மலையாளத் திரையுலகில் 19வது வயதில் அறிமுகமாகி விடுவிடுவென்று பல மொழிகளிலும் பிரபலமாகி, 36வது வயதிலேயே இறந்தாலும் இறுதிவரைக்கும் கவர்ச்சிக் கன்னியாகவே தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்ட சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் டர்ட்டி பிக்சர். இதில் வித்யா பாலன் சில்க் ஸ்மீதாவாக நடித்திருந்தார்.
ஆண்கள் சில்க் ஸ்மீதாவை எப்படியெல்லாம் பார்க்க விரும்பினார்கள் என்பதைக் காட்டிய படமாக இருந்தது டர்ட்டி பிக்சர். நல்ல வசூலும் அத்தோடு நல்ல பெயரும்(?) அப்படத்திற்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அது மாதிரியான படங்கள் தமிழில் சோனியா அகர்வால் நடித்து ஒன்றும் , இன்னொரு பிரபல நடிகை நடித்து ஒன்றும் வெளியாகின.
நக்கீரன், ஜூ.விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் அவ்வப்போது இது போன்ற நடிகைகளில் ஒருவரின் ‘என் வாழ்க்கை டைரி’ என்று ஒன்றை எடுத்து விடுவார்கள். சர்க்குலேஷன் பிய்த்துக் கொண்டு எகிறும்.
தற்போது அந்த வரிசையில் மீண்டும் ஒரு மலையாளப் படம் வந்திருக்கிறது. படத்தின் பெயர் க்ளைமாக்ஸ். இது தமிழிலும் டப் செய்யப்பட்டு நடிகையின் டைரி என்கிற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மீதாவாக நடிக்க இருப்பவர் கவர்ச்சிப் புயல் சனாகான் தான். அரவிந்த், சுரேஷ் கிருஷ்ணா, கவின் போன்ற பலர் நடித்திருக்கும் இப்படத்தை மலையாள இயக்குனர் அனில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பவர் சில்க் ஸ்மீதாவை முதன் முதலில் மலையாளப்படத்தில் அறிமுகப் படுத்திய ஈஸ்ட்மென் ஆன்டனி. ஒளிப்பதிவு சஜித் மேனன். வசனம் ஸ்ரீஜாரவி.
டர்ட்டி பிக்சர் போல் கமர்ஷியலாக இல்லாமல் இப்படத்தில் சில்க்கின் நிஜவாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள், காதல், சோகங்கள் பின் அவரது தற்கொலை என்று அனைத்துமே வருகின்றனவாம்.
சில்க் ஸ்மீதாவைப் பற்றிப் படங்கள் எப்படி வந்தாலும் அவை யதார்த்தத்திலிருந்து விலகியே தான் இருக்கும். அவரது இருண்ட வாழ்க்கையை ஒரு டாகுமெண்டரி படத்தால் மட்டுமே யதார்த்தமாகப் பதிவு செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
பெண்கள் – கற்பு என்கிற சுமார் 20 வருடங்களுக்கு முந்தைய தலைமுறையின் வாழ்க்கை மதிப்பீடுகளின் படி அன்றைய சில்க்கின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக் குரியது. ஆனால் இன்றைய கால யதார்த்தத்தில் பார்த்தால் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்கிற வெறி வெளிப்படையாக எல்லா தளங்களிலும் தோன்றும் இக்காலத்தில் கற்பு என்பது ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வை’க்கப்படுவதற்குப் பதிலாக ஆணும், பெண்ணும் பலருடன் ‘பழகி’யிருப்பது சகஜம் என்பதே புதிய யதார்த்தமாக தோன்றியிருக்கும் இச்சூழலில், இந்திய சினிமாவில் ஆயிரம் சில்க்குகள் சர்வ சாதாரணமாக இன்று ‘புரொஃபஷனலாக’ உலா வருகிறார்கள் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது.
எனவே இது போல் ஆயிரம் படங்கள் எடுக்கப்பட்டாலும் (என் போன்ற) சராசரி ரசிகமகாஜனங்களைப் பொறுத்தவரை சில்க் ஸ்மீதா ஆண்களின் காமதேவதைகளில் இப்போதும் முதன்மையானவள்.