இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன.திரையரங்க முன்பதிவுகள் முழுவீச்சில் தொடங்கவில்லை.ஏனென விசாரித்தால் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் சொல்லப்படுகின்றன.
அவை என்னென்ன?
முதலாவது,இப்படத்துக்குத் தமிழ்நாட்டில் நல்ல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.ஏனெனில் தீபாவளி நாளில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஆகிய இரு படங்களும் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனவாம்.இதனால் அந்தப் படங்களை மாற்றிவிட்டு கங்குவா படத்தைத் திரையிட திரையரங்குக்காரர்கள் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக, கங்குவா பட விநியோகஸ்தர் திரையரங்குக்காரர்களிடம் சொல்லும் டெர்ம்ஸ் எனும் பங்கீட்டுக் கணக்கு ஏற்க முடியாததாக இருக்கிறதாம்.இந்தப்படத்துக்கு 70 விழுக்காடு மற்றும் கண்ணாடிக்காக ஐந்து விழுக்காடு ஆக மொத்தம் 75 விழுக்காடு பங்கு கேட்கிறார்களாம்.இது திரையரங்குக்காரர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் கங்குவா படத்தைத் திரையிட முன்வரவில்லை என்கிறார்கள்.
மூன்றாவதாக, இதுவரை வெளியான கங்குவா படக்காட்சிகள் ஈர்ப்புடையதாக இல்லை என்பது திரையரங்குக்காரர்களின் கருத்தாக இருக்கிறது.அவர்களின் இந்தக் கருத்தின் எதிரொலியாகத்தான் நேற்று இன்னொரு முன்னோட்டம் வெளியிட்டார்கள் என்றும் அதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இம்மூன்று முக்கிய காரணங்களோடு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.பொதுவாக ஒரு படம் வெற்றிகரமாக ஓடி பெரிய வசூலைப் பெற்றிருக்கும் நிலையில் உடனடியாக வெளியாகும் இன்னொரு படம் வெற்றியை ஈட்டாது என்பது திரையரங்குக்காரர்களின் நம்பிக்கையாம்.அதன்படி இப்போதுதான் அமரன் பெரிய வசூலைப் பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தப்படத்துக்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்பது அவர்களுடைய எண்ணம்.
இந்தக் காரணங்களால்தான் திரையரங்கினர் இப்படத்தைத் திரையிட முன்வரவில்லை என்றும் அதனால்தான் முன்பதிவு முழுவீச்சில் தொடங்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் காரண,காரியங்கள் அனைத்தையும் பொய்யாக்கி கங்குவா படம் வெற்றியடையும் என்றும் இதைச் சும்மா பேச்சுக்காகச் சொல்லவில்லை இதுவரை படம் பார்த்தவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்கிறோம் என்றும் படக்குழுவினர் தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள்.
இவற்றில் எது பலிக்கும் என்பது மூன்று நாட்களில் தெரிந்துவிடும்.