பாக்யராஜின் பழைய திரைப்படத்தில் ஹிந்தி வாத்தியாரிடம் ஹிந்தி கற்றுக்கொள்ளும்போது ரஹ தாத்தா என்பதை ரகு தாத்தா என்று சொல்வார். அதையே தலைப்பாக கொண்டிருக்கிறது படம்.

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரகுதாத்தா.

மொத்தப் படமும் நம்மை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.திருமணமே வேண்டாமென நினைக்கும் கீர்த்திசுரேஷ் ஒரு அரதப் பழசான காரணத்துக்காக திருமணம் செய்ய சம்மதம் சொல்கிறார். மணமகனின் உண்மை நிலை அறிந்த பின் திருமணத்தை நிறுத்த முயலும் முயற்சிகளில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ரவீந்திரவிஜய், பெண்ணியம் பேசும் ஆண் வேடம் ஏற்றிருக்கிறார்.ஆனால் உண்மையில் அவர் ஓர் ஆணாதிக்கவாதி என்று காட்டி கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அதற்குத் தக்க நடித்து அவரும் கவனம் பெறுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்,தேவதர்ஷினி,ஜெயக்குமார்,இஸ்மத்பானு ஆகியோரிடமிருந்து இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போகின்றனர்.ஆனால் தங்களுக்குக் கொடுத்த வேலையை அவர்கள் சரியாகச் செய்திருக்கின்றனர்.

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இந்தப்படத்தின் கதை 1960 களில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அதற்கேற்ற ஒளியமைப்பு செய்ய வேண்டுமென்றெல்லாம் மெனக்கெடாமல் காட்சிகள் நிறைவாகத் தெரியவேண்டுமென வேலை செய்திருக்கிறார்.

ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை.பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதலாகவே வேலை செய்திருக்கிறார்.அது படத்துக்கு சில இடங்களில் ஆதரவாகவும் பல இடங்களில் பாதகமாகவும் அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், இயக்குநரின் எண்ணத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் சுமன்குமார்.இந்தி எதிர்ப்பன்று இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்பதை மேம்போக்காகச் சொல்லிவிட்டு பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்.இயல்பான கதையோட்டத்தோடு நகைச்சுவை கலந்திருக்கிறார்.அது காட்சிகளில் மட்டுமின்றி கதையிலும் எதிரொலிக்கிறது.

பேரறிஞர் அண்ணா, எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோரையெல்லாம் மேற்கோள் காட்டி தமிழ்நாட்டு இரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்கிற நடைமுறை இறுக்கமாகக் கடைபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் இப்படி ஒரு பெண் பாத்திரத்தை வடிவமைத்து தன்னைப் பெண்ணியவாதியாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அவரும் பல இடங்களில் அவர் படைத்த தமிழ்ச்செல்வன் கதாபாத்திரம் போலவே இருக்கிறார் என்பது அடிப்படை பலவீனம்.

அவற்றை மறைத்து அங்கங்கே சிரிக்க வைத்திருப்பது பலம்.

– வெற்றி

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.