒரு சிறிய வீட்டினுள் நடக்கும். இரண்டாம் பாகத்தின் கதை ஒரு சைனீஸ் உணவகத்தினுள் நடக்கிறது.

டெபி (பிரியா பவானி சங்கர்) தனது கணவனை இழந்த துயரில் இருக்கிறார். அவரது துயர் தாங்க முடியாததாகி, அதுவே அவரை ஆட்டிப் படைக்கிறது. தனது வீடு முழுதும் தனது கணவரின் புகைப்படங்களால் நிரம்பியிருக்க, ஆற்றாமை உச்சகட்டத்துக்குச் சென்று, இறந்த கணவரின் பதப்படுத்திய விந்தணுவைப் பயன்படுத்தி, கருவுற நினைக்கிறார் டெபி.

முதல் படத்தில் இறந்துபோன அருள்நிதிக்கு ஓர் இரட்டைச் சகோதரர் (ரகு) இருப்பதாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் முதல் பாகத்தில் காட்டப்பட்ட சபிக்கப்பட்டத் தங்கச் சங்கிலி மீண்டும் திருடப்பட்டு, பேய் மீண்டும் கிளம்புகிறது.

இதனிடையே டெபி, ரகு, ஒரு துறவி ஆகியோர் ஒரு சைனீஸ் உணவகத்தில் சிக்கிக்கொள்ள, அங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.

 அருள் நிதிக்கு இரட்டை வேடம். தனக்கு கொடுத்த வேலையை அருள்நிதி கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால் படத்தின் முழுக் கனமும் பிரியா பவானியின் மேலேயே விழுந்திருக்கிறது. அவருடைய பாத்திரம் சோகங்கள் நிறைந்ததாகவும் அத்துடன் ஏக்கமும் இனம் புரியாத ஒன்றைத் தேடும் மனதும்  உள்ளதாக வெளிப்பட்டிருக்கிறது. 

கண்ணாடியிலிருந்து பேய் வருவது, வௌவால் கூட்டம், நரகத்திற்குச் செல்வது போன்ற வழக்கமான பேய்த் தன்மைகள் இருந்தாலும் வலுவான திரைக்கதையின் மூலம் ஒரு தரமான பேய்க்கதை த்ரில்லரை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அஜய். விஷூவல் எபக்ட்களின் போதாமை மற்றும் சில ஊகிக்கக்கூடிய திருப்பங்கள், வலு சேர்க்காத இசை போன்ற விஷயங்கள் படத்திற்கு தொய்வைத் தந்தாலும் டிமான்ட்டி-2 ஒரு ரசிக்கக்கூடிய த்ரில்லர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.