முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில்.
ஓரிரு கொலைகள், காவல்துறை விசாரணை,ஒரே இரவுக்குள் நடக்கும் கதை ஆகிய அம்சங்களைக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்திலிருந்தே சதீஷின் கதாபாத்திரம் மாறுபட்டதாக அமைந்திருக்கிறது.காவல்நிலையத்தில் காத்திருக்கும் காட்சிகளில் பதட்டம், பயம், தவிப்பு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி என்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்.
காவல்துறையினராக நடித்திருக்கும் பாவல்நவகீதன், அஜய்ராஜ் ஆகியோருக்கு வலிமையான கதாபாத்திரங்கள்.அவற்றைத் திறம்படச் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
ரித்திகா,வெண்பா,வித்யா பிரதீப்,பவா செல்லதுரை, மைம்கோபி ஆகியோரை திரைக்கதையின் வேகத்துக்குப் பலனளிக்கும் வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அவர்களும் அந்தப் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசையில் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒரேஇரவு, குறிப்பிட்ட எல்லைக்குள் நடக்கும் கதை என்று குறுகிய எல்லைக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்திலும் அவற்றில் வேறுபாடுகளைக் காட்டி உறுத்தாமல் ஒளிப்பதிவு செய்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.
மார்ட்டின் டைடஸ்.ஏ படத்தொகுப்பு செய்திருக்கிறார்.தம்முடைய உழைப்பில்தான் திரைக்கதையில் இருக்கிற வேகம் திரையில் வரவேண்டும் என்று உணர்ந்து உழைத்திருக்கிறார்.
சதீஷ் வந்தாலே சிரிக்க வைப்பார் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பொய்யாக்கி எந்த இடத்திலும் அவரைப் பார்த்துச் சிரித்துவிடாதபடி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் சாச்சி.
மூன்று வெவ்வேறு கதைகள்.அவை தனித்தனியாகப் பயணித்து இறுதியில் ஒரு புள்ளியில் இணையும் என்கிற பழகிய திரைக்கதை உத்தி என்றாலும், அடுத்து என்ன நடக்கும்? என்று எண்ணும்படியாக காட்சிகளை வைத்து சதீஷுக்கும் நற்பெயர் பெற்றுத்தந்து தானும் நற்பெயர் பெற்றிருக்கிறார்.
– இளையவன்